புதுச்சேரியில் திரெளபதி முர்மூ: பாரதியார் பாடலைப் பாடி எம்.பி, எம்எல்ஏக்களிடம் பிரசாரம்

இந்திய குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள திரெளபதி முர்மூ இன்று புதுச்சேரியில் கூட்டணி கட்சி எம்.பி மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக பழங்குடியின தலைவரான திரெளபதி முர்மூவை பாஜக மேலிடம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து அவர் தமது வேட்பு மனுவை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று தனக்கான ஆதரவைக் கோரி வரும் திரெளபதி முர்மூ சனிக்கிழமை (ஜூன் 7) புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் பிரசாரம் செய்து ஆதரவு கேட்க திட்டமிட்டிருந்தார்.

இதன்படி டெல்லியிலிருந்து சிறப்பு விமானம் மூலம் காலையில் புதுச்சேரி வந்த அவர் தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார்.

புதுச்சேரியில் உள்ளூர் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். முன்னதாக, புதுச்சேரிக்கு தனி விமானத்தில் வந்த திரெளபதி முர்மூவை முதல்வர் என்.ரங்கசாமி, பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிப் பகுதிக்குச் சென்ற திரெளபதி முர்மூவிடம், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதே சமயம், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், "புதுச்சேரி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு அளிப்பர் என்று திரௌபதி முர்மூவிடம் முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்," என்றார்.

பெண்களை போற்றும் பாரதியார் பாடல்

"திரௌபதி முர்மூ பேசும்போது, தமது உரையைத் தமிழில் 'வணக்கம்' என்று சொல்லித் தொடங்கினார். மேலும் பெண்மையை போற்றுகின்ற மகாகவி பாரதியார் பாடலான, 'பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்' என்ற பாடலை தமிழில் பாடி மேற்கோள்காட்டிப் பேசினார். இந்தியாவின் சிறிய மாநிலமான புதுச்சேரிக்கு குடியரசு தலைவர் வேட்பாளரை வாக்கு சேகரிக்க நேரடியாக அனுப்பி வைத்த செயலுக்காக பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவிக்கிறோம்," என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற உறுப்பினர்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பாஜக தரப்பில் 16 உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களுடன் 4 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பாஜகவை சேர்ந்த ஒரு மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள திரெளபதி முர்மூவை நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

மொத்தமுள்ள 6 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேர் தங்கள் ஆதரவு நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ள நிலையில், மீதமிருக்கும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.

மேலும் நியமன உறுப்பினர்களுக்குக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை கிடையாது என்பதால் புதுச்சேரியில் உள்ள 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் இதில் வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

திரெளபதி முர்மூவின் வெற்றியை கணிக்கும் மமதா

இந்த நிலையில், அவருக்கு குடியரசு தலைவர் தேர்தலில் அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மமதா பானர்ஜி, "குடியரசுத் தலைவர் வேட்பாளரை அறிவிக்கும் முன்பாக எதிர்க்கட்சிகளுடன் பாஜக ஆலோசித்து இருந்தால், பொதுநலன் கருதி திரௌபதி முர்மூவுக்கு ஆதரவு அளித்திருப்பேன்," என்று கூறினார்.

"இருப்பினும் பாஜகவுக்கு செல்வாக்கு இருப்பதால் திரௌபதி முர்மூவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த விஷயத்தில் எதிர்கட்சிகள் எடுக்கும் முடிவை நான் பின்பற்றுவேன்," என்றும் மமதா தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக பழங்குடியின தலைவரான திரெளபதி முர்மூவை பாஜக மேலிடம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து தமது வேட்பு மனுவை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் பொறுப்பு அதிகாரியிடம் தாக்கல் செய்த அவர் தமது பிரசாரத்தை ஜூலை 1ஆம் தேதி இமாச்சல பிரதேச மாநிலத்தில் இருந்து தொடங்கினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: