You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசம்: தெய்வ படங்கள் பேப்பரில் அசைவ பொட்டலம் கட்டிய ஓட்டல் உரிமையாளர் கைது
- எழுதியவர், அனந்த் ஜனாணே
- பதவி, பிபிசி செய்தியாளர், லக்னெளவில் இருந்து
மேற்கு உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், இந்து தெய்வங்களின் படங்கள் இருந்த செய்தித்தாளில் அசைவத்தை சுற்றி விற்றது மற்றும் போலீஸ் குழுவை தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் தாலிப் ஹுசைன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
'@chandan28791' என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து ஒரு ட்வீட், சம்பல் காவல்துறைக்கு அனுப்பப்பட்டது. "நகரில் மஞ்சர் மருந்துக்கடைக்கு அருகில் உள்ள மெஹக் உணவகத்தில், கடவுளின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ள சுமார் 100 செய்தித்தாள்களில் சிக்கன் துண்டுகள் பேக் செய்யப்படுகின்றன. நிர்வாகம் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்."என்று சந்தன் ஆர்யா என்ற இந்த பயனர் எழுதினார்.
சந்தன் ஆர்யாவின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சம்பல் போலீசார், "இந்த சம்பவம் தொடர்பாக, சம்பல் காவல் நிலையத்தில் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று ட்விட்டரில் பதிலளித்துள்ளனர்.
மேலும் சிலர் இந்த புகைப்படத்தை ட்வீட் செய்திருந்தனர். அதற்கும் காவல்துறையும் பதிலளித்தது.
முழு விவகாரம் என்ன
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சம்பல் காவல் நிலைய அலுவலர் ஜிதேந்திர குமார், "ஒரு தகவல் கிடைத்தது. உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றனர். சம்பவ இடத்திற்குச் சென்றதும், அங்கிருந்த சட்டவிரோதப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன் பிறகு சம்பவத்தின் நாசூக்கு தன்மையைக்கருதி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட தாலிப் கைது செய்யப்பட்டு தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்," என்று குறிப்பிட்டார்.
"இரவு 8:50 மணியளவில், அவுட்போஸ்ட் சார்த்தவால் பகுதியில், போலீசார் ரோந்து சென்ற போது, சங்கர் கிராஸ்ரோடை அடைந்தனர். மொஹல்லா ஷெர்கான் சராய் பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள மெஹக் உணவகத்தின் உரிமையாளரான 58 வயதான தாலிப் ஹுசைன் இந்து தெய்வங்களின் படங்கள் உள்ள செய்தித்தாள்களில் இறைச்சியை விற்பனை செய்வதாக முக்பீர்காஸ் தகவல் அளித்தார்.
இந்து மக்கள் கூட்டம் அங்கு கூடியிருந்தது. அவர்களது மத உணர்வுகள் புண்பட்டுள்ளன. இந்தச் செயல் காரணமாக இரண்டு சமூகங்களுக்கு இடையே சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது," என்று முதல் தகவல் அறிக்கையில், போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கு சாட்சியமளிக்க யாரும் தயாராக இருக்கவில்லை என்றும் காவல்துறையின் எஃப்.ஐ.ஆர் மேலும் கூறியது.
எனவே போலீஸ்காரர்களே வழக்குப்பதிவு செய்து, "மெஹக் உணவகத்தின் இறைச்சிக்கடைக்கு நாங்கள் சென்றபோது, அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. உணவகத்தின் கவுண்டரில் 2022 ஏப்ரல் 2 தேதியிட்ட தைனிக் சமாச்சாரின் ஹிந்துஸ்தான் நாளேட்டின் பல தாள்களும் செய்தித்தாள் துண்டுகளும் இருந்தன. அதில் இந்து கடவுள்கள் மற்றும் கலசங்களின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இதைப்பார்த்த கூட்டம் மிகுந்த ஆத்திரம் அடைந்தது. தங்கள் மத உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக கூட்டத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர். அங்கிருந்த மெஹக் உணவக உரிமையாளரிடம் இதுபற்றிக்கேட்டோம். கோபமடைந்த அவர், கவுண்டருக்குள் வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து, போலீஸ்காரர்களை தாக்க வந்தார். சுயபாதுகாப்பிற்காக அவரை போலீஸார் பிடித்தனர்," என்று எஃப்ஐஆரில் குறிப்பிட்டனர்.
ஐபிசி 153-ஏ (வெறுப்பைப் பரப்ப முயற்சி), 295-ஏ (மத உணர்வுகளைப் புண்படுத்தும் முயற்சி) மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் தாலிப் ஹுசைன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தாலிபின் மகனின் கூற்று
தனது தந்தை மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் கைது சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தாலிப் ஹுசைனின் மகன் அமீர் தாலிப், "விஷயம் இப்படி இல்லை. என் தந்தை மீது அநியாயம் நடந்துள்ளது. என்னுடையது ஹோட்டல் வேலை. அதில் பழைய பேப்பர்கள் வருவது பெரிய விஷயம் அல்ல. ஹோட்டலில் வேலை செய்யும் பையன் பேப்பர்களை கொண்டுவந்தான். அதில் சாப்பாட்டை பேக் செய்து கொடுத்தான். இந்த விஷயத்தை வைத்து விவகாரம் பெரிதாக்கப்பட்டுள்ளது. இதில் என் தந்தை தவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளார்,"என்று தெரிவித்தார்.
பேப்பரில் தெய்வங்களின் படம் இருந்ததா?
இந்தக் கேள்விக்கு பதிலளித்த அமீர், "சந்தையில் பழைய பேப்பர்கள் விற்பனைக்கு வருகின்றன. அதை வாங்கி எப்படி மற்றவர்கள் பயன்படுத்துகிறார்களோ, அப்படித்தான் நாங்களும் செய்தோம். அதில் என்ன அச்சிடப்பட்டுள்ளது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. இந்த விஷயத்தை கவனித்திருந்தால், அதை நாங்கள் ஏன் செய்யப்போகிறோம்? எந்த மத விஷயம் பற்றியும் நாங்கள் ஏன் பேச வேண்டும்? நாங்கள் 25 வருடங்களாக இங்கே தொழில் செய்கிறோம். மத விஷயமாக என்ன நடக்கிறது என்பதில் எங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை," என்றார்.
என் அப்பா பத்திரமாக வீடு திரும்ப வேண்டும். இதில் என் அப்பாவின் தவறு ஏதும் இல்லை என்று அமீர் கூறுகிறார்.
" இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை குறித்து மாவட்ட எஸ்பி ஏற்கனவே அறிக்கை அளித்துள்ளார்," என்று அமீரின் கூற்று குறித்து கருத்து தெரிவித்த சம்பலின் கூடுதல் எஸ்பி அலோக் குமார் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்