You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜிநாமா: அடுத்தது என்ன நடக்கும்?
"மகாராஷ்டிராவில், ஆளுநரின் உத்தரவின்படி, நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போது தேவையில்லை, எனவே இன்று சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்படாது" என மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் ராஜேந்திர பகவத் தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியையும், சட்ட மேலவை பதவியையும் ராஜிநாமா செய்வதாக நேற்று அறிவித்தார். இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அவசியமில்லை என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டபேரவை செயலாளர் ராஜேந்திர பாகவத் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனுப்பியுள்ளார்.
உத்தவ் தாக்கரே பதவி விலகியது ஏன்?
மகாராஷ்டிரா சட்டசபையில் 288 இடங்கள் உள்ளன. இதில் சிவசேனா எம்.எல்.ஏ. ரமேஷ் லட்கே உயிரிழந்துவிட்டார். எனவே தற்போது சட்டசபையில் 287 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
ஒரு தனிப்பட்ட கட்சியோ அல்லது கூட்டணி கட்சியோ ஆட்சி அமைக்க 144 எம்.எல்.ஏக்கள் தேவை. மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் இருந்து வந்தது. இதில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் 2019ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இந்த கூட்டணி ஆட்சி அமைந்தது.
இந்த கூட்டணிக்கு ஆதரவாக 169 எம்எல்ஏக்கள் இருந்தனர். தற்போது சிவ சேனாவில் 55 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரசில் 53 எம்.எல்.ஏ.க்களும் காங்கிரஸில் 44 எம்எல்ஏக்களும் உள்ளனர்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பந்தர்பூர் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் என்சிபியிடம் இருந்த தொகுதி பாஜகவிடம் சென்றது.
தற்போது 13 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 3 பேர் சிவசேனா கூட்டணியில் அமைச்சர்களாக உள்ளனர். 6 பேர் பாஜக ஆதரவாளர்களாகவும், ஐந்து பேர் சிவசேனா ஆதரவோடும், ஒருவர் காங்கிரஸ் ஆதரவோடும் ஒருவர் என்சிபி ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளனர்.
இந்த நிலையில், சிவசேனை எம்.எல்.ஏ. ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 30க்கும் மேற்பட்டோர் தொடர்பு கொள்ளமுடியாத வகையில், குவாஹாத்தியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்த விவகாரம் கடந்த இரு வாரங்களாக நீடித்து வந்த நிலையில், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிவித்திருந்தார்.
அதாவது, வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சட்டப் பேரவையைக் கூட்ட மகாராஷ்டிர ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதற்கு தடை பிறப்பிக்கக்கோரி சிவசேனை மூத்த தலைவர் சுரேஷ் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தவ் தாக்கரே ராஜிநாமா
இந்த நிலையில், புதன்கிழமை இரவு 9:30 மணியளவில் ஃபேஸ்புக் நேரலையில் பேசிய உத்தவ் தாக்கரே, தனது முதல்வர் பதவியையும், சட்ட மேலவை பதவியையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். மேலும், தனது முடிவுக்காக சிவசேனா தொண்டர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
முதலமைச்சர் பதவியுடன் சட்ட மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்தார்.
"ஜனநாயகத்தில் எண்களைக் காட்ட தலைகள் எண்ணப்படுகின்றன. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த விளையாட்டுகளை நான் விளையாட விரும்பவில்லை. நாளை அவர்கள் சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேவின் மகனை வீழ்த்தியதாகச் சொல்வார்கள்" என்று அவர் கூறினார்.
சோனியா காந்தி மற்றும் சரத் பவார் ஆகியோருக்கு தனது உரையின்போது உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்தார்.
மேலும், "உச்ச நீதிமன்றம் இன்று எந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தாலும், அதை நாங்கள் மதிக்கிறோம், பின்பற்றுவோம்" என்று கூறினார்.
இந்தச் சூழலில், தற்போது அடுத்து பெரும்பான்மை இருப்பதாக கருதும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். அல்லது தங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்த கட்சி, ஆட்சியமைக்க உரிமை கோரலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்