You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆளுநர் ரவி ஜி.யு. போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பு பற்றி விமர்சனம் - மீண்டும் சர்ச்சை
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கிறிஸ்துவ மத போதகர் ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் பற்றிய தனது பார்வையாக வெளியிட்டுள்ள விமர்சனம் பொதுவெளியில் சர்ச்சையாகியிருக்கிறது.
டெல்லியில் ஏழு பள்ளிகளை நிர்வகித்து வரும் டெல்லி தமிழ் கல்விக் கழகம் 1923ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு நூற்றாண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதையொட்டி அதன் லோதி சாலை பள்ளியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் திருக்குறள் தொடர்பாக சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதன் விவரம்:
திருக்குறளின் ஒவ்வொரு குறளிலும் கோட்பாடு, நடத்தை, நெறிகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஆனால், திருக்குறள் இவற்றை விட மிக, மிகப்பெரியது. அது தர்ம வேதத்தை உள்ளடக்கியது. திருக்குறளில் முதலாவது குறளே ஆதிபகவன் பற்றியது.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்று ஒரு மாணவர் படிக்கிறார். அதில் தொடர்ச்சியாக வரும் 10 குறள்களிலும் அடிப்படையாக இருப்பவை 'அந்த ஆதிபகவன் மீதான பக்தியை' பற்றியது. ஆதிபகவன் என்ற தமிழ் சொல்லை மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, கன்னடம், அசாமீஸ் என எல்லா இந்திய மொழிகளிலும் உணரலாம். அதைச் சொல்லும்போதே, ஆதி பகவன் என்பது யார் எனத் தெரிந்து விடும். ரிக் வேதத்திலும் ஆரம்பத்தில் ஆதிபகவன் என்றே தொடங்குகிறது. அந்த ஆதிபகவன்தான் ஆரம்பத்தில் இந்த பிரபஞ்சத்தை படைத்தார். பிறகு இந்த புவியைப் படைத்து அதன் எல்லாவற்றிலும் நிலைத்திருக்கிறார்.
இதைத்தான் திருவள்ளுவர் சாமானிய மனிதனுக்கும் புரியும் வகையில் தமது குறளில் குறிப்பிட்டுள்ளார். நமது மொழிக்கு அடிநாதமாக இருப்பது எழுத்துக்கள். அந்த எழுத்துக்கள் இல்லையென்றால் நம்மால் எழுத முடியாது, படிக்க முடியாது. எந்தவொரு வார்த்தையையும் பேச முடியாது. அந்த எழுத்துக்கள் தான் நமது எழுத்துக்கும் பேச்சுக்கும் அடிப்படை. அதுபோல ஆதிபகவன் தான் எல்லா படைப்புக்கும் தொடக்கமாக இருக்கிறார் என்று ஆளுநர் ரவி கூறினார்.
இதைத்தொடர்ந்து திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு. போப் பற்றி அவர் பேசினார்.
"திருக்குறளுக்கு அவமதிப்பு செய்த ஜி.யு.போப்"
இந்த வார்த்தையின் முதலாவது மொழிபெயர்ப்பை செய்தவர் ஜி.யு. போப். தமிழ்நாடு ஆளுநராக நான் வெளியே போகும்போதெல்லாம் எனக்கு டஜன் கணக்கில் திருக்குறள் புத்தகங்கள், அதன் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வழங்கப்படும். அதில் பெரும்பாலானவை ஜி.யு. போப் உடையது. அதை படித்தபோது, ஆதிபகவன் என்ற வார்த்தையை "முதன்மை தெய்வம்" (ப்ரைமல் டெய்ட்டி) என்று ஜி.யு.போப் மொழிபெயர்த்திருப்பார்.
ப்ரைமல் டெய்ட்டி என்பது பழம் சமய சமூகத்தை குறிக்கும். சிலவற்றை பார்த்து அந்த சமூகத்தினர் பயப்படும்போது அதை போக்க அவர்கள் தெய்வத்தை உருவாக்கினர். அதனால் அந்த வார்த்தையை பயன்படுத்தி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். வார்த்தைகள் வலிமையானவை. அவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும். ஆதிபகவன் என்பது பழம் சமூகத்தால் கருதப்பட்ட வெறும் முதன்மை தெய்வம் மட்டும் கிடையாது. அதை விட சக்தி வாய்ந்தவர் ஆதிபகவன். அவர்தான் உலகை படைத்தார்.
ஆனால், ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார். அவரது மொழிபெயர்ப்பை எப்படி பிறகு வந்தவர்கள் வழிமொழிந்து சென்றனர் என்று நினைத்து அச்சரியப்படுகிறேன். ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மிகமற்றதாக ஆக்கியிருக்கிறார். தனது மொழிபெயர்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மிக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார்.
ஜி.யு. போப் யார் என்பதை உங்களுக்கு அறிமுகப்படுத்த இந்த நேரத்தை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் ஒரு மதபோதகர். அவர் சுவிஷேசத்தை பரப்பும் சொசைட்டியின் (எஸ்பிஜி) உறுப்பினர். 1813இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றம், ஒரு சட்டத்தை இந்திய சாசனம் என்ற பெயரில் நிறைவேற்றியது. அதில், இந்தியாவில் கிறிஸ்துவ இறை நம்பிக்கையை பரப்பும் நோக்கம் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன்படியே ஜி.யு.போப் இந்தியாவுக்கு ஊழியம் செய்வதற்காக வந்தார், தமிழை பயின்றார், திருக்குறளை தேர்ந்தெடுத்து அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். அதில் இருந்த ஆன்மாவையை பிரித்தெடுத்தார்.
ஜி.யு.போப்பின் திருக்குறள் மொழிபெயர்ப்பை பார்த்தீர்களானால், அது ஆன்மா இல்லாத ஒரு சடலம் போல இருக்கும். தடயவியல் கூடத்தில் ஒரு உடலில் எல்லா உறுப்புகளும் இருக்கும். ஆனால், ஆன்மா இருக்காது. ஆன்மா இல்லை என்றால் உடலுக்கு அர்த்தமே கிடையாது. இதைத்தான் ஜி.யு.போப் செய்தார். அவரது மொழிபெயர்ப்பை படித்தபோது இப்படித்தான் நான் உணர்ந்தேன்.
"திருவள்ளுவர் ஒரு பழுத்த ஆன்மிகவாதி"
சில தமிழ் அறிஞர்களின் திருக்குறள் மொழி பெயர்ப்பை நான் படிக்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன். ஏதோ திருக்குறளுக்கு அவர்கள் தங்களுடைய மொழிபெயர்ப்பின் மூலம் நல்லது செய்திருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால், ஜி.யு.போப்பை பின்பற்றி செய்தவர்களின் மொழிபெயர்ப்புகளை நான் அப்படி உணர்வதில்லை.
திருவள்ளுவர் ஒரு பழுத்த ஆன்மிகவாதி. பழங்கால இந்தியாவில் வாழ்ந்த புலவர்கள் வாழ்ந்த அண்டவெளியில் பிரகாசம் மிக்க புதல்வராக வாழ்ந்தவர் திருவள்ளுவர். ஞானத்தின் ஆதாரமாக அவர் நமக்கு திருக்குறளை விட்டுச் சென்றார். ஆனால், துரதிருஷ்டவசமாக நான் இதில் ஒரு விஷயத்தை பார்க்கிறேன். திருக்குறள் ஒரு நெறிகள் சார்ந்த, தார்மிகம் தொடர்பான ஒரு நூலாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நான் பார்க்கிறேன்.
அத்தகைய ஓர் நோக்குடன் அனுப்பப்பட்ட காலனித்துவ கால இறை போதகர் ஜி.யு. போப் போன்றவர்களால் 'திருக்குறள்' ஆன்மிகமற்றதாக காட்டப்பட்டுள்ளது. நமது தமிழ் இலக்கியம் செழுமையானது. உலகிலேயே தொன்மையானது நமது தமிழ் இலக்கியங்கள்.
சங்க கால இலக்கியத்தை பார்த்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவை எந்த அளவுக்கு ஆழமான கருத்துக்களைக் கொண்டிருந்தன என கூறலாம். இவற்றை விட மேலும் பழமை வாய்ந்த கருத்துக்களை திருமூலரின் திருமந்திரம் கொண்டுள்ளது.
இந்த திருமந்திரம் தோன்றிய வரலாறு பற்றிய சரியாக தெரியவில்லை என்றாலும் அது மூன்றாயிரம் பொது ஆண்டுக்கு முந்தையது என்று கூறுகிறார்கள். அதாவது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது எழுதப்பட்டிருக்கிறது. திருமூலர், தமது திருமந்திரத்தின் 3,000 வாக்கியங்களில் யோகா பற்றி எழுதியுள்ளார். பதஞ்சலி போன்ற யோகிகள் எல்லாம் திருமூலரின் வழிவந்தவர்கள்.
மேற்கத்திய நாட்டவர்கள் சொல்ல முற்பட்டதை விட மிக, மிக பரந்து விரிந்த கருத்துக்களை வழங்கியவர்கள் நமது தமிழ் முன்னோர்கள் என்று ஆர்.என். ரவி தெரிவித்தார்.
ஆளுநரின் சர்ச்சை கருத்துக்கள்
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பதவிக்கு வந்த பிறகு பொதுத்தளங்களில் அவர் வெளியிடும் கருத்துக்கள், பல நேரங்களில் சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளன. அவர் தமது நிகழ்ச்சிகளில் இந்து மதம் சார்ந்த கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்வதாகவும் 'மதசார்பற்றவராக' செயல்படவில்லை என்றும் பல்வேறு தமிழ்நாட்டு கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
கடந்த மே மாதம் அவர் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள கட்சியின் செயல்பாடுகளை தீவிரவாத சக்திகளுடன் தொடர்புபடுத்தி பேசியது சர்ச்சையானது.
கடந்த ஜூன் மாதம் அவர் சென்னையில் ராமகிருஷ்ண மடம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, ஒரு கடவுளை மட்டுமே வணங்க வேண்டும் என்பது சனாதன தர்மம் இல்லை என்று கூறினார். அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்தார்.
முன்னதாக, அவர் கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 22ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசியபோது, பிறரை பின்னுக்குத் தள்ளிவிட்டு பலன்களை ஓரங்கட்டச் செய்த சில அறிவுஜீவிகள் கடைப்பிடித்த முந்தைய வளர்ச்சி மாடலை `டார்வீனியன் மாடல்' என்று அழைத்து சில கருத்துகளை வெளியிட்டார். இவை எல்லாம் அவர் பேசி முடித்த நாட்களில் தொடர் சர்ச்சையாக அமைந்தன.
இப்போது கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்த விதம் குறித்தும் அவர் இந்தியாவுக்கு வந்த நோக்கம் குறித்தும் சில கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார். இது கிறிஸ்துவ சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்