You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விநாயகர் சதுர்த்தி: இறைச்சி கடைகளுக்கு போலீஸ் ஆய்வாளர் போட்ட உத்தரவு திடீர் வாபஸ் ஏன்?
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்காக சங்கரமடம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகள் மற்றும் பிரியாணி கடைகளை மூட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் போலீஸ் நிலைய ஆய்வாளர் பிறப்பித்த உத்தரவு சர்ச்சையான நிலையில், அது உடனடியாக திரும்பப் பெறப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. என்ன நடந்தது?
காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட செங்கழுநீரோடை வீதி, சங்கரமடம் ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உள்ளது.
இந்த நிலையில், செப்டம்பர் 2, 4 ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்க ஊர்வலகமாக செல்லப்படும் என்பதால் செங்கழுநீரோடை வீதி மற்றும் சங்கர மடம் அருகே உள்ள கடைகள் மற்றும் பிரியாணி கடைகளை மேற்கண்ட தினங்களில் எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டி மேற்கண்ட இரு தினங்களுக்கு மூடி விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காஞ்சிபுரம் காவல்துறை சார்பாக சிவகாஞ்சி காவல் நிலைய வரம்புக்கு உள்பட்ட வியாபாரிகளுக்கு ஆணை நகல் வழங்கப்பட்டது.
இந்த ஆணை நகல் சுற்றறிக்கையாக உள்ளூர் வியாபாரிகளை வரவழைத்து அளிக்கப்பட்டது. அதை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததால் இந்த விவகாரம் சர்ச்சையானது. பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்ட இந்த ஆணையை பதிவிட்டு அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பகிர்ந்தனர்.
இந்த நிலையில், மேலிட அனுமதியின்றி இந்த ஆணையை பிறப்பித்து அதை சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் தன்னிச்சையாக வழங்கி உள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் உள்ளூர் போலீஸ் நிலைய ஆய்வாளர் வியாபாரிகளிடம் நடத்திய சந்திப்பு தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் ஜாஃபரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
அப்போது அவர், "சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி இறைச்சி கடை மற்றும் அசைவ ஹோட்டல் நடத்தி வரும் உரிமையாளர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. ஆய்வாளர் பிறப்பித்த ஆணையின் நகல் அவர்களிடம் வழங்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் கடந்த ஆண்டு என்ன நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நடைமுறைதான் இந்த ஆண்டு பின்பற்றப்பட வேண்டும் என்று வியாபாரிகள் கூறினர். ஆய்வாளரின் வேண்டுகோளை வியாபாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து வியாபாரிடம் கொடுக்கப்பட்ட ஆணை அப்போதை திரும்பப் பெறப்பட்டது," என்று கூறினார்.
போலீஸ் தரப்பு விளக்கம்
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, "மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமலேயே ஆய்வாளர் தன்னிச்சையாக சுற்றறிக்கையை வியாபாரிகளிடம் வழங்கி உள்ளார். முந்தைய ஆண்டைப் போலவே இம்முறையும் விநாயகர் சதுர்த்தி ஊர்வல நாளில் இறைச்சிக்கடைகள் மற்றும் அசைவ ஹோட்டல்கள் செயல்பட எந்த தடையும் இல்லை," என்று தெரிவிக்கப்பட்டது.
இத்தகைய சுற்றறிக்கை மாவட்ட காவல்துறை சார்பில் வழங்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதையடுத்து, இறைச்சி கடைகளை மூட கோரிக்கை ஏதும் விடுத்தீர்களா என்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் உத்தேசிக்கப்பட்ட பகுதியில் உள்ள சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயரிடம் கேட்டோம். "காவல்துறையிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. சுற்றறிக்கை முடிவுகள் அனைத்துமே காவல்துறை சம்பந்தப்பட்டது. அதற்கும் சங்கர மடத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை," என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்