அதிமுக அலுவலக வன்முறை: ஓபிஎஸ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றதாக அளிக்கப்பட்ட புகாரில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஏழு பேர் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய தினம் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை நடத்தியது. அந்த நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தினுள் வலுக்கட்டாயமாகப் புகுந்தனர். அந்த அலுவலகத்தின் பூட்டை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உடைத்த பிறகு, போலீஸ் பாதுகாப்புடன் ஓ.பன்னீர்செல்வம் அங்கு வந்தார். சில மணி நேரம் அந்த அலுவலகத்தில் தங்கியிருந்தார்.

முன்னதாக, அதிமுக அலுவலக வளாகத்திலும் வெளியேயேயும் நின்றிருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பினருக்கும் மோதல் வெடித்தது. அதில் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு வந்த வருவாய்த்துறையினர் அதிமுக அலுவலகத்தை மூடி பூட்டு போட்டு சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கில், இந்த அலுவலகத்தை எடப்பாடி தரப்பினரிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் கூறியது. இதற்கிடையில், ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் தலைமை அலுவலகத்திற்குள் வலுக்கட்டாயமாக புகுந்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வத்தின் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் எதிரியாக ஓ. பன்னீர்செல்வமும் இரண்டாவது எதிரியாக வைத்தியலிங்கமும் மூன்றாவது எதிரியாக மனோஜ் பாண்டியனும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை நான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு வழக்குகளுமே தற்போது மத்தியக் குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு கைப்பற்றிய ஆவணங்கள் என்ன?

கட்சி அலுவலகம் பூட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வேளையில், கட்சி அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் வருவாய்த்துறையினர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் சாவியை வழங்கினர்.

இதையடுத்து கட்சி அலுவலகத்துக்கு சென்று பார்த்தபோது, முன்னாள் முதல்வர் அறை உள்பட அனைத்து அறைகளின் கதவுகளும் கடப்பாரயால் அடித்து உடைக்கப்பட்டு இருந்தது. அலுவலக மேலாலர் மகாலிங்கத்தின் அறையில் உள்ள பீரோ பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அசல் பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கான அசல் பத்திரம், அண்ணா சாலையில் உள்ள இடத்துக்கான அசல் பத்திரம், கோவையில் உள்ள இதய தெய்வம் மாளிகையின் அசல் பத்திரம், புதுச்சேரியில் உள்ள கழக அலுவலக இடத்துக்கான அசல் பத்திரம், திருச்சியில் உள்ள இடத்துக்கான அசல் பத்திரம், அதிமுக பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை தோற்றுவிக்கப்பட்டதற்கான அசல் பத்திரம், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா அறக்கட்டளைக்கு சொந்தமான அசல் பத்திரம், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தங்க கவசம், மதுரையில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டதற்கான பாஸ்புக், அது தொடர்புடைய அசல் ஆவணங்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 31 ஆயிரம் ரொக்கம் மற்றும் கணக்கு வவக்குகள் தொடர்பான விவரங்கள் அடங்கிய இரண்டு கணிப்பொரிகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

ஒரு வெள்ளி, இரண்டு வெண்கல குத்து விளக்குகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. தலைமை கழகத்துக்கு சொந்தமான 37 மோட்டார் வாகனங்களின் அசல் பதிவுச் சான்றிதழ்கள், கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரால் அவ்வப்போது ஒப்புதல் அளித்து கையொப்பமிட்ட கணக்கு-வழக்கு ரசீதுகள், ப பெரிய சூட்கேஸ்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: