'ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு' - CUET நுழைவுத் தேர்வு விவாதம் ஆவதன் பின்னணி

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு பொதுவான நுழைவுத் தேர்வு (கியூட்) நடத்தப்படும் என இந்திய கல்வித் துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது. அதுவே இப்போது விவாதத்தைத் தூண்டியிருக்கிறது.

இந்திய கல்வித்துறையின் அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் ஆளும் திமுக உள்பட மாநில கட்சிகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேர இந்த ஆண்டு சியுஇடி (நுழைவுத் தேர்வு) கட்டாயமாகிறது.

முதுகலை படிப்புகளுக்கான சியுஇடி தேர்வு நடத்தப்பட்டாலும் அவை இந்த ஆண்டு கட்டாயமாக்கப்படவில்லை. அதே சமயம், சியுஇடி இளங்கலை நுழைவுத் தேர்வுகள் ஆறு கட்டங்களாக நடைபெற்றன.

இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த வாரம் தான் நடந்து முடிந்துள்ளன. முதுகலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இந்த தேர்வுகளை நடத்துகிறது.

இந்த நிலையில் நுழைவுத் தேர்வுகளை தடை செய்ய வேண்டும் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், 'கியூட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 60% மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதியுள்ளதாக என்.டி.ஏ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கியூட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியதில் இருந்து மாணவர்கள் என்.டி.ஏ தேர்வு நடத்தும் முறை மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர்,' என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மத்திய பல்கலைக்கழகங்கள், பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பல்வேறு அளவிலான கட்-ஆப் மதிப்பெண்களை நிர்ணயிக்கின்றன.

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில பாட திட்டங்கள் என ஒவ்வொன்றுக்கும் மதிப்பிடும் முறைகள் வெவ்வேறாக உள்ளன. இதனால் மாணவர்களுக்கு சேர்க்கையில் சிக்கலாக உள்ளன.

அந்த சிக்கலை களைவதற்குத் தான் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

மாநில பாட திட்டமா? என்சிஇஆர்டி பாட திட்டமா?

ஆனால் இந்த நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி பாட திட்டங்களின் அடிப்படையிலே இருக்கின்றன. இதையும் ஒரு காரணமாக வலியுறுத்தி தான் சியுஇடி நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் , "உயர்கல்வியை மையப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக தான் சியுஇடி நுழைவுத் தேர்வு உள்ளது. நாடு முழுவதும் உள்ள பல தரப்பட்ட கல்வி முறைகளை ஓரம் கட்டி பயிற்சி மையங்களை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கும்.

என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் எந்தவொரு நுழைவுத் தேர்வும் வெவ்வேறு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு சம வாய்ப்பை வழங்காது. பெரும்பாலான மாநிலங்களில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவர்கள் மாநில பாடத்திட்டத்தில் தான் படிக்கின்றனர், இந்த மாணவர்கள் விளிம்பு நிலை பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்," என்று தெரிவித்திருந்தார்.

ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு?

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் சந்திரா ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு கொண்டு வரும் எண்ணத்தில் மத்திய அரசு உள்ளதாக தெரிவித்திருந்தார்.

சியுஇடி, நீட், ஜேஇஇ போன்ற பல நுழைவுத் தேர்வுகளை ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கியூட் தேர்வு தொடர்பாக கல்வியாளர் ஜே.பி.காந்தி பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, "நாடு தழுவிய இவ்வளவு நுழைவு தேர்வினை நடத்த முடியுமா என்பதை தாண்டி நடத்த வேண்டுமா என்கிற கேள்வி எழுமானால் 'வேண்டாம்' என்பது தான் என்னுடைய பதில். முதலில் இந்த அளவில் தேர்வு நடத்துவதற்கான கட்டமைப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் இது போன்ற அகில இந்திய தேர்வுகளாள் குளறுபடிகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த வாரம் நடந்து முடிந்த சியுஇடி இளங்கலை நுழைவுத் தேர்வுகளில், விண்ணப்பித்த மாணவர்களில் 60% பேர் தான் தேர்வு எழுதியுள்ளதாக என்.டி.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்வு தேதி ஒதுக்கீடு செய்வதில் குழப்பம், தேர்வு மையம் அமைப்பதில் குழப்பம், தொழில்நுட்ப கோளாறு என இதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேலும் பயிற்சி பெற்றால் தான் நுழைவுத் தேர்வு எழுத முடியும் என்கிற சூழலையும் இது உருவாக்குகிறது. இதனால் பயிற்சி பெற வசதியில்லாத கிராமப்புற, பின்தங்கிய மாணவர்களுக்கு அது பாதகமாக அமைகிறது.

பள்ளி கல்வி என்பதையே இத்தகைய குளறுபடியான நுழைவுத் தேர்வுகள் மதிப்பிழக்கச் செய்து விடுகிறது. நுழைவுத் தேர்வு என்பதே தேவையில்லை. அகில இந்திய கோட்டாவுக்கு வேண்டுமென்றால் மட்டும் நுழைவுத் தேர்வு வைத்துக் கொள்ளலாம். பல தரப்பட்ட கல்வி முறை உள்ள மாநிலங்கள், பல்வேறு சேர்க்கை முறை பின்பற்றும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில் ஒரே நுழைவுத் தேர்வு என்பது குழப்பத்தை தான் விளைவிக்கும்," என்றார்.

இது தொடர்பாக முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ``தமிழ்நாட்டில் முன்னர் improvement system என்கிற நடைமுறை இருந்தது. தற்போது 12-ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறு தேர்வு எழுதுவார்கள். ஆனால் Improvement system நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் தேர்ச்சி பெற்ற மாணவரும் மதிப்பெண் குறைவாக உள்ளது என கருதினால் improvement தேர்வுகள் எழுதி மதிப்பெண்களை அதிகரித்துக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது," என்கிறார்.

இது பயிற்சிக்கு செலவு செய்த, மீண்டும் தேர்வு எழுத வாய்ப்புள்ள மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருந்தது. இந்த முறை தமிழக அரசால் பின்னர் ஒழிக்கப்பட்டது.

தற்போது நீட் தேர்வுக்குப் பிறகு பல முறை தேர்வு எழுதுபவர்கள் (ரிப்பீட்டர்ஸ்) தான் மருத்துவ படிப்புகளில் சேர முடியும் என்கிற நிலை உள்ளது. இதே நிலை தமிழ்நாட்டில் முன்னர் இருந்து பிறகு ஒழிக்கப்பட்டது. எல்லா மாணவர்களாலும் பயிற்சி எடுத்து பல முறை தேர்வு எழுத முடியாது.

தேர்வு கட்டணம் கூட செலுத்த முடியாத பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களும் இருக்கின்றனர். மேலும் ஒரு மாணவர் பல முறை முயன்று தேர்ச்சி பெற்று வருகிற போது அந்த பேட்ச்சில் முதல் முறை வருபவர்களுக்கு அது பாதகமாக அமையும்.

"நுழைவுத் தேர்வு நடைமுறையே பாரபட்சமானது, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும் என்பதால் தான் அதை தமிழ்நாட்டில் ஒழித்தோம். தற்போது மீண்டும் அகில இந்திய நுழைவுத் தேர்வு, ஒரே நுழைவுத் தேர்வு என அமல்படுத்துவது தனியார் பயிற்சி நிறுவனங்கள் செழிக்கவே வழிவகுக்கும். ஏற்கெனவே நீட் பயிற்சி மையங்கள் ஒரு வணிக சந்தையாகவே உருவெடுத்து விட்டன. தற்போது இதர படிப்புகளுக்கும் இது போன்றதொரு வணிக சந்தை உருவாக்கக்கூடும்," என்கிறார் துணை வேந்தர் ராஜேந்திரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: