You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஊரடங்கு முடிவைப் பற்றி தகவல் தெரிவிக்க பிரதமர் அலுவலகத்திற்கு அளிக்கப்பட்ட உத்தரவு
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு பொதுமுடக்கம் விதிக்கும் பிரதமரின் அறிவிப்புக்கு முன்னர் எந்தெந்த துறைகளிடம் விவாதிக்கப்பட்டன மற்றும் பிரதமர் மோதி இந்த முடிவை எவ்வாறு எடுத்தார்?
பிபிசி சார்பில், தகவல் அறியும் உரிமையின் (ஆர்டிஐ) கீழ் பிரதமர் அலுவலகத்திடம் (பிஎம்ஓ) தகவல் கோரப்பட்டது. ஆனால் தகவல் மறுக்கப்பட்டது.
தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும், கோரப்பட்ட தகவல்களை புள்ளி வாரியாக வழங்குமாறும், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் (சிஐசி), பிரதமர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஆர்டிஐக்கு பிரதமர் அலுவலகம் அளித்த முதல் பதிலை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்றும் "தகவல் அறியும் உரிமையின் விதிகளுக்கு முரணானது" என்றும் தகவல் ஆணையம் கூறியுள்ளது.
பிபிசி செய்தியாளரின் மேல்முறையீட்டை விசாரித்த தலைமை தகவல் ஆணையர் ஒய்.கே.சின்ஹா, ஜூலை 11ஆம் தேதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமையின் கீழ், இந்த விண்ணப்பம் 2020 நவம்பரில் அளிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமையின் கீழ், பிரதமர் அலுவலகத்திடம் இருந்து தகவல் கோரப்பட்டது. எந்தெந்த அதிகாரிகள், அமைச்சகங்கள் மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது மற்றும் லாக்டவுனை விதிக்கும் முன் மாநில முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா என்றும் கேட்கப்பட்டது. அதை கீழே உள்ள ஸ்கிரீன்ஷாட்டில் பார்க்கலாம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 7(9) பிரிவைக் காரணம் காட்டி பிரதமர் அலுவலகம் தகவல் அளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டையும் பிரதமர் அலுவலகம் நிராகரித்தது.
இதையடுத்து தகவல் ஆணையரிடம் மனு சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
RTIயின் பிரிவு 7(9) என்ன சொல்கிறது?
பொதுவாக கோரப்படும் வடிவத்தில் தகவல் வழங்கப்பட வேண்டும் என்று அது கூறுகிறது, பொது அதிகார வளங்களைத்தாண்டி தகவல் பெறப்பட வேண்டியிருந்தால் அல்லது சம்பந்தப்பட்ட ஆவணங்களின் பாதுகாப்பிற்குத் தீங்கு விளைவிப்பதாக இருந்தால், அந்த தகவல்கள் கோரிய வடிவத்தில் கொடுக்கப்படமாட்டாது என்றும் இந்தப்பிரிவு தெரிவிக்கிறது.
இந்த ஏற்பாடு தகவல் கொடுக்கும் வடிவத்தைப் பற்றியது. இதில் அரசுத் துறைக்கு, தகவல் கொடுப்பதில் இருந்து விலக்கு இல்லை.
இந்த செய்தியாளரின் மேலும் இரண்டு மேல்முறையீடுகள் மீது தலைமை தகவல் ஆணையர் முடிவெடுத்துள்ளார். இவற்றிலும், லாக்டவுன் தொடர்பான தகவல்களை அளிக்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
பிரதமர் அலுவலகத்தைப் போலவே, 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜனவரியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆர்டிஐயின் கீழ், நாடு தழுவிய லாக்டவுனை விதிக்கும் முடிவு குறித்து அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டதா என்றும் அமைச்சகம் என்ன யோசனைகளை தெரிவித்தது என்பது குறித்தும் கேட்கப்பட்டது. இந்த மனுவின் ஸ்கிரீன் ஷாட்டை கீழே காணலாம்.
மத்திய உள்துறை அமைச்சகமும் கேட்ட தகவல்களைத் தரவில்லை.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1) (a) பிரிவின் கீழ் தகவல் அளிக்க அமைச்சகம் மறுத்துவிட்டது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, அறிவியல் அல்லது பொருளாதார நலன்கள், வெளி நாடுகளுடனான உறவுகள் அல்லது குற்றத்தைத் தடுப்பது போன்றவற்றை பாதிக்கக்கூடிய தகவல்கள் அளிக்கப்படமாட்டாது என்று இந்தப்பிரிவு கூறுகிறது.
இது தவிர, பிரிவு 8(1)(e)யும் மேற்கோள் காட்டப்பட்டது. ஆனால்,ஆர்டிஐ சட்டத்தின் பிரிவு 8(1)(j), தனிப்பட்ட தகவல் தொடர்பான மற்றும் பொது நலன் இல்லாத அல்லது ஒரு நபரின் தனியுரிமையை மீறாத தகவல்களை வெளியிடுவதற்கு விலக்கு அளிக்கிறது.
பின்னணி என்ன?
இந்த ஆர்டிஐ மனுக்கள், பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசுகள், சுகாதாரம், தொழிலாளர், நிதி, உள்துறை அமைச்சகங்கள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) மற்றும் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர் அலுவலகங்கள் ஆகியவற்றிடம் அளிக்கப்பட்ட 240க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களின் ஒரு பகுதியாகும். .
பிரதமர் நரேந்திர மோதி லாக்டவுனை அறிவிப்பதற்கு முன்பு ஒவ்வொரு அமைச்சகமும் என்ன வகையான தயாரிப்புகளைச் செய்தன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஆறு மாத கால முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பிரதமர் நரேந்திர மோதி நான்கு மணி நேரத்திற்குள் பொதுமுடக்க உத்தரவை விதித்தார்.
பொதுமுடக்கம் விதிக்கப்படுவதற்கு முன்பு இந்த அமைப்புகள் அல்லது வல்லுநர்கள் எவரும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவோ அல்லது முடிவில் அவர்களுக்குப் பங்கு இருந்ததாகவோ எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை.
லாக்டவுன் விதிக்கப்படுவதற்கு முன்பு பிரதமர் என்டிஎம்ஏவின் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை என்று அந்த அமைப்பிடமிருந்து பெறப்பட்ட தகவல் தெரிவிக்கிறது. பிரதமர்தான் என்டிஎம்ஏவின் தலைவர் என்பது இங்கே கவனிக்கத்தக்கது. பிரதமர் நரேந்திர மோதி லாக்டவுனை அறிவித்தபோது, நாட்டில் 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ஒன்பது பேர் உயிரிழந்திருந்தனர்.
நிபுணர்களை மேற்கோள் காட்டி அரசு பொதுமுடக்கத்தை நியாயப்படுத்தியது. அந்த நேரத்தில் ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட குறைந்தது ஒரு கோடி பேர், வேலை இழப்பு மற்றும் பணிநிறுத்தம் காரணமாக தங்கள் கிராமங்களுக்கும் சொந்த ஊர்களுக்கும் திரும்ப வேண்டியிருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்