பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு

(இன்று (28.07.2022) தமிழ்நாடு, இலங்கையின் நாளிதழ்கள் மற்றும் இணையங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்குகிறோம். )

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசாங்கம் ரூபாய் 1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளதுள்ளதாக 'தி ஹிந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பங்களிப்பில் 43,964 கோடி ரூபாய் பணமாகவும், சுமார் 1.2 லட்சம் கோடி பணம் சாராத பங்களிப்பாகவும் வழங்கப்படுகிறது. பணம் சாராத பங்களிப்பில் ரூ.44,993 கோடி ரூபாய் மதிப்புள்ள 4G அலைக்கற்றை ஒதுக்கீடும் அடக்கம்.

பாரத்நெட் என்ற லட்சியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்ட பாரத் பிராண்ட் பேண்ட் நெட்வொர்க் (பி.பி.என்.எல்.) நிறுவனத்தை பி.எஸ்.என்.எல்லுடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்கிறது அந்தச் செய்தி.

இது தொடர்பான மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில் இந்த தொகையின் ஒரு பகுதியை முதலீடாக பி.எஸ்.என்.எல்.லுக்கு மத்திய அரசு வழங்கும் எனவும், இதனைப் பயன்படுத்தி பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது நிதி நிலைமையை மேம்படுத்திக்கொள்ளும். மற்றொரு பகுதி நிதியின் மூலமாக இந்நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் என தெரிவித்தார்.

மேலும், தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக இணையசேவை வழங்கவும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இந்த நிதி பயன்படும் என தெரிவித்ததாக தி இந்து' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று தொடங்கம்

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்க இருக்கிறது. இன்று தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டியில் 72 நாடுகள் பங்கேற்க உள்ளதாக 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்த ஆண்டு 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். மேலும் தற்போது நடைபெற உள்ள இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்பட உள்ளன. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல் போட்டி பலத்த எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்க மேலும் 14 நாட்கள் அவகாசம்

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றதாக என 'தமிழ் மிரர்' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விரைவில் இலங்கை திரும்புவார் என ஜூலை 26 ஆம் தேதி நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் நாட்டில் தங்குவதற்கு சிங்கப்பூர் அவகாசம் வழங்கியுள்ளது என தமிழ் மிரர் இணையதளம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :