You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீட் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக புகார் - தேசிய தேர்வு முகமை விளக்கம்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்தி சேவைக்காக
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையம் ஒன்றில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்னதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெற்றோர் ஒருவர் புகார் செய்த பிறகு இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியே வந்துள்ளது. தேர்வு மையத்தில் நடந்த சம்பவத்தை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய மாணவியின் புகாரை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
"தான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டதாக அவள் தெரிவித்தாள்" என்று பிபிசியிடம் பேசிய மாணவியின் தந்தை கோபகுமார் சூராநத் தெரிவித்தார்.
தனது புகாரில் , தனது மகளிடம் உள்ளாடையை கழற்ற வேண்டும் என்று கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"தேசிய தேர்வு முகமையில் இதுகுறித்து எதுவும் குறிப்பிடாத நிலையில் எனது மகளிடம் உள்ளாடையை கழற்ற கோரியுள்ளனர். அவள் அதற்கு மறுத்தபோது, பரீட்சை எழுத அனுமதிக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்," என்று அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு அறை முழுவதும் உள்ளாடைகள் கொண்டு செல்லப்பட்டன என எனது மகள் தெரிவித்தாள். பலர் அழுது கொண்டிருந்தனர். நீட் தேர்வு என்பது முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கிறது. அப்படியிருக்க இம்மாதிரியான கடுமையான நடத்தைகளின் மூலம் மாணவர்கள் மன ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். பலர் தங்கள் உள்ளாடைகளில் உள்ள ஊக்குகளை அகற்றி அதை கட்டிக் கொண்டனர்," என அந்த புகாரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் உறவினரான அஜித் குமார் பிபிசியிடம் பேசுகையில், "முதலில் அவர்கள் உள்ளாடையை கழற்றும்படி கூறியுள்ளனர். பின் அவள் அழத் தொடங்கிவிட்டாள். அதன்பின் அவளை ஒரு அறைக்கு கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு மாணவ மாணவிகள் கூடி இருக்கும்போது இவ்வாறு கூற வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.
"நாங்கள் மாணவியின் கூற்றை பதிவு செய்து கொண்டோம். சிறிது நேரத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வோம்," என கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிற மாணவிகளின் பெற்றோரும் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவிக்கவுள்ளதாக கோபகுமார் தெரிவித்தார்.
"இது ஒரு அவமரியாதை செயல் என்பதால் இதுகுறித்து மத்திய அரசிற்கும், தேசிய சோதனை முகமைக்கும் கடிதம் எழுதவிருப்பதாக கேரளாவின் சமூக நலத்துறை அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்துள்ளார். இம்மாதிரியான செயல்கள் மாணவர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இம்மாதிரியான செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
இது முதல்முறை அல்ல
நீட் தேர்வின் போது நடத்தப்படும் சோதனைகள் சர்ச்சையாவது இது முதல் முறையல்ல. 2017ஆம் ஆண்டு கன்னூரில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றதாக மாணவி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் கருப்பு கால்சட்டை அணிந்திருந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
அந்த ஞாயிற்றுக் கிழமையில் அந்த மாணவியும் அவரின் தாயும் சில கிமீ தூரம் நடந்து புதிய கால்சட்டை ஒன்றை வாங்கியுள்ளனர். அதன்பின் தேர்வு எழுத உள்ளே சென்றபோது, மெட்டல் டிடக்டர் சோதனையில் சத்தம் வந்தது. பின் அவரின் உள்ளாடையில் உள்ள ஊக்கால் அந்த சத்தம் வந்துள்ளது. எனவே அவர் தனது தாயிடம் அதை கழற்றி கொடுத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டது
அதற்கு அடுத்த வருடம், பாலக்காட்டில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தேர்வு முகமையின் மறுப்பு
தேசிய தேர்வு முகமை இந்த புகார் குறித்து மறுப்பு தெரிவித்துள்ளது.
தேர்வு நடைபெற்ற மையத்தில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என மைய கண்காணிப்பாளர், சுயாதீன பார்வையாளர், நகர ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மாணவி தேர்வு எழுதியுள்ளார்.
தேர்வு சமயத்திலோ அல்லது அது முடிந்த பிறகோ இது மாதிரியான எந்த புகாரும் வரவில்லை. தேசிய தேர்வு முகமைக்கும் இதுபோன்ற எந்த மின்னஞ்சலோ அல்லது புகாரோ வரவில்லை.
மாணவியின் பெற்றோர் கூறுவது போன்ற எந்த நடவடிக்கையும் நீட் தேர்வுக்கான ஆடைக் கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்