ரயில்வேயில் இப்படியா? "தேஜஸ் ரயில் பராமரிப்பு செலவுத் தரவே இல்லை" - ஆர்டிஐ பதில்

பட மூலாதாரம், IRCTC
- எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் சேவைக்கான பராமரிப்பு செலவுத்தரவுகள் பராமரிக்கப்படவில்லை என்று தென்னக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தகவல் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டிருந்த கேள்விக்கு பதிலாக இந்த தகவல் கிடைத்துள்ளது.
அதிவேகம், குளிர்சாதன மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரயிலான 'தேஜஸ்' ரயிலின் சேவை சென்னை - மதுரை இடையே 2019ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், மதுரையை நண்பகல் 12.15 மணிக்கு அடைகிறது. பிறகு மீண்டும் மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
மதுரையில் இருந்து சென்னைக்கு ஆறரை மணி நேரத்தில் சென்றடைவதால், ஒரே நாளில் இந்த ரயிலில் சென்று வருபவருக்கு இது மிகுந்த வசதியாக உள்ளது. ஏ.சி சேர்கார், பிசினஸ் கிளாஸ், எக்ஸ்கிக்யூட்டிவ் வகுப்பு என 3 வகையான கட்டணம் இதில் வசூலிக்கப்படுகிறது.
'தேஜஸ்' சொகுசு ரெயிலில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் அளிக்கப்படுவதற்காக கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், சமீப காலமாக இந்த ரயிலில் போதிய அளவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது இல்லை என்கின்றனர் பயணிகள்.
டி.வி, இருக்கை, தூய்மை பணி, போன்றவற்றிற்காக பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தும் இவை எதுவும் முறையாக வழங்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன்.

பட மூலாதாரம், Getty Images
'தேஜஸ்' சொகுசு ரயில் தொடக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்டது. ஆனால் இப்போது மிகவும் மோசமான நிலையில் ஓடுகிறது. ரயில் பெட்டிகளில் உள்ள இருக்கையில் பொருத்தப்பட்டுள்ள டி.வி பெயரளவிலேயே உள்ளது.
அதேபோல் பயணிகள் உணவு சாப்பிடக்கூடிய ஸ்டேண்ட் எதுவும் முறையாக தூய்மைப்படுத்தப்படுவது கிடையாது. உணவுக் கழிவுகள் அதில் அப்படியே இருப்பதால் கரப்பான் பூச்சிகள் அதிக அளவு காணப்படுகின்றன. தூய்மை பணியைப் பொருத்தவரை மிகவும் மோசமான பராமரிப்பின் காரணமாக பெட்டியில் துர்நாற்றம் வீசுகிறது," என்கிறார் சடகோபன்.
அனைத்து சலுகைக்கும் சேர்த்து தான் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவ்வாறு பணம் செலுத்தி பயணம் செய்யும்போது அதற்கான வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்யாதது ஏன்? பணம் கொடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்க வேண்டிய சேவையில் குறைபாடு இருக்கிறதா என்பதை முதலில் ரயில்வே நிர்வாகம் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும். அதே சமயத்தில் பராமரிப்பு மற்றும் வரவு செலவு கணக்குகளை ரயில்வே நிர்வாகம் முறையாக பின்பற்ற வேண்டும் என்கிறார் சடகோபன்.

'தேஜஸ்' சொகுசு விரைவு ரயில், படிப்படியாக தன் தனித்துவத்தை இழந்து வருகிறது. இந்த ரயிலின் வரவு செலவு கணக்கு முறையாக பராமரிக்கப்படாததால் 'தேஜஸ்' ரயில் லாபத்தில் செல்கிறதா? நஷ்டத்தில் செல்கிறதா? என்பதை எவ்வாறு நிர்ணயிக்க முடியும் என்கிறார் சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன்.
இவர், தகவல் உரிமை சட்டத்தின் கீழ், 'தேஜஸ்' ரயிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் வரை பராமரிக்கப்பட்ட செலவு மற்றும் வரவு செலவு கணக்கு எவ்வளவு என்பது உள்ளிட்ட பல கேள்விகளை ரயில்வே துறையிடம் கேட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதன்படி அவருக்கு தென்னக ரயில்வேயில் இருந்து வந்த பதிலில், 'தேஜஸ்' சொகுசு ரயில் தினசரி, மாதாந்திர இயக்க மற்றும் பராமரிப்பு செலவுத் தரவுகள் எந்த வடிவத்திலும் பராமரிக்கப்படவில்லை," என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தயானந்த கிருஷ்ணன் கூறுகையில், "ஆர்டிஐ பதிலைப் பார்க்குபோது தென்ன ரயில்வேயில் தேஜஸ் ரயில் இயக்கம் ஏதே மேம்பாக்காக இயங்கி வருவதாகதவே தோன்றுகிறது. இந்த ரயில் சேவையை திடீரென இயக்குவதை நிறுத்துவது ஏன்? ரயிலில் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளப்படாதது ஏன்? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த ரயில் சேவையை லாபகரமாக நடத்துவதற்கு நிச்சயம் ரயிலின் பராமரிப்பு செலவு மற்றும் வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தயானந்த கிருஷ்ணன் கூறினார்.
இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, துறை சார்ந்த அதிகாரிகள் இது குறித்து பதில் அளிப்பார் என கூறினார். ஆனால் யாரும் முறையாக பதில் தரவில்லை.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












