தென் மேற்கு பருவமழை: தமிழக ஆறுகளில் வெள்ளம் - கள நிலவரம்

இந்தியாவின் தென் மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்திருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் மாநிலங்களில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நிரம்பிய நிலையில் அந்த அணையிலிருந்து 16 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பில்லூர் அணையின் நீரும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையின் நீரும் வந்துகொண்டிருப்பதால் பவானி சாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அணையான மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை ஏற்கனவே எட்டியுள்ள நிலையில், அந்த அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு இரண்டு லட்சம் கன அடியைத் தாண்டியுள்ளது.
இதனால், அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. நேற்று மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்ட நிலையில் இன்று பகல் 12:00 மணி நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 1,81,000 கன அடியாக இருந்தது.
திறக்கப்பட்ட அணைகள்- பெருக்கெடுத்த வெள்ளம்
நீர் வெளியேற்றத்தைப் பொறுத்தவரை, அணையின் நீர் மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 23,000 கன அடியும், 16 கண் மதகு வழியாக 1,57,000 கன அடியும் என மொத்தம் 1,80,000 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்காக விநாடிக்கு 400 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பு 93.550 டிஎம்சி. அணையின் நீர்மட்டம் 120.05 அடியாக உள்ளது. கால்வாய் பாசனத்திற்கு 400 அடி திறக்கப்படுகிறது.
அணைக்கு நீர் வரத்து குரைந்ததால் காலை 10 மணியிலிருந்து அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1 லட்சத்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது.
திருச்சி முக்கொம்பில் இருந்து இன்று காலை 8 மணி நிலவரப்படி கொள்ளிடத்தின் வழியாக வினாடிக்கு 1லட்சத்து 38 ஆயிரத்து 712 கனஅடியும், காவிரியில் 66,396 கனஅடியும் திறக்கப்பட்டது.
கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் வினாடிக்கு 50,520 கனஅடி திறக்கப்படுவதால் மொத்தமாக கொள்ளிடத்தில் வினாடிக்கு 2 லடசத்து 5ஆயிரத்து 108 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் முழுவதும் கீழணை வழியாக கடலுக்கு திறக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிலவரம்
திருச்சி மாவட்டம் வரை காவிரியிலும், அதன் பிறகு கொள்ளிடத்திலும் வெள்ளம் அபாய கட்டத்தில் செல்கிறது. எனவே காவிரி, கொள்ளிடத்தில் மக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
திருச்சியில் ஆற்றின் கரையோரமாக வசிப்பவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆறு மையங்களில் 308 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. முக்கொம்பு பகுதியில் 250 ஏக்கர் அளவுக்கு வாழை சேதமடைந்துள்ளது.
இதுபோல, அனைத்து இடங்களிலும் காவிரிக்கு செல்லும் பாதை தடுக்கப்பட்டு எச்சரிக்கை வாசகம் ஒட்டப்பட்டுள்ளது. பல இடங்களில் காவல் துறையினர், கிராம நிர்வாக அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் காரணமாக கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலத்தின் வழியாக வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக தவிட்டுப்பாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், தோட்டங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
மேலும் காவேரி கரையோரம் உள்ள தளவாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பகுதியில் காவேரி கரையோரம் இருந்த 10 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பராய்த்துறை, பெருகமணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காவேரி கரையோரம் வசித்த மக்கள் பெருகமணியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவிரி ஆற்றில் பெருமளவுக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் ஆற்றங்கரையில் உள்ள பல வீடுகளுக்கு வெள்ள நீர் புகுந்துள்ளது.

வைகையில் வெள்ளம்
வைகை அணையின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் கன மழையின் காரணமாக, வைகை அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், அணை திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் மதுரை நகரைக் கடந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இதனால், மதுரை நகரின் மையப் பகுதியில் உள்ள கல் பாலம் நீரில் மூழ்யிருக்கிறது.
வெள்ள நீர் நாளை ராமநாதபுரம் மாவட்டத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைகை ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்வதையும் குளிப்பதையும் கால்நடைகளைக் குளிக்க வைப்பதையும் தவிர்க்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கும் மேலாக பெய்த பெய்து வரும் தொடர் கன மழையால் 5 வது நாளாக பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருவதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு நலன்கருதி போலீசார் அருவியில் குளிக்க தடை இன்று 5வது நாளாக விதித்துள்ளனர்.
கல்வி நிலையங்களுக்கு விடுமுறை
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அறிவித்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் அதி கன மழைக்கான சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், இன்றும் அங்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ருத் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வெள்ளமீப்பு பணியில் ஆறு குழுக்களும், மத்திய அரசின் பேரிடர் மீட்பு பணிகளில் 5 குழுக்களும் மொத்தம் 312 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைச்சர் K.K.S.S.R.ராமசந்தரன் கூறியுள்ளார்.

மற்ற இடங்களின் நிலை
நேற்று வேலூரில் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை அருகே நம்பியம்பட்டு பகுதியில் தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளம் சென்ற நிலையில், அதனை இருசக்கர வாகனத்தில் ஒருவர் கடக்க முயன்றபோது அவரது வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தொடர்ந்து பெய்த மழையால் மணலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால் 20க்கும் அதிகமான கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பெய்த கன மழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூரைச் சேர்ந்தக் கட்டுமானத் தொழிலாளி அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றபோது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை, சுருளி அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த அருவிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் வரதமாநதி நீர்த்தேகம் நிரம்பியுள்ளது. குதிரையாறு அணை நிரம்பியதால் அந்த அணையும் திறக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் கனமழையால் ஆழியார் அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கிறது. அங்குள்ள எல்லா அருவிகளிலுமே வெள்ளம் கொட்டுகிறது.
டெல்டா பகுதிகளில் என்ன நிலை?

ஒகேனக்கல் பகுதியில் வெள்ளப் பெருக்கால் காவிரி கரையோர வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீரை வெளியேற்றி வருவதாலும் வசிப்பிடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.
காவிரி கரையோர கிரமங்களான சத்திரம், ஊட்டமலை, நாடார் கொட்டாய் , ஆலம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் அந்தப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், தற்போது 1 லட்சத்தி 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பருத்தி, வாழை, கரும்பு, மஞ்சள், தென்னை, வெண்டை, சோளம் ஆகியவை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
குமாரபாளையம் காவிரி கரையோர பகுதிகளான கலைமகள் தெரு இந்திரா நகர், பழைய காவிரி பாலம் அருகே உள்ள அண்ணா நகர், மணிமேகலை தெரு இந்திரா நகர், ஆகிய பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காவிரி நீர் புகுந்தது. இங்கு குடியிருந்த நபர்கள் புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளி, மற்றும் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பள்ளிபாளையம் பகுதியிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் , அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. அதேபோல் முனியப்பன் கோவிலுக்கு செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 200 வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்களை அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பவானி தினசரி மார்க்கெட் அருகே உள்ள பரமேஸ்வரர் வீதி, பூக்கடை அருகே உள்ள பாலக்கரை மற்றும் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவிரி நகர், காவிரி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி 2,15,870 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மாவட்டத்தின் தாழ்வான பகுதியான தவிட்டுப்பாளையம் பகுதிகளில் குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் புகுந்து வருகிறது. 30 க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் அந்த வீட்டில் இருந்தவர்களை அருகில் உள்ள சமுதாய கூடம் மற்றும் கிராம சேவை மைய கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் உள்ள 148 வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேறும்படி காவல் துறையினரும், வருவாய் துறையினரும் அறிவுறுத்தி வருகின்றனர். தற்போது வரை 101 குடும்பங்களை சார்ந்த 301 பேர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ உதவியுடன், உணவுகளும் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
முக்கொம்பு அணைக்கு சுமார் வினாடிக்கு 2.5 லட்சம் கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு கொள்ளிடம் ஆற்று பகுதியில் 1.3லட்சம் கன அடியும் காவிரி பகுதிக்கு நொடிக்கு 66.39 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் பகுதி மற்றும் காவிரி கரையோர பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொள்ளிடம் ஆறு பகுதியான திருவளர்ச்சோலை மற்றும் உத்தமர்சீலியில் தரைப்பால மூலமாக தண்ணீர் கடந்து அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்றதால் அங்கு பயிரிடப்பட்டுள்ள சுமார் 250 ஏக்கர் வாழை நீரில் மூழ்கின.
இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்து உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், ஆலங்குடி மகாஜனம் ஊராட்சிக்குட்பட்ட கே.வி.பேட்டை,திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் பகுதியில் உள்ள பிச்சாண்டார் கோவில், வாழவந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து அதன் காரணமாக தண்ணீர் மிகுந்து செல்வதையடுத்து அப்பகுதியில் உள்ள சர்ச், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காவிரி கரையோர பகுதிகளில் இருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என காவிரி ஆற்றுக்கு குளிக்கவும் துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் எச்சரித்துள்ளார். மேலும் இப்பகுதி முழுவதும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்ளிடம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆளக்குடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் லலிதா, எஸ்.பி நிஷா ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் கடந்த 2005 மற்றும் 2018 ஆம் ஆண்டு வெள்ள பெருக்கு ஏற்பட்டபோது அளக்குடி பகுதியில் ஆற்றின் கரையில் அரிப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த பகுதி சீரமைக்கப்பட்டது.
தற்போது அந்த பகுதியில் பாதிப்பு ஏற்படாதவாறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து 2 லட்சம் வரை தண்ணீர் வர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளான முதலை மேடு திட்டு, வெள்ளமணல், நாதல் படுகை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டு அப்பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக முகாம்களில் வந்து தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆற்று தண்ணீர் கொள்ளிடம் வழியாக பழையார் கடலில் கலந்து வருவதால் தண்ணீர் தேக்கமில்லாமல் உள்ளது. பொதுமக்கள் தங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வெள்ள நீரில் நனையாதவாறு பாதுகாத்துக் கொள்ளவும். முகாம்களில் தங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றார்.
முதல்வர் அறிவுரை

நேற்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் , முதன்மை செயலாளர் உள்ளிட்ட வருவாய், பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
அந்த கூடத்தில் முதலமைச்சர் பேசும்போது, மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள 2 லட்சம் கன அடி நீரால், ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தினார். இரவு நேரத்தில் தண்ணீர் வெளியேற்ற கூடாது எனவும், முன்னறிவிப்பின்றி தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும், மருத்துவ முகாம்களை அமைத்து , நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அவசர கட்டுப்பாட்டு மையம் பேரிடர் தொடர்பான தகவல்களை 24 மணி நேரமும் செயல்படும் மாநில, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்களை 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும், 94458-69848 என்ற வாட்ஸ் அப் மூலமும் பொதுமக்கள் புகார் செய்யலாம் என்பது குறித்து அறிவிப்பு வெளியிடவும் உத்தரவிட்டார்.
வானிலை முன்னறிவிப்பு
தமிழ்நாடு, புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












