"குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலையின் முதலாம் ஆண்டில் பள்ளி செல்லும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் குறைந்தது 511 பேருக்குத் திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது என்கிறது, சமக்ரா சிக்‌ஷா அபியானின் சமீபத்திய புள்ளிவிவரம். சமக்ரா சிக்‌ஷா அபியான் என்பது பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு.

ஆகஸ்ட் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை எடுக்கப்பட்ட இந்த 'அவுட் ஆஃப் ஸ்கூல் சில்ட்ரன்' புள்ளிவிவரம் (Out of School Children), நீண்டகாலமாக பள்ளிக்கு வராத பெண் குழந்தைகளை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது. இவர்களுள் பெரும்பாலானோர் மீண்டும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுவிட்டனர் என இந்த ஆய்வு கூறுகிறது.

திருமணம் செய்துவைக்கப்பட்ட பள்ளி மாணவிகளில் 11ஆம் வகுப்பு மாணவிகள் 417, பத்தாம் வகுப்பில் 45 பேர், ஒன்பதாம் வகுப்பில் 37 பேர் , எட்டாம் வகுப்பு மாணவிகளில் 10 பேரும் அடக்கம்.

இந்த ஆய்வு விவரங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை, சமக்ரா சிக்‌ஷா அபியான் தரப்பிலிருந்து அதிகாரிகள் கருத்துக் கூற முன்வரவில்லை.

குழந்தை திருமண தடைச் சட்டம் 2006இன்படி, திருமணம் நடைபெற ஒரு பெண் 18 வயது பூர்த்தி செய்தவராகவும், ஆண் 21 வயதை பூர்த்தி செய்தவராகவும் இருக்க வேண்டும். இந்திய அரசின் ஐந்தாவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின்படி (NFHS 5), தமிழ்நாட்டில் 12.8% குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. குழந்தைத் திருமணங்களின் தேசிய சராசரி 23.3 சதவீதமாக இருக்கிறது.

அதேபோன்று, 2019ஆம் ஆண்டில் 2,209 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக, தமிழ்நாடு சமூக நலத்துறையிடமிருந்து பெறப்பட்ட ஆர்டிஐ தகவல் கூறுகிறது. இதே எண்ணிக்கை பெருந்தொற்று காலத்தில் 2020ஆம் ஆண்டில், 3,208 ஆக உயர்ந்துள்ளது.

"குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை"

தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட குழந்தைத் திருமணங்கள் குறைவாக இருந்தாலும், பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏன் குழந்தைத் திருமணங்கள் இன்றளவும் நடைபெறுகின்றன என்பது குறித்து குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் 'தோழமை' அமைப்பின் இயக்குநர் தேவநேயன் பிபிசி தமிழிடம் பேசினார்.

"குழந்தைத் திருமணம் என்பது தமிழ்நாட்டின் பிரச்னை மட்டும் அல்ல. உலகளாவிய பிரச்னை. குழந்தைத் திருமணங்கள் நடந்திருக்கின்றன என பள்ளிக்கல்வித்துறை ஏற்றுக்கொண்டதே வரவேற்கத்தக்கது. இதற்கான தீர்வு கல்வித்துறையோ, சமூக நலத்துறையிடமோ மட்டும் அல்ல. குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதற்கான முதன்மை காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும்போது குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என பொதுச் சமூகம் நினைக்கிறது. ஆனால், குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தச் சென்றால் எங்களை விரட்டிக்கொண்டு வருவார்கள். குழந்தைத் திருமணங்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என சமூகம் நினைக்கவில்லை.

சில பழங்குடி இனங்களில் பெண்கள் பூப்பெய்திய உடனேயே அவருக்குத் திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் நடக்கக்கூடாது என்பதற்காக குழந்தைத் திருமணம் செய்து வைக்கின்றனர்" என்றார் தேவநேயன்.

பெற்றோர்கள் குழந்தைத் திருமணங்கள் செய்துவைக்கும் நிலையில், சமீப காலமாக வளரிளம் பெண்கள் தாங்களாகவே விரும்பி திருமணம் செய்வது அதிகரித்துவருவதாக தேவநேயன் கூறுகிறார்.

"வளரிளம் பெண்களுக்கு வாழ்க்கை திறன் கல்வி நடத்தப்பட வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்தவரையே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் உள்ளனர். அப்படி தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்த 17 வயது சிறுமி ஒருவர், 'எனக்கு கன்னி கழிஞ்சிடுச்சு, அதனால் திருமணம் செய்துகொண்டதாக' என்னிடம் கூறினார். இம்மாதிரியான விஷயங்களில் பெண் குழந்தைதான் தவறு செய்துவிட்டாள் என பேசுவார்கள்.

18 வயதுக்குள்ளான ஆண் - பெண் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிகழ்வுகளும் உள்ளன. இதுவும் மிக ஆபத்தான போக்கு" என தெரிவித்தார் தேவநேயன்.

"குழந்தைத் திருமணங்களை தடுத்தால் எங்களை விரோதியாக நினைக்கிறார்கள்"

குழந்தைத் திருமணங்களை தடுக்கச் செல்லும்போது, தானே சம்மதித்துத்தான் திருமணம் நடைபெறுவதாக, தங்கள் பெற்றோருக்காக சிறுமிகள் மாற்றிப் பேசுவார்கள் என, 'தோழமை' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா கூறுகிறார்.

"கொரோனா காலத்தில் பெரும்பாலும் வளரிளம் பெண்கள் தாங்கள் விரும்பியவருடன் இணைந்து கர்ப்பமான சம்பவங்கள் உள்ளன. அதனை மறைப்பதற்காக பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்தனர்.

கொரோனா காலத்தில் வீட்டோடு திருமணம் செய்துவைக்கலாம், வரதட்சணை வேண்டாம் என மாப்பிள்ளை வீட்டார் கூறியதால் பொருட்செலவுகளை குறைப்பதற்காகவும் 18 வயதுக்குக் கீழான பெண்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இம்மாதிரியான குழந்தைகளை மீட்கும்போது அவர்களின் பெற்றோர் தன் மகள் 18 வயதுக்குக் கீழானவர் என்பதை ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். இதுதவிர, 'நானே சம்மதித்துத்தான் திருமணம் நடைபெற்றது' என அந்த பெண் குழந்தைகளும் விடாப்பிடியாக கூறுவார்கள். பெற்றோர்களுக்காக மாற்றி சொல்வார்கள்.

குழந்தைகளை மீட்கச் சென்றால், ஒரு கிராமமே எங்களை விரோதி போன்று பார்க்கும். அந்த பகுதிகளில் குழந்தைகளுக்கென எந்தவொரு விழிப்புணர்வு திட்டத்தையும் செயல்படுத்தவிட மாட்டார்கள்" என தெரிவித்தார்.

"திறன் வளர்ப்பு கல்வி அவசியம்"

கற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு திறன் வளர்ப்பு மையங்களை ஏற்படுத்துவது, வளரிளம் பெண்கள் தாங்களாகவே விரும்பி 18 வயதுக்குக் கீழ் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கும் என்கிறார், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார்.

"கட்டாய கல்விச் சட்டம் 14 வயதுவரைதான் உள்ளது. அதன்பிறகு ஒரு மாணவர் படிக்கவில்லையென்றால் வேலைக்கு சென்றுவிடுவார். ஆனால், பெண் பிள்ளைகளை பொறுத்தவரையில் கல்வியை தொடர முடியாமல் போனால், அவர்கள் வேறு யாரையும் காதல் திருமணம் செய்துவிடக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் திருமணம் செய்துவைத்து விடுகின்றனர். கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு முன்கூட்டியே திருமணம் செய்துவைக்கின்றனர். முழுநேர பள்ளிக்கு மாற்றாக திறன் வளர்ப்பு மையங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே எங்கும் இல்லை. அவற்றை ஏற்படுத்தி அவர்கள் தொழில் முனைவோராக ஆவதற்கான திறன்களை கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஆசிரியர்களே ஏற்படுத்த வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இன்னும், 18 வயது பூர்த்தியாவதற்கு முன்னரே திருமண ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்துவிட்டு, 18 வயதானவுடனேயே திருமணம் செய்துவைக்கும் சம்பவங்களும் நிகழ்கின்றன. அப்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12ஆம் வகுப்பை தற்போது முடித்துள்ள 17 வயது மாணவி ஒருவருக்கு ஜூன் 30 அன்றுதான் 18 வயது தொடங்க உள்ளது. ஆனால், அதற்கு முன்னரே அவருக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் தனக்கு செப்டம்பர் 1 திருமணம் நடைபெற உள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார். குழந்தைத் திருமண தடைச் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது.

அம்மாணவி கூறுகையில், "தனியார் பள்ளியொன்றில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே வீட்டில் திருமண பேச்சை எடுத்துவிட்டனர். உறவினர் ஒருவரை திருமணம் செய்துவைக்க உள்ளனர். 12ஆம் வகுப்பில் 398 மதிப்பெண்கள் பெற்றேன். தேர்வு சமயத்திலேயே திருமண பேச்சை எடுத்ததால், என்னால் ஒழுங்காக படிக்க முடியவில்லை. திருமணம். எனக்கு 17 வயது நடந்துகொண்டிருக்கும்போதே கடந்த 17ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எனக்கு வழக்கறிஞராக வேண்டும் என்பது விருப்பம். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அப்பா மீதுள்ள அன்பை வைத்து 'எமோஷனல் பிளாக்மெயில்' செய்கின்றனர். திருமணத்தின்போது எனக்கு 18 வயதாகிவிடும் என்பதாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பதாலும் இவ்வாறு செய்கின்றனர்" என்றார்.

"பாலின நீதியை கற்றுத்தர வேண்டும்"

தமிழ்நாட்டில் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறும் குழந்தைத் திருமணங்களை தடுப்பது குறித்துப் பேசிய தேவநேயன், "ஒரு பெண் குழந்தை 5 நாட்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்றால் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கணினியிலேயே 'பாப் அப்' ஆகும் முயற்சி பள்ளிக்கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் முறையாக நடைமுறைப்படுத்தினால், குழந்தைத் திருமணங்கள் குறையும்.

ஆண் குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், பாலின நீதி குறித்து கற்றுத்தர வேண்டும். போக்சோ சட்டம் குறித்து சொல்லித்தர வேண்டும்.

'தாலிக்குத் தங்கம்' என்பதே அரசாங்கம் வரதட்சணை கொடுப்பது போன்றுதான். அதற்கு பதிலாக, இப்போது மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 கொடுப்பது மாற்றங்களை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்.

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவதும் தீர்வாக இருக்க முடியாது. 18-21 வயது வரையிலான இடைப்பட்ட காலத்தில் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதில் கேள்வி எழுகிறது. இதனால் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கவே செய்யும்.

குழந்தைத் திருமணங்களால் நடைபெறும் பாதிப்புகள், பதின் பருவத்தில் கர்ப்பமாகுதலின் பாதிப்புகளை பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்வது குறைந்துவிட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்" என்றார், தேவநேயன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: