You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரௌபதி முர்மூ ஆதரவு நிகழ்வில் வெளிப்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ் பூசல் - என்ன நடந்தது?
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசு தலைவர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திரௌபதி முர்மூவை தனித்தனியாக சந்தித்து அதிமுகவின் ஆதரவை அக்கட்சியின் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளனர். இருவரும் தங்களுடைய ஆதரவாளர்களுடன் திரெளபதி முர்மூவை சந்தித்த அதே சமயம், அதிமுகவின் வாக்கு வங்கி சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கே வர வேண்டும் என்பதால் இரு தரப்புக்கும் பாஜக மேலிடம் சமமான முக்கியத்துவத்தை இன்றைய நிகழ்வில் கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? இன்று என்ன நடந்தது?
குடியரசு தலைவர் தேர்தலில் கூட்டணி கட்சி எம்.பி, எம்எல்ஏக்களின் ஆதரவை பெறுவதற்காக சென்னைக்கு வந்தார் திரெளபதி முர்மூ. சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இதையொட்டி ஒரு நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது. விழா மேடையில் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே அமர்ந்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மேடையில் இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால், மேடைக்கு முதலில் இருந்தே ஓ பன்னீர்செல்வம் வரவில்லை.
இபிஎஸ் தரப்பு அரங்கில் இருந்து வெளியேறிய பிறகே, ஓபிஎஸ் தமது அவரது ஆதரவாளர்களுடன் அரங்கப் பகுதிக்கு வந்தார்.
குடியரசு தலைவர் வேட்பாளர் தேர்தலுக்காக, திரௌபதி முர்மூ வேட்புமனு தாக்கல் செய்தபோது, டெல்லிக்கு நேரடியாக சென்று தமது ஆதரவை ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். இருந்த போதும், சென்னைக்கு திரெளபதி முர்மூ ஆதரவு கோரி வந்த சமயத்தில், நிகழ்ச்சி மேடையில் அவருடன் அமராமல் ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்த செயல்பாடு, அனைவராலும் பெரிதும் கவனிக்கப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளான தேமுதிக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்டவற்றின் தலைவர்கள் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வந்திருந்தனர்.
ஸ்டாலினை சாடிய எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில், மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "திரெளபதி முர்மூவின் இமாலய வெற்றிக்கு அதிமுக ஆதரவாக இருக்கும்," என்று உறுதியளித்தார். அத்துடன், திராவிட மாடல் மற்றும் சமூக நீதி உள்ளிட்டவற்றை பற்றிப் பேசும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பழங்குடியின வேட்பாளரான திரௌபதி முர்மூவுக்கு ஆதரவு தரவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வெளியே சென்றனர். அவர்களைத் தொடர்ந்து மேடை ஏறிய ஓ.பன்னீர்செல்வம், ஒடிஷா மாநிலத்தின் அமைச்சராகவும், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றிய பல அனுபவங்களை பெற்றுள்ள திரௌபதி முர்மூ நாட்டின் குடியரசு தலைவராக பணியாற்ற தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அதற்கு அவர் தகுதியான சிறந்த நபர் என்றும் கூறினார்.
மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், நிச்சயம் திரௌபதி முர்மூவை குடியரசு தலைவராக பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
'பொதுக்குழுவுக்கே உச்ச அதிகாரம்'
இதற்கிடையே, விடுதி அரங்கை விட்டு எடப்பாடி பழனிசாமி தமது ஆதரவாளர்களுடன் வெளியே வந்தபோது அவரிடம் ஒரே கட்சியை சேர்ந்த நீங்களும் ஓ.பன்னீர்செல்வமும் ஏன் தனியாக மேடைக்கு வந்தீர்கள் என செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவருடன் இருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
"குடியரசு தலைவர் வேட்பாளராக பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்வது சரியான ஒன்றுதான். இபிஸ் ஒன்றை தற்போது தெளிவுபடுத்தினார். அப்துல் கலாமை குடியரசு தலைவராக நிறுத்தியபோது, அதிமுகவின் அப்போதைய பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா தமது முழு ஆதரவை வழங்கினார். அதேபோல, தற்போது திரெளபதி முர்மூவுக்கு ஆதரவு தருவதற்கு அதிமுக முடிவு செய்து அதை இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுகவில் பொதுகுழுதான் இறுதி அதிகாரம் படைத்தது. உலகளவில் ஐ.நா சபை எப்படி எல்லா நாடுகளுக்கும் தலைமையாக இயங்குகிறதோ, அதுபோலவே, அதிமுகவில் பொதுக்குழு என்ற அமைப்புதான் அதிக அதிகாரம் கொண்டது. பொதுக்குழுவின் முடிவிற்கு ஓபிஎஸ் கட்டுப்பட்டிருக்க வேண்டும், அதிமுக சட்டத்தின்படி அவர் செயல்பட்டிருந்தால், தனியாக சென்று குடியரசு தலைவர் வேட்பாளரை சந்திக்க வேண்டிய தேவை இருந்திருக்காது,''என்று ஜெயக்குமார் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்படுகிறாரா என செய்தியாளர்கள் கேட்டபோது, ''அதிமுகவை பொறுத்தவரை தொண்டர்களின் நாடியாக இருப்பது பொதுக்குழு. அந்த பொதுகுழுவே ஒற்றை தலைமை தான் கட்சிக்குத் தேவை என்றும் அந்த தலைமை இபிஎஸ் ஆக இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. அதை ஏற்காமல் இருப்பதால் ஓபிஎஸ் தனியாக சென்று திரெளபதி முர்மூவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,''என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.
நானே ஒருங்கிணைப்பாளர்: ஓபிஎஸ்
இதைத் தொடர்ந்து திரௌபதி முர்மூவுக்கு ஆதரவு தெரிவித்த பின்னர் வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏன் தனியாக மேடை ஏறினீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''குடியரசு தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்மூவுக்கு அதிமுகவின் இதயபூர்வ ஆதரவை நான் தெரிவித்தேன். சட்டவிதிப்படி நான்தான் கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக இன்றுவரை செயல்பட்டு வருகிறேன்,''என்று கூறினார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டது என எடப்பாடி பழனிசாமி தரப்பு கூறியது பற்றி கேட்டதற்கு, எந்த பதிலும் சொல்லாமல் அவர் புறப்பட்டுச் சென்றார்.
தனித்தனி மரியாதை அவசியமா?
ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தர ஏற்பாடு செய்தது பற்றி பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்தியிடம் பேசினோம்.
''எங்களை பொறுத்தவரை அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது அவர்களின் உள்கட்சி விவகாரம். அதில் நாங்கள் தலையிட முடியாது. அப்படி செய்தால், அது தவறாகும். அவர்கள் இருவரும் பிளவுபட்டு இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாக தெரியும். எங்கள் வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பது மட்டும்தான் எங்களின் பொறுப்பு,'' என்கிறார் நாராயணன்.
அதிமுக கூட்டணி கட்சியாக இருப்பதால், குடியரசு தலைவர் தேர்தல் வரை அந்த பிளவை பெரிதுபடுத்தாமல் பாஜக காத்திருக்கிறதா என்றும் ஓபிஎஸ் மீது பாஜக அனுதாபத்துடன் செயல்படுகிறதா கேட்டபோது, ''அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை சரி செய்யவேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. பாஜக ஓபிஎஸ்சுக்கு அனுதாப பார்வை காட்டுகிறது என்பது மற்றவர்களின் பார்வை. கூட்டணி கட்சிகள் ஒவ்வொருவரின் வாக்கும் எங்கள் வேட்பாளருக்கு தேவை,''என்கிறார் அவர்.
"இரு தரப்புக்கும் வேறு வாய்ப்பே இல்லை"
அதிமுகவில் இரண்டு தலைவர்களும் தனியாக குடியரசு தலைவர் வேட்பாளரை சந்தித்தது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசினோம்.
''ஒரே கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரும் தனித்தனியாக சந்தித்துள்ளதால், அவர்கள் மத்தியில் உள்ள இடைவெளியை அவர்கள் வெளிப்படையாக காட்டுகிறார்கள் என்பதுதான் அர்த்தம். மேடையில் முதலில் ஓபிஎஸ் வராமல், தனியாக அறையில் இருந்தது அவர் கட்சியில் மேலும் பலவீனமாக இருப்பதை உணர்த்துகிறது. இது ஒரு சம்பிரதாய நிகழ்வுதான். இந்த கூட்டத்தில் இபிஸ் தனது ஆதரவாளர்களுடன் மேடை ஏறி, ஆதரவு தெரிவித்து உரையும் நிகழ்த்தியுள்ளார். இது எடப்பாடி பழனிசாமியின் உறுதியைக் காட்டுகிறது. இருவருக்கும் அங்கு இருக்கை இருந்திருக்கும். ஓபிஎஸ் தனியாக வந்தததை பின்னடைவாகதான் பார்க்கவேண்டும்,''என்கிறார் குபேந்திரன்.
மேலும் அதிமுகவில் பிளவு இருப்பதை உணர்ந்திருந்தாலும், இரண்டு தரப்பையும் பாஜக மேடைக்கு அழைத்துள்ளது பற்றி கேட்டதற்கு, ''அதிமுகவின் வாக்கு தேவை என்பதால், இரு தரப்புக்கும் பாஜக முக்கியத்துவம் தருகிறது என்று சொல்ல முடியாது. பாஜகவுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் என இரண்டு தரப்பினருக்கும் பாஜகவிற்கு ஆதரவு தருவதை தவிர வேறு வழியோ வாய்ப்போ இல்லை. அதிலும், தான் தனித்து விடப்பட்டிருப்பதை போல ஓபிஎஸ் காட்டிக் கொள்வதால், பாஜகவின் அனுதாபம் அவருக்கு தேவை என்றே பார்க்க முடிகிறது,''என்கிறார் அவர்.
இதுநாள் வரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையிலான தலைமை தொடர்பான கசப்புணர்வு, கட்சிக்குள்ளேயும் தலைமைக்கழக வளாகத்துக்கு உள்ளேயும்தான் நீடித்தது. கட்சி விஷயங்களை கட்சிக்குள்ளேதான் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என இரு தரப்பினரும் கூறி வந்தனர். அவர்களின் பூசல்கள், இப்போதுதான் முதல் முறையாக கட்சி அலுவலகம், கட்சி நிகழ்ச்சி தாண்டி, பொதுவெளியில் வெளிப்பட்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்