இந்திய வரலாறு: நிஜாம் ஆட்சியில் ஓர் அரசு அதிகாரி வீழ்ந்த கதை

    • எழுதியவர், பெஞ்சமின் கோஹன்
    • பதவி, வரலாற்றாசிரியர்

(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 52ஆவது கட்டுரை இது.)

1892 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ஆங்கிலத்தில் ஒரு சிறிய எட்டு பக்க துண்டுப்பிரசுரம் தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தில் விநியோகிக்கப்பட்டது. இது பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் மிகப்பெரிய செல்வ செழிப்பான மாநிலம்.

மெஹ்தி ஹசன் என்ற முஸ்லீம் அரச அதிகாரி மற்றும் இந்தியாவில் பிறந்த அவரது பிரிட்டிஷ் மனைவி எலன் கெர்ட்ரூட் டோனெல்லி - இவர்களின் வாழ்வை அந்தத் துண்டுப் பிரசுரம் அழித்துவிட்டது.

இந்தியாவில் 19ஆம் நூற்றாண்டு இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட காதலுக்கான காலமாக இல்லை. ஆட்சியாளர்கள் ஆளப்பட்டவர்களுடன் பாலுறவு கொள்ளவில்லை. ஓர் இந்திய ஆண் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் உறவுகொள்வது மிகவும் அரிது.

ஆனால், நிஜாம்களால் (அரச குடும்பம்) ஆளப்பட்ட ஹைதராபாத்தில் உள்ள உயரடுக்கு வட்டங்களில் இந்த தம்பதியர் ஒரு பகுதியாக இருந்தனர். எலனின் பிரிட்டிஷ் தொடர்புகளும், நிஜாம் அரசாங்கத்தில் மெஹ்தியின் பங்கு ஆகியவற்றால் அவர்களை 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செல்வாக்குமிக்க தம்பதியராகமாற்றியது. விக்டோரியா மகாராணியைச் சந்திக்க அவர்கள் லண்டனுக்கு அழைக்கப்பட்டனர்.

மெஹ்தி ஹைதராபாத்தின் நிர்வாகத் தரவரிசையில் உயர்ந்ததால், அவரது வெற்றி உள்ளூர் மக்களுக்கு, ஹைதராபாத்தில் வசிக்கும் பிற வட இந்தியர்களுக்கு மத்தியிலும் பொறாமையைத் தூண்டியது.

அவர் ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பின்னர் மாநில உள்துறை செயலாளராகவும் ஆனார். இவை அனைத்தும் அவருக்கு நல்ல சம்பளத்தை கொடுத்தது. மேலும், அவரது சகாக்களின் பொறாமையையும் தூண்டியது. அதே நேரத்தில், எலன் ஹைதராபாத்தின் வசதியான சமூக வட்டங்களில் இடம்பிடிக்கத் தொடங்கினார். இது சிலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் மெஹ்தியும், எலனும், சமூகத்தில் அவர்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையை, மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், அந்த சிறிய துண்டுப் பிரசுரம் இந்த தம்பதியினரின் வரலாற்றையே மாற்றி எழுதியது. மேலும், வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

மெஹ்தியின் வெற்றியைக் கண்டு பொறாமை கொண்ட பெயர் குறிப்பிடாத அந்த துண்டுப்பிரச்சுரத்தை எழுதியவர்(கள்) , அவரது செயல்திறனில் தவறு கண்டுபிடிக்க முடியாமல், முதலில் குறிவைத்தது எலனைத்தான்.

அந்த துண்டுப்பிரசுரம் மூன்று குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

முதலாவதாக, எலன் மெஹ்தியை திருமணம் செய்வதற்கு முன்பு ஒரு பாலியல் தொழிலாளியாக இருந்ததாகவும், அந்த துண்டுப் பிரசுரத்தை எழுதியவர், வேறு சில ஆண்களுடன் சேர்ந்து, அவர்களது பிரத்யேகமான 'பாலியல் இன்பத்திற்காக' அவரை ' உடன் வைத்திருந்தார்' என்றும் அது கூறியது.

இரண்டாவதாக, மெஹ்தியும் எலனும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இறுதியாக, ஹைதராபாத்தின் நிர்வாக உயரடுக்கின் உறுப்பினர்களுக்கு எலனை மெஹ்தி 'விற்றுவிட்டார்' என்று கூறப்பட்டது.

அவரது நண்பர்களின் ஆலோசனைகளை மீறி மெஹ்தி, பிரித்தானிய நீதிபதி தலைமை வகிக்கும் ரெசிடென்சி நீதிமன்றத்தில், துண்டுப்பிரசுரத்தை அச்சிட்ட எஸ்.எம்.மித்ராவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்.

இரண்டு தரப்பும், நன்கு அறியப்பட்ட பிரிட்டன் வழக்கறிஞர்களை நியமித்தது. இரு தரப்பினரும் சாட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்தனர்.

இரு தரப்பு சாட்சிகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர்.

அதிர்ச்சியளிக்கும் விதமாக, துண்டுப் பிரசுரத்தை அச்சிட்ட குற்றச்சாட்டில் இருந்து மித்ராவை நீதிபதி விடுவித்தார். விசாரணையின் போது வெளிவந்த பாலியல் கூட்டுவாழ்வு, பாலியல் தொழில், அவர்களின் திருமணம், வஞ்சகம், பொய் சாட்சியம், லஞ்சம் மற்றும் பல குற்றச்சாட்டுகளை அவர் சீண்டவே இல்லாமல் விட்டுவிட்டார்.

