You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காந்தி போல பிரம்மச்சரியம் பூண்ட ஜெயபிரகாஷ் நாராயண் மனைவி பிரபாவதி; விஜயாவுடன் ஜெ.பி.க்கு மலர்ந்த நட்பு
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி நிருபர்
(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 51ஆவது கட்டுரை இது.)
ஜெயப்பிரகாஷ் நாராயண் பிரபாவதி என்பவரை 1920 அக்டோபர் 14 அன்று மணந்தார். அப்போது பிரபாவதியின் வயது 14 தான். பிரஜ் கிஷோர் பிரசாத்தின் மகளான அவர், அந்தக் காலத்திலேயே ஆண்களைப் போலவே குர்தாவும் பைஜாமாவும் அணிந்திருந்தார்.
ஜேபி அப்போது பாட்னாவில் உள்ள கல்லூரியில் அறிவியல் பயின்று வந்தார். கல்லூரியின் மாணவர் தலைவராகவும் வலம் வந்தார். பிரபாவதி மகாத்மா காந்தியடிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். காந்தியை தெய்வமாகவே வழிபட்ட அவர், தன் வாழ்நாள் முழுவதும் அவருடைய மிகப்பெரிய பக்தையாக இருந்தார். பிரபாவதி காந்தியடிகளுடன் சபர்மதி ஆசிரமத்தில் அதிக நேரம் செலவிட்டார்.
ஜெயபிரகாஷ் நாராயணனைப் பற்றி சமீபத்தில் 'தி ட்ரீம் ஆஃப் ரெவல்யூஷன்' என்ற புத்தகத்தை எழுதிய சுஜாதா பிரசாத், "பிரபாவதி ஆசிரம வாழ்வைத் தழுவியது மீன் தண்ணீரில் குதிப்பது போல் இயல்பாக இருந்தது. காந்தியடிகளால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். காந்தி மற்றும் கஸ்தூரிபா இருவரும் அவரை நேசித்தார்கள். 1945ல் கஸ்தூரிபா ஆகாகான் அரண்மனையில் வீட்டுக் காவலில் இருந்தபோது, அவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறப் போகிறார் என்று தோன்றியபோது, அவர் தனது பேரன் கதும் மற்றும் பிரபாவதியை தன்னிடம் அழைத்தார். அப்போது பிரபாவதி பாகல்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அவரை கஸ்தூரிபாவிடம் செல்ல அனுமதித்தது," என்று குறிப்பிடுகிறார்.
காந்தி- பிரபாவதி நெருக்கம்
"ஆரம்பத்தில் பிரபாவதி மற்றும் ஜேபியின் கருத்துகள் ஒத்துப்போகவில்லை. அவரது நாத்திகத்திற்கும் மார்க்சிய சோசலிசத்திற்கும் பிரபாவதியின் கருத்துகள் பொருத்தமாக இல்லை. ஆனால் பின்னர் ஜேபி மீது அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவர் ஜேபியை காந்தியின் ரசிகராக்கினார். காந்தியடிகள் அவருக்கு ஒரு தந்தையின் உருவம். ஒரு விதத்தில் அவர் பிரபாவதிக்கு வழிகாட்டியாகவும் ஒரு விதத்தில் தோழராகவும் இருந்தார். அவருடைய கடிதங்களைப் படித்தால் இருவருக்கும் இடையிலான உறவு எவ்வளவு நெருக்கமாக இருந்தது என்பது விளங்கும். அவர் ஆசிரமத்தில் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கென்று சில வேலைகள் இருந்தன. கழிவறையைச் சுத்தம் செய்வது போன்ற செயல்களை யாரும் விரும்புவதில்லை. அங்கு சமஸ்கிருதம் மற்றும் குஜராத்தி கற்றுக்கொண்டார், ஜெயபிரகாஷ் நாராயணின் வேண்டுகோளின் பேரில், அவர் ஆங்கிலத்தையும் கொஞ்சம் கற்கத் தொடங்கினார். ராட்டை சுற்றுவது, உணவு தயாரிப்பது, பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகளும் ஊக்குவிக்கப்பட்டன." என்று சுஜாதா பிரசாத் எழுதுகிறார்.
பிரபாவதியின் தனிமை
காந்தியின் உத்தரவின் பேரில், பிரபாவதி ஒரு நாட்குறிப்பு எழுதத் தொடங்கினார். அவர் தினமும் காலை நான்கு மணிக்கு முன்னதாகவே எழுந்து வழிபாட்டைத் தொடங்கிவிடுவார். காந்தியுடன் நடைப்பயிற்சிக்கு சென்றார். அவரது பாதங்களில் நெய் தடவி விடுவார்.
ஆசிரமத்தில் இருந்த நாட்களை நினைவு கூர்ந்து ஒருமுறை, "ஒரு சமயம் சுத்தம் செய்ய வேண்டிய பாத்திரங்கள் குவியலாக இருந்தன. காந்தியே பாத்திரங்களைக் கழுவுவதை நான் பார்த்தேன். அவரை அங்கிருந்து அகற்றுவதற்காக நான் அவரை நோக்கி ஓடினேன், ஆனால் அவர் என்னைப் பார்த்து 'உனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் செய். எதற்காக இங்கு வந்தாய்? என்று கூச்சலிட்டார். அன்று கீதை படிப்பது என் பொறுப்பாக இருந்தது." என்று கூறினார்.
ஆசிரமத்தில் வாழ்ந்தபோது, பிரபாவதிக்கும் காந்திக்கும் இடையேயான உறவு வலுப்பெற்றது. ஜெயப்பிரகாஷ் நாராயணின் நீண்ட கால இடைவெளியும், நீண்ட நாட்களாகக் கடிதம் எழுதும் பழக்கம் இல்லாமல் போனதும் அவரைத் தனிமை உணர்ச்சிக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக்கியது. அப்போது காந்தி அவரை அந்த சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்து அவரது வாழ்க்கையில் ஒரு தந்தையின் பாத்திரத்தை ஏற்றார்.
ஜெயபிரகாஷின் அனுமதியின்றி பிரம்மச்சர்யம் பூண்டார்
இதனால், பிரபாவதி காந்தியை நோக்கி இன்னும் அதிகம் ஈர்க்கப்பட்டார். 1929 இல் காந்தியடிகள் வங்காளத்திற்கும் பர்மாவிற்கும் யாத்திரை புறப்பட்ட போது, அவர் மிகவும் வருத்தமுற்றார்.
1929 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கத்தாவிலிருந்து காந்தி அவருக்கு ஒரு கண்டனத்தை எழுதினார், "உனது இந்தக் கவலையும் பதற்றமும் எனக்கு வருத்தமளிக்கிறது. நீ அதைக் கைவிட வேண்டும். நீ எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாக தற்சார்புடன் வாழ்ந்தால் மட்டுமே என்னால் உனக்கென்று முக்கியப் பொறுப்புகளை வழங்க முடியும்.' என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு சந்தர்ப்பத்தில், காந்தி ஆசிரமத்தை விட்டு வெளியே செல்லும் போதெல்லாம் தன்னைத் தனியாக விடக்கூடாது என்ற வலியுறுத்தலுக்கு காந்தியடிகள் ஒப்புக்கொண்டார். ஜெயப்பிரகாஷ் நாராயணனுடனான தனது உறவைச் சீர்செய்யவும் ஜேபி-யின் அரசியல் கருத்துக்களைப் புரிந்துகொள்ளவும் நேர்மையான முயற்சியை மேற்கொள்ளுமாறும் காந்தியடிகள் அவரைக் கேட்டுக் கொண்டார்.
ஜெயப்பிரகாஷ் நாராயண் இல்லாத நிலையில், பிரபாவதி தானே பிரம்மச்சரிய விரதம் பூண்டார். அப்போது அவருக்குச் சுமார் 22 வயது தான் இருக்கும்.
பிரபாவதியின் முடிவை விரும்பாத ஜெயபிரகாஷ்
"காந்தியின் ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் மிகப் பெரிய தர்மமாகக் கருதப்பட்டது. பிரபாவதிக்கு இது ஜெயப்பிரகாஷ் நாராயணனைக் கலந்தாலோசிக்காமல் எடுத்த மிகப்பெரிய முடிவு. இந்த முடிவில் காந்தியடிகளுக்குப் பங்கு இருந்தது என்று கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை" என்கிறார் சுஜாதா பிரசாத். காந்திக்கு இது தெரிய வந்ததும் அவர் வருத்தமடைந்து, ஜெயபிரகாஷ் நாராயணனிடம் இதைப் பற்றி முதலில் பேசுங்கள் என்று பிரபாவதிக்கு அறிவுரை கூறினார். ஆனால் பிரபாவதி இந்த முடிவில் பிடிவாதமாக இருந்தார்."
"அவரைப் பொருத்தவரை, இந்த முடிவு, நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பதற்கு சமம். ஜெயபிரகாஷுக்கும் இதே குறிக்கோள் இருந்ததால், ஜெயபிரகாஷ் அதை எதிர்க்க மாட்டார் என்று பிரபாவதி நம்பினார்."
"இதுபற்றி ஜெயபிரகாஷ் நாராயணனுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக ஜெயபிரகாஷ் நாராயண் அவரது முடிவை விரும்பாமல் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற விஷயங்களை ஒன்றாகப் பேசி முடிவெடுக்கவேண்டும். கடிதங்களின் மூலம் இதனைத் தீர்மானிக்க முடியாது என்று அவர் பதில் கடிதம் எழுதினார். "
மறுமண ஆலோசனையை மறுத்த ஜெயபிரகாஷ்
பிரபாவதியின் இந்த முடிவால் மிகவும் வருத்தப்பட்ட காந்தியடிகள், ஜெயப்பிரகாஷ் நாராயணனை மறுமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
பிரபாவதி தன் முடிவை மறுபரிசீலனை செய்யாதது ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும் வருத்தம்தான்.
ஏழு ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து அமெரிக்காவில் படித்து வந்தார். மனைவியின் ஒருதலைப்பட்சமான முடிவு அவரது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்றாலும், இதற்காக அவர் காந்தியை ஒருமுறை கூடக் குற்றம் சொல்லவில்லை. மாறாக, காந்தி அவரை மறுமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியபோது, அவர் அதை விரும்பவில்லை.
ஜேபியுடனான நேருவின் முதல் சந்திப்பு காங்கிரஸ் அமர்வின் போது நடந்தது. இருவரும் ஒருவரால் ஒருவர் ஈர்க்கப்பட்டனர். ஜேபி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். ஆனால் நேரு அவரை அந்தப் பக்கம் போக விடாமல் தடுத்து அலகாபாத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தொழிலாளர் ஆராய்ச்சித் துறையின் தலைவராக மாதம் 150 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தினார்.
பிரபாவதிக்கும் கமலா நேருவுக்கும் இடையிலான நட்பு
ஜேபி பிரபாவதியுடன் அலகாபாத் சென்றடைந்தபோது, நைனி சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, ஸ்வராஜ் பவனில் உள்ள தனது அறையை ஜெயப்பிரகாஷ் மற்றும் பிரபாவதிக்கு வழங்குமாறு தனது தந்தை மோதிலால் நேருவுக்குக் கடிதம் எழுதினார்.
நேரு பிரபாவதி மீது ஒரு சகோதரி போல பாசம் காட்டினார். ஜேபியையும் தனது தம்பியாகப் பாவித்தார்.
"அதே நேரத்தில், பிரபாவதி, நேருவின் மனைவி கமலா நேருவுடன் மிகவும் நெருக்கமாகிவிட்டார். பின்னர், இருவரும் வெவ்வேறு இடங்களில் வாழத் தொடங்கியபோதும், அவர்களுக்கு இடையே கடிதத் தொடர் தொடர்ந்தது. கல்கத்தாவிலிருந்து அவர் எழுதிய ஒரு கடிதத்தில், இந்திரா சாந்திநிகேதனுக்குப் படிக்கச் செல்லவிருந்ததால், பாட்னாவில் உள்ள காதி பண்டாரில் இருந்து தன் மகள் இந்திராவுக்கு விலை மலிவான காதி புடவைகளை வாங்கியனுப்புமாறு பிரபாவதியைக் கோரினார்." என்று சுஜாதா பிரசாத் குறிப்பிடுகிறார்.
நேரு குடும்பத்தினருடன் கைதான பிரபாவதி
அந்நிய ஆடைகளுக்கு எதிரான இயக்கத்தில் கமலா, பிரபாவதி இருவரும் முன்னணியில் இருந்தனர். அந்த நேரத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உத்தரவை எதிர்த்து, இருவரும் அலகாபாத்தின் சிவில் லைன்ஸ் மற்றும் கத்ரா பகுதிகளில் காதி மற்றும் சட்டவிரோத உப்பு விற்கும் இயக்கத்தில் பெண்களை வழிநடத்தினர்.
அலகாபாத்தின் சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டுப் பெண்கள் வெளியே செல்லக் கூடாது என்று மோதிலால் நேரு தெளிவான உத்தரவு விதித்திருந்தார். ஆனால் அவர்கள் அதைக் கேட்கவில்லை.
இதன் விளைவாக, பிப்ரவரி 3, 1932 இல், ஸ்வரூப்ராணி பக்ஷியுடன் பிரபாவதி, கமலா நேரு மற்றும் நேருவின் சகோதரிகள் விஜயலட்சுமி மற்றும் கிருஷ்ணா ஆகியவர்களும் கைது செய்யப்பட்டனர். முதல் சில நாட்கள் அலகாபாத்தில் உள்ள நைனி சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டனர். பின்னர் லக்னோ மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஜெ.பியுடன் அதிக நேரம் செலவிட ஆலோசனை வழங்கிய காந்தியடிகள்
1930 களில், ஜேபி மற்றும் பிரபாவதி முதலில் ஸ்வராஜ் பவனில் சில காலம் வாழ்ந்தனர். பின்னர், ஜே.பி.யின் சோசலிஸ்ட் நண்பர் கங்காசரண் சின்ஹா, பாட்னாவில் உள்ள கதம்குவான் என்ற இடத்தில் அவருக்காக வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்தார்.
இருவருக்குமே வருமானம் இல்லை. சில சமயங்களில் காந்தி அவர்களுக்கு சிறுசிறு நிதி உதவிகளை அனுப்புவார்.
"அந்த நாட்களில் காந்திக்கு பல கடிதங்கள் எழுதி ஜேபி உடனான தனது வாழ்க்கை குறித்த பல சந்தேகங்களை பிரபாவதி எழுப்பினார். காந்தி உடனடியாக பதில் அளித்தார். அவரது சந்தேகங்களைத் தீர்த்து ஜேபியுடன் அதிக நேரம் செலவிடுமாறும் அறிவுறுத்தினார்."
"1940 வாக்கில், ஜேபி - பிரபாவதி இடையே தாம்பத்திய உறவு வலுப்பெற்றது. ஜெயப்பிரகாஷ், உடல் நெருக்கத்திற்கான தனது விருப்பத்தை அடக்கிக்கொண்டு, பிரபாவதியின் மீது எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. பிரபாவதியும் இந்த சிக்கலான, அசாதாரணமான உறுதிப்பாட்டிலிருந்து அசைந்து கொடுக்கவில்லை." என்று சுஜாதா பிரசாத் விவரிக்கிறார்.
17 அடி உயர சுவற்றில் இருந்து குதித்து...
1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஜேபி ஹசாரிபாக் சிறையில் அடைக்கப்பட்டார். தீபாவளி இரவு, ஜேபி, தனது தோழர்களின் உதவியுடன், 17 அடி உயர சுவரில் இருந்து குதித்துச் சிறையில் இருந்து தப்பினார்.
இதற்காகப் பல வேட்டிகளை ஒன்றாகச் சேர்த்துக் கட்டி கயிறு போன்ற ஒன்று தயாரிக்கப்பட்டது, அதன் உதவியுடன் தப்பிய ஜே.பி. பல வழிகளில் மாறுவேடமிட்டு, முதலில் டெல்லியை அடைந்து பின்னர் பம்பாயை (இன்றைய மும்பை) அடைந்தார், அங்கு அவர் அச்யுத் பட்வர்தனைச் சந்தித்தார். இந்தச் சமயத்தில் அவர் பல ரகசியக் கூட்டங்களில் உரையாற்றி, மார்க்சியக் கருத்துகளைப் பரப்பினார்.
அவரைக் கைது செய்ய உதவுபவருக்கு அரசு 5,000 ரூபாய் பரிசு தருவதாக அறிவித்தது. பின்னர் அது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பம்பாயில் தங்கியிருந்தபோது, அச்யுத் பட்வர்தனின் சகோதரி விஜயா பட்வர்தனை ஜேபி சந்தித்தார்.
"விஜயா லண்டனில் படித்தார். ஜேபி தலைமறைவாக இருந்த சமயத்தில் பம்பாயில் இருந்த தனது சகோதரர் வீட்டில் அவர் ஜேபியைச் சந்தித்தார். அவர் அப்போதுதான் படிப்பை முடித்திருந்தார். ஜேபியின் இந்த இயக்கத்தில் பங்கு பெற அவர் ஈர்க்கப்பட்டார்." என்று சுஜாதா பிரசாத் கூறுகிறார்.
நேபாளக் காடுகளில் ஜேபியுடன் இருந்த விஜயா
பின்னர், சுஜாதா பிரசாத்தின் தந்தை பிமல் பிரசாத்தின் நண்பரான ஹிம்மத் சிங், நயா சங்கர்ஷ் என்ற சோசலிச இதழின் அக்டோபர் 11, 1992 பதிப்பை அவருக்கு வழங்கினார்.
இந்த இதழுக்கு அளித்த பேட்டியில் விஜயா பட்வர்தன், "ஜெயபிரகாஷ் நாராயண் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டானது. அதற்குள் ஜெயப்பிரகாஷ் தலைமறைவாகி ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதமேந்திய கொரில்லா படையை உருவாக்கினார். நான் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பினேன். சகோதரர் அச்யுத் இந்த யோசனை வேண்டாம் என்று அறிவுரை கூறினார். ஆனால் நான் அவர் சொல்வதைக் கேட்கவில்லை. மார்ச் 15, 1943 அன்று நான் ஜேபியிடம் சென்றேன். அவருடன் பல இடங்களுக்குச் சென்றேன். பின்னர் நேபாளக் காடுகளில் உள்ள அவரது ரகசிய மறைவிடத்தில் அவருடன் வாழத் தொடங்கினேன்." என்று குறிப்பிட்டிருந்தார்.
"இருவரும் ஒரே குடிசையில் வசிப்பதாக உளவுத்துறை அறிக்கை கூறுகிறது. விஜயா புதிய பெயருடன் புதிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். ஜெயபிரகாஷ் நாராயணின் செயலாளராக அவரது அனைத்து வேலைகளையும் செய்யத் தொடங்கினார். அவர் தலைமறைவாக இருந்தபோது அவர் மாறுவேடமிட்டு, ஜேபிக்காக மக்கள் ஆதரவைத் திரட்டினார். அவர்களின் ரகசிய இருப்பிடம் காவல்துறைக்குத் தெரியவந்ததும் இந்த நட்பு முடிவுக்கு வந்தது."
உளவுத் துறைக் கோப்புகளில் இந்தத் தொடர்புகள் குறித்த குறிப்புகள்
சுஜாதா பிரசாத் தனது புத்தகத்தில் ஜேபி-விஜயா இடையேயான இந்த உறவை மிக விரிவாக விவாதிக்காமல் இரண்டு பத்திகளில் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு என்ன காரணம் என்று நான் அவரிடம் கேட்டதற்கு, "இந்தப் புத்தகம் ஜே.பி.யின் 77 ஆண்டுகால வாழ்க்கையைப் பற்றியது. இதில் விஜயாவுடனான அவரது உறவு இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை" என்று பதிலளித்தார்.
"அதனால், இதற்கு இரண்டு பத்திகளைக் கொடுப்பது மிகவும் பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன். என் தந்தை பிமல் பிரசாத் இந்தப் புத்தகத்தை எழுத விரும்பியதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. என் தந்தை ஜேபி மற்றும் பிரபாவதிஜியுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். என் தந்தை இந்தப் புத்தகத்தில் ஜேபியின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறிப்பிட விரும்பவில்லை. இது ஜேபியுடன் உள்ள தனது விசுவாசத்தைக் குறைக்கும் என்று அவர் நம்பினார்." என்கிறார் சுஜாதா பிரசாத்.
"இந்தப் புத்தகத்துக்கான தகவல்களைச் சேகரிக்கும் போது விஜயா அண்ணனின் மகள் வழிப் பெயர்த்தியை மகளை நான் சந்தித்தது எனது அதிர்ஷ்டம், அவரிடமிருந்து ஜே.பி.யின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். பிகாரிலும், நாட்டிலும் ஜேபி பக்தி தவறாகப்பார்க்கப்பட இது காரணமாகிவிடக் கூடாதே என்று நான் அஞ்சினேன். எனவே இதற்கான ஆதார ஆவணங்களைப் பார்க்க விரும்பினேன். தற்செயலாக நான் அப்போது இந்திய அரசில் பணிபுரிந்து வந்தேன். உள்துறை அமைச்சகத்தின் பழைய கோப்புகளைப் பார்ப்பது எனக்கு எளிதாக இருந்தது. உளவுத்துறைக் கோப்புகளில் இது தொடர்பான குறிப்புகள் இருந்தன."
தனிமையில் வாழ்ந்த விஜயா பட்வர்தன்
ஜே.பி.யால் அதிக காலம் பகிரங்கமாக வெளியே வாழ இயலவில்லை. செப்டம்பர் 19, 1943 அன்று, அவர் ஃபிரான்டியர் மெயில் மூலம் ஆப்கானிய கிளர்ச்சியாளர்களைச் சந்திக்க டெல்லியிலிருந்து ராவல்பிண்டிக்குச் சென்றபோது, லாகூர் காவல்துறைத் தலைவர் வில்லியம் ராபின்சன் அவரை அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் கைது செய்தார். அவர் லாகூர் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்ட செய்தியை மறைக்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்தது, ஆனால் இந்தச் செய்தி நாடு முழுவதும் பரவியது.
"போலீஸுக்கு அவர்கள் இருக்கும் இடம் தெரிந்ததும், ஜேபி, விஜயாவைக் கல்கத்தாவுக்கு அனுப்பி வைத்தார். அதன் பிறகு விஜயா, புனேவில் உள்ள தன் பரம்பரை வீட்டிற்கு வந்தார். அவள் மன நலம் பாதிக்கப்பட்டவராக அறிவிக்கப்பட்டார். ஜேபியின் மீதான ஈடுபாட்டை மறக்க, அவருக்கு மின்சார அதிர்ச்சி கூட வழங்கப்பட்டது. ஜே.பி.யைப் பிரிந்த உடனேயே தலைமறைவு இயக்கத்தில் விஜயாவின் பங்கு ஒருவகையில் மறக்கப்பட்டது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தனிமையில் கழித்தார். அதன்பிறகு அவருக்கும் ஜே.பி.க்கும் இடையே பெரிய அளவில் தொடர்பு எதுவும் இல்லை." என்று சுஜாத பிரசாத் கூறுகிறார்.
நெருக்கமான ஜெயபிரகாஷ்-பிரபாவதி உறவு
1948 வாக்கில், ஜெயபிரகாஷ் மற்றும் பிரபாவதியின் வாழ்க்கையில் ஒரு சிறிய தேக்க நிலை ஏற்பட்டது. ஏப்ரல் 1, 1949 அன்று, டால்டன் கஞ்சில் ஜே.பி.யின் கை எலும்பு முறிந்த போது, பிரபாவதி அவரைக் கவனித்துக்கொண்டார். 1952ல் புனேவில் நீண்ட உண்ணாவிரதம் இருந்தபோது, பிரபாவதியும் உடன் இருந்தார்.
பாட்னாவில் உள்ள அவரது வாடகை வீடு சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களின் விருந்தோம்பலுக்கு எப்போதும் தயாராக இருந்தது. அவர்களின் தேவைகளைப் பிரபாவதி கவனித்துக் கொண்டார்.
ஜே.பி.யுடன் நெருக்கமாக இருந்த கமலாதேவி சட்டோபாத்யாய, ஜே.பி.யின் வாழ்க்கையில் பிரபாவதியின் பங்கு பற்றி எழுதியுள்ள 'இன்னர் ரேசஸஸ் அவுட்டர் ஸ்பேசஸ்' என்ற புத்தகத்தில், "பிரபாவதி ஜே.பி.யுடன் மிகவும் பற்று கொண்டிருந்தார். அவருக்கு ஒரு கர்வமே இருந்தது. ஜே.பி.யின் பக்கத்தில் இருந்தபோதெல்லாம் அவரது கண்களில் இருந்த மரியாதையை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருந்தாலும் அவரது கவனம் எப்போதும் ஜேபியை நோக்கியே இருந்தது. ஆனால் அவருடைய பலவீனங்களைப் பற்றியும் தெரிந்திருந்தாலும் புன்னகைத்து அவற்றைப் புறக்கணித்தார்." என்று எழுதியுள்ளார்.
பிரபாவதி மரணத்தால் இந்திரா - ஜேபி இடையே விரிசல்
1973 ஆம் ஆண்டில், பிரபாவதியின் கருப்பையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜேபியின் தனிப்பட்ட வாழ்க்கை ஸ்தம்பித்தது. ஜே.பி., அவரை அறுவை சிகிச்சைக்காக பம்பாயில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவருக்குக் காய்ச்சல் குறையவில்லை.
மார்ச் மாதத்திற்குள், புற்றுநோய் அவரது வயிறு மற்றும் கல்லீரலையும் பற்றிக் கொண்டது. ஆனால் அவர் இந்த நோயை இறுதிவரை மிகவும் தைரியமாக எதிர்த்துப் போராடினார்.
ஏப்ரல் 15, 1973 அன்று பிரபாவதி இவ்வுலகிலிருந்து விடைபெற்றார்.
அவரது மரணத்திற்குப் பிறகு, ஜேபி இந்திரா காந்திக்கு எழுதிய கடிதத்தில், "பிரபாவதி என் வாழ்க்கையில் நிறைய அர்த்தப்படுத்தினார். அவள் என்னிலும் என் வாழ்க்கையிலும் ஒரு பெரிய பகுதியாக இருந்தாள், அவள் இல்லாமல் நான் இந்த உலகில் வாழ முடியாது," என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரபாவதியின் மரணத்துக்குப் பிந்திய காலத்தில், ஜெ.பி மற்றும் இந்திரா உறவில் இருந்த பரிவு குறைந்து நாளடைவில் இருவரும் விரோதிகளாக மாறினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்