You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக பொதுக்குழு நடக்குமா? இபிஎஸ், ஓபிஎஸ் வகுத்திருக்கும் வியூகம் என்ன?
'அ.தி.மு.க பொதுக்குழுவை நடத்தியே தீருவது' என்ற முனைப்பில் எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழுவுக்குத் தடைபெறும் முயற்சியில் ஓ.பன்னீர்செல்வமும் களமிறங்கியுள்ளனர்.
' பொதுக்குழுவை நடத்துவோம். ஆனால், நீதிமன்றம் தடையை நீட்டித்துவிட்டால் சிரமம். அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனமும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் முடிவு தெரிந்துவிடும்' என்கின்றனர், எடப்பாடி பழனிசாமி தரப்பினர்.
ஓ.பி.எஸ் குறிப்பிடும் 6 பேர்
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரும் ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழு நடத்தப்பட உள்ளது. முன்னதாக, வானகரத்தில் கடந்த 23 ஆம் தேதியன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், 'ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களுக்கு மாறாக புதிதாக வேறு எந்தத் தீர்மானத்தையும் கொண்டு வரக்கூடாது' என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். தொடர்ந்து, அ.தி.மு.கவில் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 'ஜனநாயகப்பூர்வமாக இந்தப் பொதுக்குழு நடைபெறவில்லை' எனக் கூறி ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் வெளியேறினர். இதனைத் தொடர்ந்து ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்குத் தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ' கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற உத்தரவு அவமதிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமான எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்குழு நடக்கும், ஆனால்?
மேலும், பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாகவும் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குக் காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவமதிப்பாக இருக்கும் நிலையில், அவர் தலைமையில் ஜூலை 11 அன்று பொதுக்குழு நடைபெறும் என அறிவித்தது என்பது சட்டவிரோதமானது. எனவே, பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பொதுக்குழுவில் புதிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதனை அறிந்து முன்னதாகவே, உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றையும் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.கவில் இரு தரப்பினர் நடத்தும் சட்டப் போராட்டத்தால், 'ஜூலை 11 பொதுக்குழு நடக்குமா?' என்ற கேள்வி, அக்கட்சியினர் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, அ.தி.மு.க அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டு பேசியபோது, '' ஜூலை 11 ஆம் தேதிக்குப் பிறகு இதுகுறித்தெல்லாம் அவர் விரிவாகப் பேசுவார்'' என்று மட்டும் அவரது உதவியாளர் பதில் அளித்தார்.
இதையடுத்து, அ.தி.மு.க அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ''பொதுக்குழுவுக்கு தற்காலிக அவைத் தலைவரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. அந்த அடிப்படையில் தமிழ்மகன் உசேன் நியமனம் செல்லும். ஆனால் நிரந்தர அவைத் தலைவராக நியமிக்க முடியுமா என்ற விவகாரம், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவைத் தலைவர் பதவியைப் பொறுத்தவரையில் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டிய அவசியம் இல்லை. பொதுக்குழுவே தேர்வு செய்யலாம் என்ற விதி உள்ளது. அந்த அடிப்படையில் அவரைத் தேர்வு செய்யலாம். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தெரிவிக்கப் போகும் பதிலைப் பொறுத்தே அமையும்'' என்கிறார்.
''ஜூலை 11 அன்று பொதுக்குழு நடக்குமா என்ற கேள்வி எழுகிறதே?'' என்றோம். '' கட்டாயம் நடக்கும். அதேநேரம், நீதிமன்றம் தடையை நீட்டித்துவிட்டால் சிரமம். கடந்த பொதுக்குழுவில் அவைத் தலைவரை தேர்வு செய்து டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்மொழிந்த சம்பவமும் நீதிமன்ற அவமதிப்புக்குள் வராது.'' என்கிறார்.
பொதுக்குழு என்ற பேச்சுக்கே இடமில்லை
'' பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு, 'விரைந்து பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்' என்ற தீர்மானமும் இருந்தது. அதையும் தூக்கி எறிந்துவிட்டனர். அ.தி.மு.கவில் யாருக்கும் பொறுப்புகள் இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய பதிலால், சட்ட வல்லுநர்களே அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அப்படியானால், இடைப்பட்ட காலத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோர் கையொப்பமிட்டது எல்லாம் எப்படி செல்லுபடியாகும்? சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்றதே செல்லாததாகிவிடும். பதவிகளே இல்லாவிட்டால் தலைமைக் கழகத்தில் இவர்களால் எப்படி கூட்டத்தைக் கூட்ட முடியும்?'' எனக் கேள்வியெழுப்புகிறார், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளருமான பெங்களூரு புகழேந்தி.
தொடர்ந்து பேசுகையில், '' பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம். இதில் முடிவு வருவதற்கு சற்று தாமதம் ஆகலாம். வரும் ஜூலை 11 அன்று பொதுக்குழு நடப்பதற்கு வாய்ப்பில்லை. இந்த வழக்குகள் எல்லாம் முடியும் வரையில் அ.தி.மு.கவில் பொதுக்குழு என்ற பேச்சுக்கே இடமில்லை.
தொடக்கத்தில் இருந்தே ஓ.பன்னீர்செல்வம் தனக்குரிய அதிகாரம் அனைத்தையும் இழந்தார். அவர்கள் நீட்டும் இடங்களில் எல்லாம் கையொப்பம் போட்டவருக்கே எடப்பாடி தரப்பினர் அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது அவர் துணிந்து இறங்கிவிட்டதால், வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறார். இப்போதும் ஓ.பன்னீர்செல்வம் பணம் கொடுத்தால் அனைவரும் வந்துவிடுவார்கள். ஆனால், பணம் கொடுப்பதற்கு அவர் தயாராக இல்லை'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்