இந்த துண்டுப் பிரசுர ஊழல் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிஜாமின் அரசாங்கம், பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அரசாங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள பத்திரிகைகள், ஒன்பது மாத நடந்த இந்த வழக்கைப் பின்பற்றின.

தீர்ப்பு வந்த சில நாட்களுக்குள், மெஹ்தியும், எலனும் தாங்கள் வளர்ந்த வட இந்தியாவில் உள்ள லக்னோ நகருக்குத் திரும்பிச் செல்ல ரயிலில் ஏறினர்.

ஒரு காலத்தில் உள்ளூர் கலெக்டராகப் பணியாற்றிய லக்னோவில், மெஹ்தி உள்ளூர் அரசாங்கத்தில் மீண்டும் பணியமர்த்தப்படுவதற்கு பலமுறை முயன்றார். அவருடைய ஓய்வூதியத்தைப் பெறுவதற்காகவோ அல்லது கொஞ்சம் பணம் சேர்ப்பதற்காகவோ அவர் முயன்றார். ஆனால் அது பலனளிக்கவில்லை.

ஒருமுறை விக்டோரியா மகாராணியின் மீது தனது அன்பை கண்ணீர் நிறைந்த கண்களால் வெளிப்படுத்தினார் மெஹ்தி. மேலும் புதிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை 'ஆபத்தானது' என்று அவர் அழைத்தார். ஆனால், நிஜாமின் அரசாங்கம் அவரைக் கைவிட்டதைப் போலவே காலனித்துவ இந்திய அரசாங்கமும் அவரை கைவிட்டது

இறுதியில், அவர் நிஜாம் அரசாங்கத்தில் உள்துறைச் செயலாளராக இருந்த அவரது பணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் அவரை அவமதிக்கும்விதமாக, ஓய்வூதியமும், இழப்பீடுகூட அவருக்கு மறுக்கப்பட்டது.

அவர் தனது 52 வயதில் இறந்தபோது, எலனுக்கு எந்த ஒரு நிதி பாதுகாப்பும் அவர் விட்டுச் செல்லவில்லை.

அவருக்கு வயதானபோது, நிலைமை இன்னும் மோசமடைந்தது.

அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், ஒரு காகிதத்தில், நடுங்கிய கையெழுத்தில், ஹைதராபாத் பிரதம மந்திரியிடமும், நிஜாமிடமும் ஏதாவது இழப்பீடு தருமாறு கெஞ்சினார்.

ஹைதராபாத் அதிகாரி, எலனின் கோரிக்கையை அனுதாபத்துடன் பார்த்து, அவருக்கு ஒரு சிறிய உதவி தொகை அனுப்ப அனுமதித்தார். ஆனாலும், அவருக்கு உதவி கிடைத்த சில காலத்திலேயே, அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

இந்த தம்பதியரின் கதை பிரிட்டிஷ் இந்தியப் பேரரசின் உயர் அடுக்கு கலாசாரம் பற்றிய பார்வையை ஏற்படுத்தியது. இந்திய தேசியவாத சக்திகள் சமூக-அரசியல் கட்டமைப்புகளை தீவிரமாக சவால் விட தொடங்குவதற்கு நீண்ட காலம் பிடிக்கவில்லை.

மெஹ்தி மற்றும் எலனின் கதை அந்தக் காலகட்டத்தின் இந்தியாவைப் பற்றிய வழக்கமான சிந்தனைக்கு சவால் விடுகிறது.

உணர்வுபூர்வமாகவும், பல துயரங்கள் கடந்து, இந்த தம்பதி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தப்போது, ​​​​இறுதியில் அவர்களின் கதை அந்த காலத்தின் விதிமுறைகளை மீறியதால், அவர்கள் அழிக்கப்பட்டனர்.

பலரும் தேசியவாத ஆதரவாளர்களாக மாறுவதற்கு முன்பு, ஹைதராபாத் மற்றும் அதன் சமஸ்தானங்கள் இன்னும் 'கிழக்கத்திய சர்வாதிகாரிகளாக' இருந்த காலனித்துவ இந்தியாவின் வரலாற்றில் துண்டுப்பிரசுர ஊழல் ஒரு இறுதி கட்டமாக அமைந்தது.

1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ், 1892ஆம் ஆண்டு மெஹ்தி மற்றும் எலன் வழக்கு விசாரணையின்போது பிரபலம் அடைந்தது.

மேலும், எலனின் மரணத்திற்குப் பிறகு, மகாத்மா காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸின் பங்கை உறுதிப்படுத்தினார். இந்தியாவின் அரசர்கள், அவர்களின் ஆட்சி மற்றும் அவர்களின் ஊழல்கள் ஆகியவை தலைப்புச் செய்திகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. அதற்கு பதிலாக தேசியவாதிகள் முக்கிய இடத்தைப் பிடித்ததால், அது மாபெரும் மாற்றமாக இருந்தது.

மேலும் இந்த மாற்றத்தில், துண்டு பிரசுர வழக்கு மறைந்தே விட்டது.

பெஞ்சமின் கோஹன் உட்டா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியர். ஹார்வர்ட் பல்கலைக்கழக அச்சகத்தால் வெளியிடப்பட்ட 'ஹைதராபாத் லேடீஸ்: ஸ்கேன்டல் இன் தி ராஜ்' என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: