நடிகர் அஜித் காதுகளைப் பாதுகாக்க சொன்னது ஏன் தெரியுமா? டினிட்டஸ் அவ்வளவு முக்கியப் பிரச்னையா?

பட மூலாதாரம், SURESH CHANDRA
காதுக்குள் ஒலி கேட்கிறதா? இது சாதாரண பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல. உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு விளைவுகளைக் கொண்ட பிரச்னையாகவும் இது இருக்கலாம். நடிகர் அஜித்குமார் மேலாளரின் ட்வீட்டுக்குப் பிறகு, பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த விவகாரம்.
நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட ஒரு ட்வீட்டுக்கு பிறகு டினிட்டஸ் என்ற சொல் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.
அதாவது, நடிகர் அஜித் குமார் தெரிவித்ததாக அவரது மேலாளர் பதிவிட்ட ட்வீட் அது. அதில், "உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். நிபந்தனைகளற்ற அன்புடன் என்றும் - அஜித்" என்று குறிப்பிடப்பட்டு, காதுகளுக்குள் ரீங்கார சத்தம் கேட்கும் டினிட்டஸ் என்ற, காது தொடர்பான பிரச்னை குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பதிவைப் பகிர்ந்த இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒலி மாசு குறித்து குறிப்பிட்டு, சினிமா படப்பிடிப்பு தளங்களில் உருவாகும் பெரும் ஒலியை தவிர்க்கவும் குறைக்கவும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவ்வளவு பெரும் பிரச்னை என்றால், அது என்ன என்று நாமும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இந்த டினிட்டஸ் பிரச்னை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு முறைகள் என்னென்ன?
டினிட்டஸ் என்பது என்ன?
காதுகளுக்குள் ஒரு ரீங்கார ஒலி கேட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கு டினிட்டஸ் என்று பெயர். அது வெறும் ரீங்காரமாக மட்டுமன்றி இரைச்சலாகவோ, மெல்லிய ஒலியாகவோ, அலையோசை போலவோ, சிறகடிக்கும் ஓசை போலவே எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
சத்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். தொடர்ந்தோ அல்லது விட்டுவிட்டோ ஒலிக்கலாம். ஒரு காதில் அல்லது இருகாதுகளிலும் ஒலிக்கலாம். இப்படியாக எந்தவிதமான ஒழுங்கற்ற முறைமையிலும் காதுகளுக்குள் ஒலி கேட்கும் பிரச்னைக்கு டினிட்டஸ் என்று பெயர்.
ஏன் டினிட்டஸ் வருகிறது?
இது ஒரு நோயல்ல. உங்கள் ஒலிகேட்பு திறனில் ஏதோ தவறாக இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறிதான் டினிட்டஸ். காதின் உட்புறத்தையும் மூளையையும் இணைக்கும் ஒலிகேட்புத்திறன் உணர் உறுப்பில் பிரச்னை என்பதன் அறிகுறி இது. காதுகளில் சேரும் கசடு கூட இந்த டினிட்டஸ் பிரச்னையை உருவாக்கக் கூடும்.
மிக மிக எளிமையாக வந்துவிட வாய்ப்புள்ள இந்த டினிட்டஸின் விளைவுகள் மோசமானவை. அவை:
- ஒலியால் உருவாகும் காதுகேளாமை
- காது மற்றும் சுவாசக் கோளாறுகள்
- இதயம் மற்றும் ரத்த நாள நோய்கள்
- மூளைக் கட்டிகள்
- பெண்களுக்கு ஹார்மோன் மாறுதல்கள்
- கழுத்துக் கழலை
வயது மூத்தவர்களுக்கு காது கேளாமையை இந்த டினிட்டஸ் நோய் உருவாக்கும். சில நேரங்களில் மருந்துகள் எடுத்துக்கொள்வதன் பக்க விளைவாகவும் இது இருக்கலாம். இதுவரை சுமார் 200 மருந்துகள் டினிட்டசை ஏற்படுத்தவல்லவை என்று தெரியவந்துள்ளன.

பட மூலாதாரம், Getty Images
அதிக ஒலி ஏற்படும் இடங்களான தொழிற்சாலைகள், கட்டிட வேலை நடைபெறும் இடங்களில் பணியாற்றும் ஊழியர்கள், இசைக்கலைஞர்களுக்கும் கூட இந்த பிரச்னை அதிகம் ஏற்பட வாய்ப்புண்டு.
அதாவது, தொடர்ந்து அதிகமான ஒலியை கேட்டுக்கொண்டே இருப்பதால் நாளடைவில், காதுகளின் உட்புறத்தில் இருக்கக்கூடிய, மூளைக்கு ஒலியைக் கடத்தும் மிகச்சிறிய உணர்திறன் செல்கள் பாதிப்படைந்து காது கேளாமைக்கு வழிவகுக்கிறது. இந்த நிலைக்கு, 'ஒலியால் தூண்டப்பட்ட காது கேளாமை' என்று பெயர்.
ஆனால், இந்த விவகாரத்தில் பெரிதும் கவலை தரக்கூடிய ஒன்று, மூளைக்கும் உட்புறக் காதுக்கும் இடையில் ஏற்படக்கூடிய கட்டிதான் என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஈ.என்.டி. (காது மூக்கு தொண்டை) மருத்துவர் பாலாஜி.
"இந்த நிலையைப் பொறுத்தவரை, வலி நிவாரணிகள், ஆஸ்பிரின் போன்ற நேரடியாக மக்களே எடுத்துக் கொள்ளும் மருந்துகளால் இந்த பாதிப்புகள் பெருமளவு உருவாகின்றன. அதிலும் குறிப்பாக வயதானவர்களுக்கு இது அதிகளவில் ஏற்படுகிறது. எப்படியாயினும் வயதாக வயதாக காது நரம்புகள் பலவீனமடையத்தான் செய்யும். ஆனால், தற்போதிருக்கும் சூழ்நிலையில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒலிமாசு, இந்த பிரச்னையின் அளவை அதிகரித்துள்ளது."

பட மூலாதாரம், Getty Images
"இடைவிடாமல் ஒலி எழுப்பும் கார்கள் முதல், ஏ.சி. கார்களில் அளவுக்கு மீறி ஒலியுடன் பயன்படுத்தப்படும் ஸ்பீக்கர்கள் வரை அனைத்தும் இந்த நிலைக்கு காரணமாகவே அமைகின்றன. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அதிகளவில் தேவை."
"80 முதல் 90 டெசிபல் அளவுதான் பரிந்துரைக்கப்பட்ட ஒலியின் அளவு. ஆனால், சில கார்களின் ஹாரன் ஒலியெல்லாம் 120 டெசிபலுக்கும் மேல் இருக்கிறது. இதன் விளைவாகவும் டினிட்டஸ் நிலை உருவாகலாம். எனவே மக்கள் இந்த விவகாரத்தில் புரிந்து கொண்டு நடந்து கொள்ள வேண்டும். தற்போது மக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு மெல்ல மெல்ல தொடங்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்"என்கிறார் அவர்.
டினிட்டஸ் இருப்பதாக உணர்ந்தால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் மருத்துவரை அணுக வேண்டும்.
காதுகளில் அடைப்பு அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கும்பட்சத்தில் மருத்துவர் காரணங்களை ஆராய்வார்.
அத்துடன், உடலின் சர்க்கரை அளவு, கொழுப்பு போன்றவையும் சோதிக்கப்படும்.
எந்த விதத்திலும் சுயமாக இந்த பிரச்னையை தீர்க்க முடியாது.
ஹெட்செட் பயன்பாடு எப்படி உதவும்?
அதேசமயம், குறைந்த ஒலி அளவை கேட்டுப் பழகுவதன் மூலம் காதுகளை இதுபோன்ற ஒலிமாசு பிரச்னைகளிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் மருத்துவர் பாலாஜி தெரிவிக்கிறார்.
"ஹெட்செட் பயன்படுத்துவதால் காது தொடர்பான பிரச்னைகள் வருவதாக பலரும் சொல்வதுண்டு. காதுக்கு பொருந்தாத, தூய்மையற்ற ஹெட்செட்களை பயன்படுத்துவதால் அப்படி பிரச்னைகள் வரலாம். மற்றபடி, ரேடியோ அதிர்வலைகள் மற்றும் வெப்பக் கதிர்வீச்சு அலைகளைலிருந்து காதுகளைக் காக்க ஹெட்செட்கள் மிகச்சிறந்த உபகரணங்கள் என்பதை மறுக்க முடியாது. அதே சமயம், ஒளி அளவை உங்கள் காதுக்கு தொந்தரவில்லாத அளவில் அமைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இப்படி செய்வதன் மூலம் காதுகளை டினிட்டஸ் போன்ற பிரச்னைகளில் இருந்து காக்க முடியும்" என்கிறார் மருத்துவர் பாலாஜி.
மொத்ததில், அளவிலும் வீரியத்திலும் பார்ப்பதற்கு எளிமையாகத் தெரியும் இந்த டினிட்டஸ் பிரச்னை, விளைவுகளைப் பொறுத்தவரை மோசமானதாக இருக்கிறது.
எனவே, "உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். நிபந்தனைகளற்ற அன்புடன் என்றும்"- உங்கள் காதுகள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













