தமிழ்நாடு சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா: ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது ஏன்?

- எழுதியவர், பரணிதரன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டபோதும், அது தொடர்பாக சில கேள்விகளை அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எழுப்பியிருப்பதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த பல்கலைக்கழகத்தை சென்னைக்கு அருகே தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது.
மசோதாவில் என்ன உள்ளது?
தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழகம் நீங்கலாக மற்ற அனைத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆக மாநில ஆளுநரே இருந்து வருகிறார். ஆனால், தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்க உத்தேசித்துள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆக முதலமைச்சரே இருப்பார் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்களையும் வேந்தர் என்ற முறையில் முதலமைச்சரே வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி அதை மாநில ஆளுநரின் பார்வைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மே மாதம் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.
அதுநாள்வரை இந்த மசோதாவை ஆளுநர் தமது வசம் வைத்துக் கொண்டு இழுத்தடிப்பதாக ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வந்தன.
ஸ்டாலின் கோரிக்கையும் ஆளுநர் கருத்தும்

கடந்த ஜூன் மாதம் ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது பார்வைக்கு அனுப்பப்பட்ட தமிழ்நாடு பல்கைகலைக்கழக மசோதா, சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா, பல மாதங்களாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சங்க மசோதா போன்ற பல மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்க திருத்த மசோதா தொடர்பாக தமக்குள்ள ஆட்சேபங்களை மீண்டும் 'கோடிட்டு' மாநில ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.


ஆளுநர் அறிவுரை
மேலும், திருத்த மசோதாவில் கூட்டுறவு சங்க பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பாக தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அந்த மசோதாவில் பதிவாளரே விசாரணையின்றி சங்கத்தை நீக்கவோ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ முடியும் என்ற ஷரத்து ஜனநாயகப்படி இல்லை என்று ஆளுநர் கூறியுள்ளதாகவும் இது குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்கும்படி ஆளுநர் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசாதோவை பொருத்தவரை, மாநில ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு எடுத்துள்ள முயற்சிகளை ஆளுநர் வரவேற்றுள்ளார். இதுபோன்ற ஒரு மசோதாவை கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளது. காரணம், மாநில அளவிலான பல்கலைக்கழகத்தை கொண்டு வருவது மாநில பட்டியலில் (கன்கரன்ட் லிஸ்ட்) உள்ள விஷயம்தான்.
ஆனால், இந்திய ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி எனப்படும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி அந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைமுறை இருக்குமா என்பதில் தமிழ்நாடு அரசு தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசிடம் கேட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சருடன் வந்த அமைச்சர்கள் குழுவில் இருந்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசிடம் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் நமக்கு தெரிய வந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஏற்கெனவே மாநில அரசு நிறைவேற்றிய ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா, குடியரசு தலைவருக்கு அவரால் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அது அவரது செயலக பரிசீலனையில் இருக்கிறது.
இந்த நிலையில், நீட் தேர்வு விதிகளுக்கு உட்பட்டு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுடன் கூடியதாக தமிழ்நாடு சித்த மருத்துவமனை பல்கலைக்கழம் இருக்குமா இல்லையா என்பதில் ஒரு தெளிவு இல்லாததால் ஆளுநர் அலுவலகம் அதன் மீதான முடிவை எடுக்கவில்லை என்றும் பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பிபிசி தமிழ் பேசிய.போது, "அரசின் நிர்வாக விவகாரங்களில் ஆளுநரின் பணி வரம்புக்கு உட்பட்டது. அதுவே, சட்டப்பேரவை விவகாரங்கள் என வரும்போது அரசியலமைப்பு விதிகளின்படி அனைத்தும் உள்ளதா என்பதை சரிபார்த்து கடமையாற்ற வேண்டியது ஆளுநரின் பொறுப்பு," என்று மட்டும் கூறினார்.
நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலுவிடம் நீட் விலக்கு விவகாரத்தில் புதிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவை சந்தித்து பேச திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனரா என்று கேட்டோம்.
"முதல்வருடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுப்போம்," என்று அவர் பதிலளித்தார். மற்ற மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் வழங்கியுள்ள அறிவுரைகள் பற்றி கேட்டபோது, அது தொடர்பான தகவல் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று டி.ஆர். பாலு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













