You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராஜீவ் காந்திக்கு பிடித்த தூத்துக்குடி மக்ரூன், புகைப்படம் எடுக்கும் ஆர்வம் - பிறந்தநாள் பகிர்வு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் இன்று. அவர் 1944ம் ஆண்டு பிறந்தார். ராஜீவ் காந்தி 1980 ஆம் ஆண்டு அவரது சகோதரர் சஞ்சய் இறந்த பிறகு இந்திய அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
அவரது தாயாரும் அன்றைய பிரதமருமான இந்திரா காந்தியின் ஆலோசகராகவும்,நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். 1984ஆம் ஆண்டு அவர் தாய் படுகொலை செய்யப்பட்ட சில காலத்திற்கு பிறகு, அவர் பிரதமராக பதவி ஏற்றார்.
அவரைப் பற்றி அதிகம் அறியப்படாத சில தகவல்களை இங்கே பார்க்கலாம்.
- ராஜீவ் காந்திக்கு புகைப்படம் எடுப்பது மிகவும் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது. அவரது புகைப்படங்களை வெளியிட பல பதிப்பாளர்கள் கேட்டனர். ஆனால், அதனை அவர் மறுத்துவிட்டார். அவர் மறைவுக்கு பிறகே, அவரது மனைவி சோனியா காந்தி 1995ஆம் ஆண்டு, அவர் நாற்பது ஆண்டுகளாக எடுத்த புகைப்படங்கள் கொண்ட புத்தகத்தை வெளியிட்டார்.
- இந்தியாவின் பிரதமர்களுள் தனது காரை தானே ஓட்டும் வழக்கம் கொண்டவர் ராஜீவ் காந்தி. அவர் தனது தேர்தல் பிரச்சாரங்களின் போதும், அவர் தனது காரை ஓட்டி செல்வார்.
- ஒவ்வொரு முறை அவர் தமிழ்நாடு வரும்போதும், அவரது விருந்து நிகழ்ச்சியில் தவறாமல் இருப்பது மக்ரூன்ஸ். தூத்துக்குடியில் உள்ள கணேஷ் பேக்கரி என்ற கடையில் இருக்கும் மக்ரூன்ஸ் மட்டும்தான் ராஜீவ் காந்திக்கு பிடிக்குமாம். அவர் தமிழ்நாடு வரும்போதெல்லாம் இங்கு இருந்துதான் மக்ரூன்ஸ் வாங்கி சாப்பிடுவாராம்.
- ராஜீவ் காந்தி அரசியல் களத்திற்கு வருவதற்கு முன், பைலட்டாக பணியாற்றியவர்.
- முதலில், அவர் அரசியலில் அதிகம் ஆர்வம் இல்லாதவராக இருந்தார்.
- ஊழலை ஒழிக்க பல முயற்சிகளை அவர் எடுத்தபோதும், 'போஃபர்ஸ்' ஊழல் உட்பட பல்வேறு ஊழல் புகார்கள் அவர் மீதும், காங்கிரஸ் மீது அப்போது சுமத்தப்பட, அவரை 'மிஸ்டர் க்ளின்' என்று அழைப்பது நின்றுபோனது.
- நேரு குடும்பத்தில் இருந்து கடைசியாக பிரதமராகப் பதவி வகித்தவர் அவரே.
- அவர் ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்