You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒரே ஊசியை கொண்டு 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்திய சுகாதார ஊழியர்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சுகாதார ஊழியர் ஒருவர் ஒரே ஊசியை கொண்டு 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சாகர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அங்கு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் கோவிட் - 19 தடுப்பு மருந்தைப் பொறுத்த வரை "ஒரு ஊசி ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்" என்ற அறிவுறுத்தல்கள் உள்ளன.
இதுவரை இந்தியாவில் சுமார் 2 பில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் எச்ஐவி போன்ற நோய்களைத் தடுப்பதற்காக ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஊசி மட்டுமே நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இருப்பினும் ஊசிகள் தட்டுப்பாடு காரணமாக இதற்கு முன்னர் சில நேரங்களில் ஒரு முறைக்கும் மேல் ஊசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஊசியை செலுத்திய சுகாதார ஊழியர் ஜித்தேந்திர ராய், சுகாதாரத் துறை தனக்கு ஒரே ஒரு ஊசியை மட்டுமே வழங்கியது என்றும் தான் ஆணைகளை மட்டுமே பின்பற்றியதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்தார்
குழந்தைகளுடன் வந்த பெற்றோர் ஒரே ஊசி பல குழந்தைகளுக்கு பயன்படுத்தவதை கண்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.
மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு வந்த பின்பு ராயை பள்ளியில் காணவில்லை. அவரின் அலைப்பேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
மாநில சுகாதாரத் துறை அவரின் மீது கவனக் குறைவாக நடந்து கொண்ட குற்றத்திற்காக வழக்குப் பதிவு செய்துள்ளது. அதேபோல தடுப்பூசிக்கான உபகரணங்களை வழங்கும் அதிகாரிகள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இது குறித்து பேசுகையில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.
சீனாவுக்கு பிறகு இந்தியாதான் 2 பில்லியனுக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ளது. ஜூலை மாதம், 75ஆவது சுதந்திர ஆண்டை அனுசரிக்கும் விதமாக 75 நாட்கள் இலவச கோவிட் பூஸ்டர் திட்டத்தை அரசு அறிவித்தது.
இந்தியாவில் 98 சதவீத பெரியவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசி செலுத்தி கொண்டனர் மற்றும் 90 சதவீதம் பேர் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமையன்று இந்தியாவின் ஒரு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை 18 ஆயிரத்து 313 ஆக இருந்தது. மேலும் 57 உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்