You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகள் நுழைந்ததை கொண்டாடிய கிராமத்தினர் - கள நிலவரம்
- எழுதியவர், ராக்ஸி காக்டேகர் சாரா
- பதவி, பி பி சி செய்தியாளர்
குஜராத்தின் மிக கொடூர குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கால் அறியப்பட்டது.
மார்ச் 3, 2002 அன்று நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளும் அடங்குவார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, 2008-ம் ஆண்டு பாம்பே செஷன்ஸ் நீதிமன்றம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
ஆகஸ்ட் 15, 2022 அன்று, கோத்ரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த இந்த 11 கைதிகளும் குஜராத் அரசின் மன்னிப்புக் கொள்கையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் தங்கள் கிராமமான சிங்வாடாவை அடைந்ததும், உள்ளூர் மக்கள் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.
பலர் தங்கள் வீடுகளில் நடனமாடியும், உரத்த இசையை இசைத்தும் கொண்டாடினர். அதேநேரம், சிலர் முகத்தில் மஞ்சள் பொட்டிட்டும் கொண்டாடினர்.
விடுதலை செய்யப்பட்ட 11 பேர் கடந்த 15 ஆண்டுகளாகவும், இவர்களில் சிலர் கடந்த 18 ஆண்டுகளாகவும் சிறையில் உள்ளனர்.
சிங்வாடா எப்படிப்பட்ட இடம்?
குஜராத்தின் சிங்வாடா கிராமம் சற்று பெரிதானது. ஆனால் நகரத்தை விடச் சிறியது. இங்கு பெரிய கடைகள் மற்றும் காவல் நிலையம் உள்ளது. பில்கிஸ் பானு பாலியல் பலாத்கார வழக்கின் காரணமாக, இந்த கிராமம் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒரு வகையான பிரபலம் அடைந்திருந்தது.
ஆகஸ்ட் 15 அன்று, கற்பழிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நபரின் வீட்டிற்கு பிபிசி குழு சென்றடைந்தது.
இங்கு இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் படங்களை பார்த்தோம். இதற்குப் பிறகு நெற்றியில் சந்தனம் பூசிய ஒருவர், எந்த நிருபருடனும் பேச விரும்பவில்லை என்று கூறினார்.
ஆனால், இதற்குப் பிறகு, ஊடக விசாரணையால் தான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்ததாகக் கூறினார். அந்த நபரின் வீட்டில் ஆர்எஸ்எஸ் நிறுவனர் எம்எஸ் கோல்வால்கர் மற்றும் டாக்டர் கேபி ஹெட்கேவார் ஆகியோரின் படங்கள் இருந்தன. மேலும் ஆர்எஸ்எஸ் வரையறுத்த பாரத மாதா படமும் இருந்தது.
குறைந்தபட்சம் இரண்டு பேர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ராதேஷ்யாம் சாஹி அவர்களில் ஒருவர். சாஹியின் மனு மீது, பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை விடுதலை செய்வது குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை அமைக்குமாறு மாநில அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இந்தியா டிவிக்கு பேட்டியளித்த சாஹி, அப்போதைய மத்திய அரசால், தான் தவறாகச் சிக்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் தான் சிக்கிக் கொண்டதாகக் கூறினார்.
சாஹியும் சிங்வாடா கிராமத்தில் வசிப்பவர். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான கோவிந்த் ராவல், இந்துத்துவா அமைப்புடன் தொடர்புடையவர் என்பதால் தான் சிக்கியதாக கூறியுள்ளார்.
வைரலான வீடியோவில், தான் விடுவிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைவதாகவும், மீண்டும் தனது வாழ்க்கையைத் தொடங்கப் போவதாகவும் சாஹி கூறியுள்ளார்.
கிராமவாசிகளின் கருத்து
இந்தக் கிராமத்தில் வசிக்கும் பலரிடம் பிபிசி பேச முயன்றது. இவர்களில் பெரும்பாலோர், அவர்கள் செய்த செயல்களுக்குப் போதுமான தண்டனை கிடைத்ததாக நம்பினர். இப்போது அவர்களும் சிறையில் இருந்து வெளிவர உரிமை பெற்றுள்ளனர் என்றும் கருதினர்.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு கடைக்காரர், கிராமத்தில் யாரும் இதுவரை பெறாத தண்டனையை இவர்கள் பெற்றுவிட்டனர் என்கிறார். அவர்களை மும்பையில் உள்ள சிறைக்கு அனுப்பியதால், அவர்களது குடும்பத்தினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
2004 முதல் 2011 வரை மகாராஷ்டிராவில் உள்ள அமர்வுகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர் கோபால் சிங் சோலங்கியிடம் பிபிசி பேசிய போது,
அவர்களை விடுவிப்பதில் தவறில்லை, அது அவர்களின் உரிமை என்றார்.
இதுபோன்ற கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்வது சரியானதா என்று கேட்டபோது, இங்கு தண்டனை வழங்கும் முறை சரிவரக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது, இதன் கீழ் சிறையில் உள்ளவர்கள் மீண்டும் ஒருமுறை புதிய வழியில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வாய்ப்பைப் பெற வேண்டும் என்றார்.
பில்கிஸ் பானுவின் கருத்து என்ன?
கோபால் சிங் சோலங்கியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆமதாபாத்தின் மூத்த வழக்கறிஞர் சம்சாத் பதான், இவர்களின் விடுதலை குறித்து கவலை தெரிவிக்கப்படவில்லை என்றும், இதுபோன்ற கொடூரமான வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிப்பதில் தான் கவலை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தண்டனை முடிந்த பிறகும் பலர் விடுதலைக்காகக் காத்திருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் அவற்றுக்குச் செவிசாய்க்கப்படுவதில்லை என்றும் இதுமட்டுமின்றி, கடுமையான குற்றங்களுக்காகப் பலர் பல ஆண்டுகளாகச் சிறையில் உள்ளனர் என்றும் கூறுகிறார்.
ஆனால், இந்த 11 பேரின் விடுதலை குறித்து பில்கிஸ் பானு கருத்து வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில், தானும் தனது குடும்பத்தினரும் அச்சத்தின் நிழலில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"கடந்த 20 வருட வலி என்னை மீண்டும் ஒருமுறை உலுக்கி விட்டது. எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இன்னமும் நான் மரத்துப் போயிருக்கிறேன். இன்று ஒரு பெண்ணின் நீதியின் முடிவு இப்படித்தான் இருக்கிறது என்றுதான் என்னால் சொல்ல முடியும்" என்று கூறியுள்ளார். நான் என் நாட்டின் உச்ச நீதிமன்றங்களை நம்பியிருந்தேன். அமைப்பின் மீது நம்பிக்கை வைத்து மெல்ல மெல்ல என் துயரங்களுடன் வாழக் கற்றுக்கொண்டேன். இந்தக் குற்றவாளிகளின் விடுதலை என் அமைதியைப் பறித்துவிட்டது, நீதியின் மீதான நம்பிக்கையையும் நான் இழந்துவிட்டேன். இந்த வருத்தமும் நம்பிக்கையிழப்பும் எனக்கு மட்டுமல்ல, நீதிமன்றங்களில் நீதிக்காகப் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் எழுகிறது."
மேலும் அவர், "இவ்வளவு பெரிய மற்றும் அநியாயமான முடிவை எடுப்பதற்கு முன் எனது பாதுகாப்பை யாரும் நினைத்துப்பார்க்கவில்லை. இந்த முடிவை திரும்பப் பெற குஜராத் அரசிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அச்சமின்றி அமைதியாக வாழ விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். என் மற்றும் என் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோருகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிபிசியிடம் பேசிய பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் ரசூல், எங்களுக்கு வீடு தருமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மாநில அரசு இந்த உத்தரவை இன்னும் நிறைவேற்றவில்லை. இன்னும் நடைமுறைகள் முடிவடையும் வரை காத்திருக்கிறோம்.
தண்டனையும் விடுதலையும்
2002 குஜராத் கலவரத்தின் போது, அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்தில் ஐந்து மாத கர்ப்பிணி பில்கிஸ் பானு ஒரு கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது மூன்று வயது மகள் சலேஹாவும் கொடூரமாக கொல்லப்பட்டார்.
ஜனவரி 21, 2008 அன்று, மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம், பில்கிஸ் பானுவை கூட்டுப் பலாத்காரம் செய்து, ஏழு குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அவர்களது தண்டனையை பம்பாய் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷியாம் ஷா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, நிவாரணம் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகியதால், நிவாரணம் குறித்த சிக்கலைக் கவனிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து குஜராத் அரசு ஒரு குழுவை அமைத்தது. இந்த கமிட்டி இந்த வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் தண்டனையை ரத்து செய்ய ஒருமனதாக முடிவு செய்து அவர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்தது.குஜராத்தின் மிகக் கொடூரமான குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் பிரபலமடைந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்