அம்பானி vs அதானி: 5ஜி உரிமத்துக்கு போட்டி போடும் பெரு முதலாளிகள்

நாட்டின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலத்தில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நாட்டின் மிகப்பெரிய அலைக்கற்றை ஏலத்தில் இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்றன
    • எழுதியவர், நிகில் இனாம்தார்
    • பதவி, பிபிசி வணிக செய்தியாளர், மும்பை

5ஜி அலைக்கற்றைகளுக்கான இந்தியாவின் மிகப்பெரிய ஏலம் ஏழு நாட்களுக்குப் பிறகு முடிவடைந்துள்ளது. இது இந்தியாவின் எதிர்கால டிஜிட்டல் உலகில் மேலாதிக்கம் செலுத்தப்போகும் சாத்தியம் மிக்க களத்தை ஆசியாவின் இரண்டு பணக்காரர்களான கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி இடையே அமைத்துள்ளது.

ஏலத்தில் மொத்தமாக 72 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் இருந்தது. இந்தியாவின் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், சலுகையில் 71% விற்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அம்பானியின் ரிலையன்ஸ்-ஜியோ, வோடஃபோன் ஐடியா, பார்தி ஏர்டெல் ஆகிய மூன்று நிறுவனங்களிடமிருந்தும் நான்காவதாகவும் புதிதாகவும் நுழைந்த அதானி டேட்டா நெட்வொர்க்குகளிடம் இருந்தும் சுமார் 19 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏலங்களை அரசாங்கம் எடுத்துள்ளது.

சிஆஎஸ்ஐஎல் (CRISIL) ஆராய்ச்சியின்படி, கடந்த மார்ச் 2021-இல் நடந்த ஏலத்தில் இருந்ததைவிட இந்த முறை, மொத்த ஏலங்கள் இரண்டு மடங்காக அதிகரித்து எதிர்பார்ப்புகளை விஞ்சியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ, 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் வாங்கும் மிகப்பெரிய ஏலதாரராக உருவெடுத்தாலும், அதானி குழுமம் 26 மில்லியன் டாலர் மட்டுமே செலவிட்டது. மீதமுள்ள ஏலங்கள் பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியாவிலிருந்து வந்தன.

பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை பான் இந்தியா ஏர்வேவ்களுக்காக ஏலம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. பணமில்லா வோடஃபோன் ஐடியா அதற்கான முன்னுரிமை துறைகளில் மட்டுமே செலவு செய்தது.

"ஜியோ நாடு தழுவிய ஃபைபர் இருப்பு மற்றும் தொழில்நுட்ப சுழலியல் அமைப்பு முழுவதும் உள்ள வலுவான உலகளாவிய கூட்டாண்மை காரணமாக குறுகிய காலத்தில் 5ஜி வெளியீட்டிற்கு முழுமையாகத் தயாராக உள்ளது," என்று ரிலையன்ஸ் ஜியோ ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துறைமுகங்கள் அல்லது விமான நிலையங்கள் போன்ற குறிப்பிட்ட பகுதிகளில் அணுகக்கூடிய தனியார் அலைக்கற்றையை அதானி குழுமம் ஏலம் எடுத்தது. இந்தத் துறையில், இந்நிறுவனம் ஏற்கெனவே அதிக முதலீடு செய்துள்ளது.

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இப்போது இந்தியாவின் இணைய சந்தையில் நன்கு அறியப்பட்ட பெயர். ஆனால், ஆச்சரியமளிக்கக்கூடிய வகையில் அதானியும் ஏலதாரராக உள்ளார். அவர் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் அதிகாரத்தைப் பரவலாகக் கொண்டிருக்கும் வணிகத்தைக் கட்டுப்படுத்துகிறார். மேலும் சமீபத்தில் 112 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர மதிப்போடு பில்கேட்ஸை முந்திக்கொண்டு, உலகின் நான்காவது பணக்காரர் ஆனார்.

அதானி குழுமம் தனியார் அலைக்கற்றைக்கு வெளியே பரந்த சந்தையில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறியிருந்தாலும், இது அந்தத் திசையில் செல்வதற்கான முதல் படியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

"வரவிருக்கும் ஏலத்தில் அதானி குழும ஸ்பெக்ட்ரத்தை வாங்கினால், அது போட்டியை அதிகரிக்கக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். அதானி குழுமம் காலப்போக்கில் நுகர்வோர் மொபைல் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான கதவுகளைத் திறக்கும்," என்று கோல்ட்மேன் சாக்ஸ் ஒரு குறிப்பில் கூறினார்.

இந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஆண்டு அக்டோபரில் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நடவடிக்கை வோடஃபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களை நடுங்க வைக்கும். ரிலையன்ஸ் ஜியோ 2016 நுழைவு விலைகளைக் குறைத்தபோது தொடங்கப்பட்ட கட்டணப் போர்களால் இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இன்னும் தத்தளிக்கின்றன. இப்போது, அவர்கள் மற்றோர் பெரிய பில்லியனரிடம் இருந்து அதிக போட்டிக்கான வாய்ப்பை எதிர்கொள்கின்றனர்.

அம்பானியை பொறுத்தவரை, அவர் இதுவரை தனது தளமாகத் தெளிவாகக் கட்டுப்படுத்தியதில், போட்டியாளருடன் எதிர்பாராமல் நேருக்கு நேர் மோதுகிறார்.

இந்தியாவில் 5ஜி அறிமுகமானது, அதிவேக இணையத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குகிறது. காணொளிகளை நொடிகளில் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கிறது. அதோடு கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பங்கள் மூலம் மேம்பட்ட இணைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துவதைச் சாத்தியமாக்குகிறது.

அதிக வேகத்துடனான இணையத்தை சலுகையாக வைத்து, இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கு அதிக விலையை வசூலிப்பதன் மூலம் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலான 2ஜி அல்லது 3ஜி திட்டங்களுடன் ஒப்பிடும்போது 4ஜி திட்டங்களுக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதைத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன.

5ஜி கட்டணத் திட்டங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அதிக வருவாயை ஈட்ட வழிவகுக்கும் என்று நோமுராவின் குறிப்பு தெரிவிக்கிறது.

13 இந்திய நகரங்கள் 5ஜி சேவைகளைப் பெறத் தயாராக உள்ளன

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 13 இந்திய நகரங்கள் 5ஜி சேவைகளைப் பெறத் தயாராக உள்ளன

ஆனால், 5ஜி அலைக்கற்றைக்கு மெதுவாகச் செல்லும். குறிப்பாக அதிக விலைகளின் சாத்தியக்கூறுகள் மற்றும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்ஃபோன் தளத்தில் 7% ஸ்மார்ட்ஃபோன்களில் மட்டுமே 5ஜி வசதி அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகான ஏழு கட்ட ஏலங்களோடு ஒப்பிடும்போது, இந்த ஏலத்தின் மூலம் அதிகபட்ச வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை, வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான இடைவெளி, 6.4 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் அரசாங்கத்தின் நிதிகளை உயர்த்த உதவும்.

இந்திய தொலைத்தொடர்புத் துறை அடுத்த 20 ஆண்டுகளில் 1.6 பில்லியன் டாலரை முன்பணமாகப் பெறும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் அலைக்கற்றைகளை ஒதுக்குவதை அரசாங்கம் முடித்து, இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கத்தில் 5ஜி சேவைகளை வெளியிடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ஓராண்டுக்குள் நாட்டில் 5ஜி சேவையை நல்ல முறையில் வெளியிட வேண்டும்," என்று வைஷ்ணவ் கூறினார்.

காணொளிக் குறிப்பு, நெகிழியின் வரலாறு என்ன? அதன் பயன்பாட்டை தவிர்ப்பது சாத்தியமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: