அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை - தற்போதைய நிலவரம் என்ன?

பட மூலாதாரம், S.P.VElumani
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
முன்னாள் அமைச்சரும் அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தி வரும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் எஸ்.பி.வேலுமணியின் மனு மீது பதிலளிக்க தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை, அறப்போர் இயக்கம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பி அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த விசாரணை என்ன நிலையில் உள்ளது?
வழக்கின் பின்னணி
கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை எஸ்.பி வேலுமணி, தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருந்தார்.
அப்போது மாநகராட்சிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதில் ஏற்பட்ட முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஆகிய புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஓராண்டில் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றுள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி
எஸ்.பி.வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டில், மாநகராட்சி ஆணையர்கள் உட்பட பல அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறி அவர்களையும் விசாரிக்க தமிழக அரசிடம் லஞ்ச ஒழிப்பு துறை அனுமதி கோரியுள்ளது.
அதில் விஜயகார்த்திகேயன், கந்தசாமி, பிரகாஷ், மதுசூதனன் ரெட்டி ஆகிய நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 12 அதிகாரிகளை விசாரிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு லஞ்ச ஒழிப்பு துறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு தற்போது வரை அனுமதி வழங்கவில்லை என்கின்றனர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அரசு அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசாங்கத்தின் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. முன்னர் இணை செயலாளர் அந்தஸ்தத்துக்கு மேல் உள்ள அதிகாரிகளை விசாரிக்க அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என இருந்த அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது.

அதன் பின்னர் 2018-ம் ஆண்டு மத்திய அரசு லஞ்ச ஒழிப்பு சட்டத்தில் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தின்படி, அனைத்து தரவரிசையில் உள்ள அதிகாரிகளையும் விசாரிக்க அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என விதிகள் மாற்றப்பட்டன.
தமிழக அரசு அனுமதி வழங்க மறுக்கிறதா?

அதிகாரிகளை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பதை அரசாங்கம் மூன்று மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக ஒரு மாதம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நான்கு மாதங்கள் கழித்தும் அனுமதி வழங்கவில்லை என்றால் என்ன செய்வதென்று விதிகளில் தெளிவாக கூறப்படவில்லை.
லஞ்ச ஒழிப்புத் துறை 12 அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோரியுள்ளது. ஆனால் அரசாங்கம் தற்போது வரை அனுமதி வழங்கவில்லை. வழக்கு தொடர அனுமதி பெற வேண்டும் என்றாலும் விசாரிப்பதற்கே அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்கிற நிலை தான் தற்போது உள்ளது. ஊழல் செய்பவர்களை தண்டிப்போம் எனத் தெரிவித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அதிகாரிகளை காக்கும் நோக்கில் செயல்படாமல் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.

பட மூலாதாரம், S.P. Velumani
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ஒருவர், "விசாரணை அதிகாரிகள் இதுகுறித்து வெளியில் தெரிவிக்க முடியாது. எந்தவொரு வழக்கிலும் முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறபோது அந்தந்த தகவல்கள் முறையாக வெளியிடப்படும்" என்றார்.
"இது பழிவாங்கும் நடவடிக்கை" - அதிமுக
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அதிமுகவின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் இன்பதுரை, "இந்த வழக்கு அதிமுக ஆட்சியில் தான் தொடரப்பட்டது. அப்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி இதில் முகாந்திரம் இல்லை என விசாரணை அறிக்கை சமர்பித்தது. ஆனால் நீதிமன்றம் அத்தோடு வழக்கை முடித்து வைக்கவில்லை.

பட மூலாதாரம், Inbadurai
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக மீண்டும் விசாரணை நடத்த தொடங்கியது. ஒரு வழக்கில் இரண்டு விசாரணை இருக்க முடியாது. லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணை அறிக்கையை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். அதில் விசாரணை அறிக்கையை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை அடிப்படையாக வைத்து இந்த விசாரணையை முடிக்க வேண்டும் என்று தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். உயர்நீதிமன்றம் தமிழக அரசும், வழக்கு தொடர்ந்தவர்களும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளதே தவிர வழக்கு முடிந்துவிடவில்லை. திமுக அரசு லஞ்ச ஒழிப்புத் துறையை பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்தி வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகிறது" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்














