காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏராளமான பகுதிகள் நீரில் மூழ்கியதோடு, பல இடங்களில் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, 12 டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர பகுதி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து, மக்கள் அருகிலுள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோரப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாலத்துக்கு மேலே வெள்ளம் பாயும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நீருக்குள் வண்டி ஓட்டினர். அப்போது ஒருவர் ஆற்றுக்குள் விழுந்த காட்சியும் வெளியாகியுள்ளது.
ஒகேனக்கலில் கரைபுரண்டு ஓடும் நீர்
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையில் இருந்து 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. ஒகேனக்கல்லில் தண்ணீர் அருவிகளை மூழ்கியவாறு கரைபுறண்டு ஓடுகிறது. நீர் வரத்து குறித்து மத்திய நீர்வளத்துறையினர் தொடர்ந்து பிலிகுண்டுவில் நீர் அளவு செய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். நேற்றிரவே காவிரி கரையோர பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
12 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் அதிகரித்துள்ளது. அனல் மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மூலம் 23000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 16 கண் பாலம் வழியாக 1,87,000 கன அடி என 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் - எடப்பாடி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பால் மேட்டூரிலிருந்து சங்கிலி முனியப்பன் கோயில், பொறையூர், ரெட்டியூர், எடப்பாடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு உள்ளது. மேலும் காவிரி கரையோர கிராமங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் . சேலம் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே போல ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் தற்போது 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பவானியில் உள்ள காவேரி வீதி, கந்தன் தெரு, செம்படவர் வீதி பழைய பஸ் நிலையம் பகுதி காமராஜர் நகர் காவிரி கரை பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த 400க்கும் மேற்பட்டவர்கள் திருமண மண்டபங்கள், பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதே போல மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்தி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீருடன் அமராவதி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர், திருப்பூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெய்த மழைநீருடன் சேர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த கதவணையில் வரும் மொத்த நீரையும் 93 மதகுகள் வழியாக அப்படியே வெளியேற்றப்படுகிறது.
இதனால் 12 டெல்டா மாவட்டங்களில் காவிரிக்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தில் சிக்கிய முதியோர்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர், செல்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மேடான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஒகேனக்கல் அருவிக்கு செல்லும் நடைபாதையில் பென்னாகரம் அருகேயுள்ள அத்திமரத்தூர் கிராமத்தை சேர்ந்த குருசாமி, பங்காரு அம்மாள் ஆகிய வயது முதிர்ந்த தம்பதியினர் இருவர் ஆற்றின் நடுவில் கோவில் கட்டி, கோவிலிலேயே தங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் வயது முதிர்ந்த இருவரும் ஆற்றின் நடுவில் அமைந்துள்ள கோவிலில் மாட்டிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையின் மீட்பு குழுவினர், தம்பதியினரை துரிதமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கயிற்றின் மூலம் பிளாஸ்டிக்கால் ஆன ஸ்டெரச்சரில் குருசாமியை கட்டி இக்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்தனர். இதே போல பங்காரு அம்மாவையும் மீட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்றது . இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












