கடலூரில் மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக சக மாணவர்கள் கைது: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

கடலூரில் மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக சக மாணவர்கள் கைது: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கடலூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி ஒருவரை சக வகுப்பைச் சேர்ந்த மூன்று மாணவர்களே பாலியல் வல்லுறவு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்-பெண் இருபாலரும் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, அவர் உடன் பயிலும் சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேர் மிரட்டி பாலியல் வல்லுறவு செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அதிர்ச்சி அளிக்கும் சம்பவத்தின் பின்னணி என்ன? என்பதைக் காவல் துறையிடம் பிபிசி தமிழ் பேசியது.

நண்பருடன் பேசிய புகைப்படத்தை காட்டி மிரட்டிய சிறுவர்கள்

கடலூரில் மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக சக மாணவர்கள் கைது: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கடந்த மே மாதம் மாணவி படிக்கும் அதே பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவருக்கு பிறந்தநாள் விழா பள்ளி வளாகத்திற்குள் கொண்டாடப்பட்டது. அந்த 12ஆம் வகுப்பு மாணவர் மாணவியின் காதலர் என்று கூறப்படுகிறது. அவரின் பிறந்தநாள் விழாவில் பங்கு பெற்ற மாணவி, 12ஆம் வகுப்பு மாணவருடன் பேசுவதை மாணவியுடன் பயிலும் சக மாணவர்கள் மொபைலில் புகைப்படம் பிடித்துள்ளனர். அன்றைய தினம் பிறந்தநாள் நிறைவடைந்த பின்னர் மாணவி தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், மாணவியின் காதலர் என்று கூறப்படும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் தனது மேல்நிலை வகுப்பை முடித்துவிட்டதாக திட்டக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆரோக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மாணவி கடந்த மே மாதம் 22ஆம் தேதி அவரது காதலர் என்று கூறப்படும் மாணவருடன் பேசிக்கொண்டிக்கும் போது எடுத்த புகைப்படத்தை ஜூலை 1ஆம் தேதி மாணவியிடம் காட்டி அவருடன் படிக்கும் மாணவர்கள் மிரட்டியதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

40 நாட்களுக்குப் பிறகு மிரட்டி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக புகார்

"அதாவது, கடந்த ஜூலை 1ஆம்‌ தேதி அன்று மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மூன்று பேரும் தாங்கள் எடுத்த புகைப்படத்தைக் காட்டி நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேட்டு, இதை உங்கள் வீட்டில் காட்டுகிறோம் என்று கூறி மிரட்டியுள்ளனர். இதனால் பயந்த மாணவி அவ்வாறு செய்யவேண்டாம் என்றும், அந்த படத்தை மொபைலில் இருந்து நீக்கும்படி சக மாணவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அப்போது 'மொபைலை வீட்டில் வைத்துள்ளேன், நீ வந்தால் உன் கண் முன்பே அதை நீக்குகிறேன்' என்று கூறி மாணவியை சக மாணவர்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்குச் சென்றதும் மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக சக வகுப்பு மாணவர்கள் மூன்று பேரும் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர்," என்று காவல் துறையினர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளனர்.

கூட்டு வல்லுறவை மொபைலில் பதிவு செய்த சிறுவர்கள்

கடலூரில் மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த சக மாணவர்கள்: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மாணவியை இந்த மூன்று மாணவர்களும் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாகவும், அதை தங்களது மொபைலில் வீடியோவாக பதிவு செய்ததாகவும் இந்த சம்பவம் குறித்து வெளியே கூறினால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று அந்த மாணவியை மிரட்டியுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும், அந்த வீடியோவை மாணவியின் காதலர் என்று கூறப்படும் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவருக்கு அனுப்பியுள்ளனர். மேலும், இந்த வீடியோவை வேண்டுமென்று வெளியே கசிய வைத்துள்ளனர்.

இந்த விவரம் வெளியே தெரிய வரவும் கடந்த நான்கு நாட்களாக மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை. அவர் மிகவும் பயந்து பள்ளிக்குச் செல்லாமல் தனது வீட்டில் வேறு பள்ளியில் சேர்க்கும்படி கூறியுள்ளார். அதையடுத்து காரணத்தை விசாரித்த பெற்றோர் மாணவியைப் பள்ளிக்கு அழைத்துச்சென்று ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர். அப்போது பள்ளியில் ஆசிரியர்கள் விசாரிக்கும்போது நடந்த சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து விசாரணை செய்தபோது மாணவியின் புகைப்படம், வீடியோ அனைத்தும் மொபைலில் இருப்பதை கண்டறிந்தனர். பின்னர், இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு புகார் அளித்தனர்.

போக்சோ உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு

கடலூரில் மாணவியை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததாக சக மாணவர்கள் கைது: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மேலும், இந்த சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு பேர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்துள்ளதாக தெரிவித்தார்.

மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வல்லுறவு செய்த மூன்று 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த பள்ளியில் 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவரின் காதலர் என்று கூறப்படும் மாணவர் உட்பட நான்கு பேரிடமும் விசாரணை செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது மாணவியைப் பலவந்தமாக பாலியல் வல்லுறவு செய்தது, கொலைமிரட்டல் விடுத்தது, இதற்கு உடந்தையாக இருந்தது என 4 போக்சோ வழக்கும், இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளின் கீழும் மொத்தம் 7 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்போது மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. தற்சமயம் மாணவி மருத்துவர் கண்காணிப்பில் பாதுகாப்பாக இருக்கிறார் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மாணவி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் மாணவியின் காதலராக கூறப்படும் மாணவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சக 10ம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு கருதி காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: