இந்திய உணவகங்கள்: ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு சேவைக் கட்டணம் கேட்டால் என்ன செய்வது?

    • எழுதியவர், அனந்த் பிரகாஷ்
    • பதவி, பிபிசி

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், உணவு பில்லில் சேவைக் கட்டணம் வசூலிக்க மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பு (சிசிபிஏ) திங்களன்று தடை விதித்தது.

சேவைக் கட்டணம் குறித்த சர்ச்சை தொடங்குவது இது முதல் முறையல்ல. சேவைக் கட்டணம் அதாவது சர்வீஸ் சார்ஜ் செலுத்த யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டிலும் தெரிவித்திருந்தது.

நீங்கள் ஒரு உணவகத்தில் உணவு சாப்பிடச் சென்றால், உணவகம் உணவுக்கான பணத்தையும், சேவைக் கட்டணத்தையும் உங்கள் பில்லில் சேர்த்தால், நீங்கள் சேவைக் கட்டணத்தை செலுத்த மறுக்கலாம் என்பது இதன் பொருள்.

ஆனால், மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான உணவகங்கள் சேவைக் கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதுமட்டுமின்றி மத்திய அரசின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான ஐஆர்சிடிசியும் சேவைக் கட்டணத்தை வசூலித்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையில், புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பிறகு, மக்கள் தங்கள் உணவு பில்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டு, இப்போது என்ன மாறும் என்று கேள்விகளைக் கேட்கிறார்கள். அதே நேரத்தில் இந்த வழிகாட்டுதல்கள் தேவையற்றவை என்று ஹோட்டல்-உணவகங்கள் சங்கம் விவரிக்கிறது.

CCPA இன் வழிகாட்டுதல்கள் என்ன?

• ஹோட்டல் அல்லது உணவகம் உணவுக் கட்டணத்தில் சேவைக் கட்டணத்தைச் சேர்க்க முடியாது.

• வேறு எந்த பெயராலும் சேவை கட்டணம் வசூலிக்க முடியாது.

• ஹோட்டல் அல்லது உணவகம் சேவைக் கட்டணத்தைச் செலுத்தக் கட்டாயப்படுத்தாது.

• சேவைக் கட்டணத்தைச் செலுத்துவது சுய விருப்பமாகும், இது கட்டாயமல்ல, இது நுகர்வோரின் உரிமை என்பதை ஹோட்டல் அல்லது உணவகம் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

• சேவைக் கட்டணம் விதிக்கப்படாததால் உணவகத்தால் சேவைகளை மறுக்க முடியாது.

• உணவுக் கட்டணத்தில் சேவைக் கட்டணம் சேர்த்து, மொத்தத் தொகைக்கு ஜிஎஸ்டி வசூலிக்க முடியாது.

• ஹோட்டல் அல்லது உணவகம் வழிகாட்டுதல்களை மீறி சேவைக் கட்டணத்தை வசூலித்தால் நுகர்வோர், சம்பந்தப்பட்ட ஹோட்டல் அல்லது உணவகத்தை பில் தொகையில் இருந்து சேவைக் கட்டணத்தைக் கழிக்கக் கோரலாம்.

• நுகர்வோர் தேசிய நுகர்வோர் ஹெல்ப்லைன் (NCH) 1915 அல்லது NCH மொபைல் ஆப் மூலம் புகார் பதிவு செய்யலாம்.

• நுகர்வோர், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நுகர்வோர் ஆணையத்திடம் புகார் செய்யலாம்.

• விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுக்காக www.e-daakhil.nic.in என்ற e-Dakhil போர்ட்டல் மூலமாகவும் புகார்களை மின்னணு முறையில் பதிவு செய்யலாம்.

• நுகர்வோர், CCPA மூலம் விசாரணை மற்றும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கலாம்.

• CCPA க்கு புகாரை, [email protected] இல் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

20 ரூபாய் தேநீருக்கு 50 ரூபாய் சேவைக் கட்டணம்

ஆனால், நுகர்வோர் ஹெல்ப்லைனில் இருந்து இ-ஃபைலிங் போர்டல் வரை செயல்முறை எவ்வளவு எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், சமூக ஊடகங்களில் பலர் ஐஆர்சிடிசி போன்ற மினி-ரத்னா நிறுவனத்தின் பில்களை வெளியிட்டுள்ளனர். அதில் 20 ரூபாய் தேநீருக்கு, சேவைக் கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

7 முதல் 10 மற்றும் 15 சதவிகிதம் வரை சேவை வரி விதிக்கப்படுவதாக பலர் தங்களது ரசீதுகளின் படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பல சமயங்களில் உணவகங்கள் தங்கள் வாயிலுக்கு வெளியே 'சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படும்' என்று போர்டு வைப்பதை பார்க்க முடிகிறது.

இதுகுறித்து ட்விட்டர் பயனாளர் ஷைலேஷ் குமார் ட்வீட் செய்துள்ளார். "குருகிராமில் (Gurgaon) உள்ள செக்டார் 29ல் உள்ள எல்லா உணவகங்களிலும் 10 சதவிகிதம் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. நீங்கள் பணம் செலுத்த விரும்பவில்லை என்றால் இங்கு வர வேண்டாம் என்று வாயிலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் சர்வீஸ் சார்ஜ் என்று டைப் செய்து தேடினால், இதுபோன்ற நூற்றுக்கணக்கான ட்வீட்களை நீங்கள் காண்பீர்கள். அதில் மக்கள் சேவைக் கட்டணங்களைச் செலுத்திய கதைகளைக் காணலாம்.

புதிய விதிகள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?

இத்தகைய சூழ்நிலையில், இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்ட பிறகு என்ன மாற்றம் ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுடன் ஒப்பிடுகையில் இந்த வழிகாட்டுதல் எப்படி பயனுள்ளதாக இருக்கும்?.

கடந்த மூன்று தசாப்தங்களாக நுகர்வோர் விவகாரங்கள் குறித்து எழுதி வரும் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான புஷ்பா கிரிமாஜி, இந்த வழிகாட்டுதல்களால் நிலைமை மாறும் வாய்ப்பு உள்ளது என்று கருதுகிறார்.

"மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பால் இந்த முறை வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் வேறுபட்டவை மற்றும் பயனுள்ளவை. ஏனென்றால் இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019ன் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும். இதன் முக்கிய வேலை நுகர்வோரின் நலனைப் பாதுகாப்பதாகும். இந்த விதிகளை மீறினால், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்," என்று அவர் கூறினார்.

ஆனால், விதிகளை மீறும் ஹோட்டல் அல்லது உணவகம் மீது புகார் அளிக்கும் செயல்முறை எவ்வளவு எளிதாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில், இந்தியாவில் நுகர்வோர் வழக்குகளில் தாமதம் ஏற்படுவதால், மக்கள் பெரும்பாலும் நுகர்வோர் விவகாரங்களை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வதைத் தவிர்க்கிறார்கள்.

"இவை எல்லாமே நுகர்வோரை சார்ந்தது. அரசின் நடவடிக்கையை விட, சேவை கட்டணத்தை நுகர்வோர் எதிர்ப்பதே சிறந்தது. சேவைக்கட்டண வசூலிப்பால் எல்லோரும் கோமடைந்தாலும், அசௌகரியத்தைக் கருதி இதை எதிர்ப்பதை தவிர்க்கின்றனர். இந்த இயல்பை நுகர்வோர் மாற்றிக்கொள்ளவேண்டும். சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கும் இடத்தில் உணவுகளை சாப்பிட மாட்டோம் என்று எல்லோரும் சொல்ல ஆரம்பித்தால் அது நிலைமையை மாற்றிவிடும். இதோடு கூடவே, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு அதிகார அமைப்பும் இந்த விவகாரங்களில் உறுதியான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று புஷ்பா கிரிமாஜி குறிப்பிட்டார்.

ஹோட்டல் சங்கம் என்ன சொல்கிறது?

இந்திய ஹோட்டல் மற்றும் உணவக சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆதர்ஷ் ஷெட்டியுடன் பேசி அவரது கருத்தைத்தெரிந்துகொள்ள பிபிசி முயன்றது.

"சர்வீஸ் சார்ஜ் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. சேவை நன்றாக இருந்தது என்று நினைக்கும் வாடிக்கையாளர் சேவைக் கட்டணத்தைச் செலுத்துவர். சேவை பிடிக்காதவர் சேவைக் கட்டணத்தைச் செலுத்தவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, உணவு பரிமாறுபவர்களுக்கும், சமைப்பவர்களுக்கும் இந்தப் பணம் போய்ச் சேர்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அது அவ்வளவு பெரிய விவகாரம் இல்லை. ஆனால், இப்போது வந்திருக்கும் புதிய விதிகளுக்குப் பிறகு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படாது. எனவே, சில உணவகங்கள் சேவைக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தும். சில உணவகங்கள், தங்கள் பணியாளர்கள் மற்றும் சமையல்காரர்களை மனதில் வைத்து உணவுப் பொருட்களின் விலையை உயர்த்தும்," என்று அவர் கூறினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: