You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷவர்மா ரெய்டு ஒப்புக்கு நடந்ததா? - "பறிமுதல் 712 கிலோ, அபராதம் ரூ. 41 ஆயிரம் மட்டுமே" - ஆர்டிஐ உண்மைகள்
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழகம் முழுவதும் நடைபெற்ற கெட்டுப்போன இறைச்சி தொடர்பான உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் திடீர் சோதனையில் மூன்று வழக்குகள் மட்டுமே பதிவானதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட பதிலில் தெரிய வந்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த மே மாதம் 16 பள்ளி வயது மாணவி ஒருவர், தனியார் உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்ததாக சர்ச்சை எழுந்தது. அந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், கெட்டுப் போய் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியில் செய்யப்பட்ட இந்த ஷவர்மாவால் பலரும் மருத்துவமனையில் அப்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு தாமாக முன்வந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளைக் கொண்டு கெட்டுப்போன இறைச்சி எங்கேனும் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய மாநில அளவில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடத்த நடவடிக்கை எடுத்தது.
குறிப்பாக, ஷவர்மாவிற்கு உபயோகப்படுத்தப்படும் கோழி இறைச்சியின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் சந்தேகம்படும் படி இருந்த இறைச்சிகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்ததுடன் சம்பந்தப்பட்ட உணவகங்களுக்கும் அபராதம் விதித்தனர். பல இடங்களில் விதிகளை மீறி இயங்கிய உணவகங்களுக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சி மாதிரிகளை அங்கீகாரம் பெற்ற அரசு ஆய்வக கூடத்துக்கு அனுப்ப சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தகவல் உரிமை செயல்பாட்டாளரான காசிமாயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற உணவு பாதுகாப்புத்துறையின் திடீர் சோதனை குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர் பெற்ற தகவல் குறித்து பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:
உணவங்களில் கெட்டுப்போன கோழி இறைச்சிகளால் தயாரிக்கப்பட்ட ஷவர்மாவால் உயிரிழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஷவர்மா சோதனையில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேறு எந்த மாவட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற இந்த ஷவர்மா சோதனையில் மொத்தமே 8 மாவட்டங்களில் 41 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபரதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஷவர்மா விற்பனை உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சோதனை குறித்த தகவலை சென்னை, கோயமுத்தூர், தூத்துக்குடி, விருதுநகர், அரியலூர்,கடலூர்,திருவாரூர்,வேலூர், புதுக்கோட்டை,தேனி, திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம் என 13 மாவட்டங்களைச் சார்ந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தரவில்லை.
குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதற்கான எந்த ஒரு பதிவும் இல்லை என்று பதில் அளித்து இருக்கிறார்கள்.
தமிழக முழுவதும் நடந்த சோதனையின் மூலமாக 712 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிடும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அதிகபட்சமாக திருச்சியில் மட்டும் 181 கிலோ பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், வெறும் மூன்று கடைகள் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்து செய்திருக்கிறார்கள். மேற்கண்ட கடைகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கவில்லை.
அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் 135 கிலோ, நீலகிரி பகுதியில் 110 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு உணவகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சிகளின் மாதிரிகளை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்காமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பலர் இருந்திருக்கிறார்கள் என்கிறார் காசிமாயன்.
ஓட்டல் உரிமையாளர் சங்கம் விளக்கம்
உணவகங்களில் உள்ள குளிரூட்டி பெட்டியில் இருக்கும் இறைச்சிகளை நுகர்ந்து பார்த்து இது கெட்டுப் போய்விட்டது என யாராலும் ஒரு முடிவுக்கு வர முடியாது. முறையாக அதை ஆய்வுக்கு அனுப்பிய பிறகு தரப்படும் ஆய்வு அறிக்கை அடிப்படையிலேயே 'இறைச்சி கெட்டுப் போனது' என்பதை உறுதியாக கூற முடியும். அவ்வாறு பரிசோதனை மேற்கொண்டதில் பெரும்பான்மை கடைகளில் இறைச்சிகள் கெட்டுப் போகவில்லை என அறிக்கை வந்துள்ளதாக தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கட் சுப்பு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
உணவகங்களில் பணிக்கு வரும் பணியாளர்கள் பெரும்பாலும் அதே உணவகத்தில் தான் உணவு உட்கொள்கிறார்கள் அவ்வாறு இருக்க கெட்டுப் போன இறைச்சிகளை அவர்கள் எவ்வாறு மக்களுக்கு பரிமாறுவார்கள். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி இறைச்சி மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பிய பிறகு அவருடைய பணி முடிந்து விட்டது. ஆய்வறிக்கையில் தவறு இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வருவாய்த்துறை மட்டுமே இருக்கிறது.
"மாதத்திற்கு ஒரு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆறு உணவு வகை மாதிரிகளை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் சுமார் 250க்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை சார்ந்த அதிகாரிகள் பணிபுரிகிறார்கள். அனைவரும் உணவு மாதிரிகளை அனுப்பி வைக்கும் பொழுது தவறு எங்கே நிகழும்," என்கிறார் வெங்கடசுப்பு.
சென்னையில் என்ன நடந்தது?
சென்னையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் பல்வேறு உணவகங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வழக்குகள் பதிவு செய்ததோடு கெட்டுப்போன இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்கிறார் சென்னை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார்.
வெட்டப்பட்ட இறைச்சியை குளிரூட்டி பெட்டியில் -16 டிகிரியில் வைக்க வேண்டும். அதேபோல் இறைச்சி வெட்டப்பட்ட தேதி மற்றும் எத்தனை நாட்கள் உபயோகப்படுத்தப்பட வேண்டும் என்ற விவரங்கள் அதில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலான உணவகங்களில் இந்த முறை பின்பற்றப்படுவதில்லை அதே போல் பல்வேறு உணவகங்களில் இறைச்சியை பேக்கிங் செய்யாமல் அதன் மீது ஐஸ் கட்டிகளை கொட்டி வைத்திருக்கிறார்கள்.
"இவ்வாறு கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்த அன்றே ப்ளீச்சிங் பவுடர் போட்டு உணவக உரிமையாளர் முன்பே அழித்து விடுவோம். சந்தேகம் எழும் உணவகங்களில் இருக்கக்கூடிய இறைச்சி மாதிரிகளை முறையாக சேகரித்து அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைப்போம்," என்றார் சதீஷ்குமார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்