இந்திய உணவகங்கள்: சர்வீஸ் சார்ஜ் செலுத்துவது கட்டாயப்படுத்தப்படுகிறதா?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

உணவகங்களில் உணவு உண்ணும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலான சமயங்களில் 'சர்வீஸ் சார்ஜ்' (சேவை கட்டணம்) செலுத்த வேண்டியிருப்பது குறித்த சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து, உணவகங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு வியாழக்கிழமை (ஜூன் 2) சந்தித்து அப்பிரச்னையை தீர்ப்பது குறித்து ஆலோசனை செய்தது. உணவகங்களில் இத்தகைய சர்வீஸ் சார்ஜ் செலுத்தும் விரும்பத்தகாத சண்டை குறித்து பிபிசி இங்கே விளக்குகிறது.

மும்பையில் வாழ்ந்து வருபவரும் அங்கு பணிபுரிந்து வருபவருமான நிக்கோல் ரூத் எல்லிஸ் அந்நகரத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

ஒரு குறிப்பிட்ட பிராண்டுகளின் வளர்ச்சிக்காக யோசனைகளை பரிந்துரைக்கும் 'பிராண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்ட்'டாக இருக்கும் 27 வயதான அவர், தன்னை ஒரு 'ஃபுட்டி' (வெவ்வேறு விதமான உணவுகளை விரும்பி உண்ணும் ஒருவர்) என்று கூறிக்கொள்கிறார். வாரத்தில் இரண்டு தினங்களாவது வெளியில் உணவு உண்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

"ஆனால், ஒரு மாலை நேரத்தில் உணவகம் ஒன்றில் உணவு உண்ணும் போது அங்கு வழங்கப்பட்ட சேவை உண்மையில் மோசமானதாக இருந்தது. ஆழமான பாத்திரம் ஒன்றில் அவர்கள் பீட்சாவை பரிமாறினர். அதனால் பீட்சா உடைந்தே வந்திருந்தது" என்கிறார் அவர்.

ஒரு கட்டத்தில் உணவக வெயிட்டர் ஒருவர் தன்னிடம் வந்து உணவு தனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டதாக கூறுகிறார்.

"நான் அவரிடம் நேர்மையாக இருந்தேன், உணவு சிறப்பாக இல்லை என அவரிடம் தெரிவித்தேன். அவர் நான் சொல்வதை கேட்டார். ஆனால், கேட்டபின் வெறுமனே சென்றுவிட்டார்," என்கிறார்.

உணவுக்கான கட்டணம் வந்தபோது அதில் 10% "சர்வீஸ் சார்ஜ்" சேர்க்கப்பட்டிருந்ததாக நிக்கோல் கூறுகிறார்.

"நான் சண்டை போடும் ஒரு நபர் அல்ல, எனவே, சர்வீஸ் சார்ஜ் செலுத்த மாட்டேன் என நான் கூறவில்லை. உணவகங்களில் வழங்கப்படும் சேவை மிகவும் நன்றாக இருந்தால் மட்டுமே நாம் 'டிப்ஸ்' வழங்க வேண்டும் என நான் நம்புகிறேன். நம் மீது அதனை கட்டாயப்படுத்தக் கூடாது," என அவர் என்னிடம் தெரிவித்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உணவகங்களில் டிப்ஸ் கொடுப்பது என்பது அவரவர்களின் விருப்பத்தைச் சார்ந்ததாக இருந்தது. ஆனால், இப்போது உணவுக் கட்டணங்களிலேயே சர்வீஸ் சார்ஜை 5% முதல் 15% வரை உணவகங்கள் விதிக்கின்றன.

பிபிசியிடம் பேசிய உணவக உரிமையாளர் ஒருவர் சர்வீஸ் சார்ஜ் விதிக்கப்படுவதற்கு இரு காரணங்கள் இருப்பதாக கூறுகிறார். ஒன்று, வெயிட்டர் ஒருவர் மட்டுமே டிப்ஸை எடுத்துக்கொள்ளாமல், சமையல்காரர்கள், உணவக காவலாளிகள், சுத்தம் செய்பவர்கள், பாத்திரம் கழுவுபவர்கள் என, அனைவருக்கும் சர்வீஸ் சார்ஜ் பகிர்ந்து அளிக்கப்படும்; இந்தியாவின் மிக பிரபலமான உணவு விமர்சகரான எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளருமான வீர் சங்வி கூற்றுக்கு எதிரான கருத்தான பெரும்பாலான இந்தியர்கள் "தாரளமாக டிப்ஸ் வழங்குபவர்கள் அல்ல" என்பது இரண்டாவது காரணமாகும்.

எங்கிருந்து தொடங்கியது 'டிப்ஸ்' கலாசாரம்?

"இந்தியர்கள் தாராளமாக டிப்ஸ் வழங்குவதில்லை என நான் கருதவில்லை. வெயிட்டர்களுக்கு மட்டுமல்லாமல் ஹோட்டல்களின் அட்டெண்டர்களாக உள்ளவர்களுக்கும் டிப்ஸ் வழங்கும் நபர்களை நான் அடிக்கடி பார்த்துள்ளேன்," என சங்வி தெரிவிக்கிறார்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு டிப்ஸ் கலாசாரம் வந்ததாக அவர் கூறுகிறார். அமெரிக்காவில் 1960களில் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து டிப்ஸ் வாங்கினால் அவர்களுக்கு முதலாளிகள் குறைந்தபட்ச ஊதியத்தைவிட குறைவாகவே ஊதியம் வழங்கியுள்ளனர். "இந்தியா சுதந்திரம் அடைந்த சமீபத்திய ஆண்டுகளான 1950கள், 60களில் டெல்லியின் கன்னோட் பிளேஸ் அல்லது கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் அல்லது மும்பையின் சர்ச்கேட் ஸ்ட்ரீட்டில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் வெயிட்டர்களுக்கு ஊதியம் வழங்காமல், டிப்ஸ் பெறுவதன் மூலம் அதனை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்தனர்," என்கிறார் அவர்.

ஆனால், இந்தியாவில் 2022இல் வெளியில் உணவு உண்பதென்பது பெரிய தொழிலாக உருவெடுத்துள்ளது. உணவுத்தொழிலின் மதிப்பு 4.2 டிரில்லியன் ரூபாயாக (55 பில்லியன் டாலர்கள்; 43 பில்லியன் பவுண்ட்) உள்ளது.

"நட்சத்திர உணவகங்களை தவிர்த்து மற்ற உணவகங்களில் பணிபுரியும் வெயிட்டர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது. டிப்ஸ் மற்றும் சர்வீஸ் சார்ஜ் மூலம் அவர்களின் வருமானத்தை சரிகட்ட உணவகங்கள் எதிர்பார்க்கின்றன," என்கிறார் சங்வி. மேலும், "தங்களின் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது உணவகங்களின் வேலையேயன்றி, வாடிக்கையாளர்களின் வேலை அல்ல" என்கிரார் அவர்.

அரசு என்ன சொல்கிறது?

"சர்வீஸ் சார்ஜ் என்பது விருப்பத்தின்பேரில் கொடுப்பது. வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்துடனேயே அதனை கொடுக்க வேண்டும்" என இந்திய அரசாங்கமும் வலியுறுத்தியுள்ளது.

வாடிக்கையாளர் சேவை துறை கடந்த 2017ஆம் ஆண்டு இதுதொடர்பாக வழிகாட்டுதல்களை பிறப்பித்தது. அதன்படி, மெனு கார்டில் அரசாங்க வரிகளுடன் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ள விலையை மட்டுமே செலுத்த வேண்டும் எனவும், அதற்கு மேல் வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் கூடுதலாக கட்டணம் விதிப்பது "நியாயமற்ற வர்த்தக நடைமுறை" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெரும்பாலான உணவகங்கள் உணவுக்கட்டணங்களில் சர்வீஸ் சார்ஜை சேர்ப்பதை தொடர்ந்து வந்ததால், தேசிய ரெஸ்டாரண்ட் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் (என்.ஆர்.ஏ.ஐ) இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூன் 02) ஆலோசனை நடத்தினர்.

கடந்த வாரம் தேசிய ரெஸ்டாரண்ட் கூட்டமைப்புக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், "சர்வீஸ் சார்ஜ் செலுத்த தாங்கள் கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அக்கட்டணம் மிகவும் அதிகமாக இருப்பதாகவும்" தங்களுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், "சர்வீஸ் சார்ஜை கட்டணத்திலிருந்து நீக்குமாறு கூறினால் தங்களை துன்புறுத்துவதாகவும்" வாடிக்கையாளர்கள் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவகங்கள் என்ன சொல்கின்றன?

5 லட்சத்திற்கும் மேற்பட்ட உணவகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் என்.ஆர்.ஏ.ஐ அமைப்பு இக்குற்றச்சாட்டை புறக்கணித்துள்ளது. பிபிசிக்கு அந்த அமைப்பு அனுப்பிய அறிக்கையில், "சர்வீஸ் சார்ஜ் குறித்து மெனு கார்ட் மற்றும் உணவக வளாகத்திலேயே குறிப்பிட்டுள்ளதால், "வாடிக்கையாளர்களுக்கு முன்பே அதுகுறித்து தெரியும். மேலும் இது இருதரப்புக்கு இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் எனவே இது நியாயமற்ற வர்த்தக நடைமுறை அல்ல" எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களின் சேவைகளில் திருப்தியடையாத நபர்கள், சர்வீஸ் சார்ஜை நீக்குமாறு கேட்கலாம் எனவும் சில உணவக பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

"உணவு உண்ணும் வாடிக்கையாளர்கள் சேவையில் மகிழ்ச்சியடையவில்லை என்றால், ஒரு நல்ல உணவகம் உடனடியாக சர்வீஸ் சார்ஜை நீக்கிவிடும், எந்த கேள்வியும் கேட்கப்படாது," என்கிறார் பான் - இந்திய உணவக சங்கிலியான கிளின் உணவகத்தின் உரிமையாளர் சௌரப் கனிஜோ.

"வாடிக்கையாளர் திருப்தியடையாவிட்டால் சாப்பிட்ட உணவுக்குக்கூட நாங்கள் கட்டணம் வசூலிப்பதில்லை. சிந்தித்து பாருங்கள் - இது எங்களுக்கு சாதகமாகவே செயல்படும். நான் எங்கள் விருந்தினரை நன்றாக கவனித்துக்கொண்டால், அவர்கள் மீண்டும் இங்கு வருவார்கள்," எனவும் அவர் கூறுகிறார்.

சர்வீஸ் சார்ஜ் செலுத்த மாட்டேன் என வாடிக்கையாளர் மறுப்பது எப்போதும் நல்லதாக முடியவில்லை, அது வாடிக்கையாளர்கள் நீதிமன்றத்திற்கு செல்லவும் வழிவகுத்திருக்கிறது, அதில் சிலர் இழப்பீட்டையும் வென்றுள்ளனர்.

தன்னைப் போன்ற வாடிக்கையாளர்கள் சர்வீஸ் சார்ஜை நீக்குமாறு வற்புறுத்துவது குறித்து அசௌகரியமாக உணர்வதாக எல்லீஸ் தெரிவித்தார்.

"டிப்ஸ் முறை ஒழிக்கப்பட வேண்டும்"

டிப்ஸ் வழங்குவது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக சங்வி கூறிவருகிறார். அதற்கான காரணங்களாக அவர் கூறுபவை:

- ஒரு உணவின் வெற்றிக்கு பலரும் பங்களித்திருப்பதால் வெயிட்டருக்கு மட்டும் டிப்ஸ் வழங்குவது உள்ளார்ந்த முறையில் நியாயமற்ற ஒன்றாக உள்ளது.

- எவ்வளவு டிப்ஸ் வழங்குவது என்பது குறித்து உறுதியாக இல்லாத விருந்தினர்களை இது கொடுமை செய்வதாக உள்ளது.

- விமானங்களில் நம்மை நன்றாக கவனித்துக்கொள்ளும் விமான பணிப்பெண் அல்லது மருத்துவமனையில் நன்றாக பார்த்துக்கொள்ளும் செவிலியருக்கு நாம் டிப்ஸ் கொடுக்காதபோது ஏன் வெயிட்டருக்கு வழங்க வேண்டும்?

சர்வீஸ் சார்ஜ் என்பது "கோட்பாட்டளவிலாவது" சிறந்ததாக உள்ளது என வாதிடுகிறார் அவர். ஆனால், "மனசாட்சியற்ற உணவக உரிமையாளர்கள் சர்வீஸ் சார்ஜ் அனைத்தையும் பணியாளர்களுக்கு வழங்காமல் பெரும்பாலானவற்றை பொருட்கள் உடைப்புக்கு கழித்துக்கொள்வது உள்ளிட்ட நியாயமற்ற செயல்களும் நடைபெறும்" என கூறுகிறார். இந்த கவலை இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல.

"விலையை உயர்த்தி பணியாளர்களுக்கு நல்ல வருமானம் வழங்குவதுதான் சிறந்தது" என்கிரார் சங்வி. விலையை 5 சதவீதம் உயர்த்தினால், அதன்மூலம் பொருள் உடைப்புகளை சரிகட்டலாம். மேலும் சிறிய விலையேற்றம் உங்கள் வாடிக்கையாளர்களை உணவகங்களிலிருந்து வெளியேற்றிவிடாது" என்கிறார் அவர்.

ஆனால், மோசமான சேவையே வாடிக்கையாளர்களை வெளியேற்றும் என்கிறார் நிக்கோல் ரூத் எல்லீஸ்.

"உணவு என்பது எனக்கு உணர்வுப்பூர்மான ஒன்று. எனவே, குறிப்பாக நான் ஃபேன்சியான உணவகங்களுக்கு செல்லும்போது, உணவகங்களில் சேவை சிறப்பாக இல்லையென்றால் அது என்னை பாதிக்கும்" என்கிறார் அவர். "மோசமான சேவையையோ அல்லது கோபமாக நடந்துகொள்ளும் வெயிட்டரையோ நான் கண்டால், நான் சர்வீஸ் சார்ஜாக வழங்கும் பணத்தை அவர் பெறவில்லை என்பதால் அவர் அவ்வாறு நடந்துகொள்கிறாரோ என ஆச்சர்யமடைவேன். எனவே, சர்வீஸ் சார்ஜ் முறை நீங்கிவிடும் என நான் நம்புகிறேன். அப்போது சேவையில் மகிழ்ச்சியடைந்தால் மட்டுமே நான் அதனை செலுத்தலாம்" என்கிறார் அவர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: