மகாராஷ்டிரா நெருக்கடி: சொகுசு விடுதிகளில் நடக்கும் 'ரகசிய பேர அரசியல்' இந்திய மக்களாட்சியின் அங்கமாகிவிட்டதா?

நம் நாட்டின் அரசியல் மீண்டும் சட்டமன்றங்களில் இருந்து ஆடம்பர விடுதிகளுக்கு மாறியுள்ளது.

இந்தியாவின் பணக்கார மாநிலமான மகாராஷ்டிராவில் இத்தகைய நிகழ்வு சமீபத்தில் அரங்கேறியிருக்கிறது. அம்மாநிலத்தில் செல்வாக்குமிக்க அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சட்டமன்ற உறுப்பினர்கள் - வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கெளஹாத்தி நகரில், தங்கள் வீடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் உள்ள ஓர் உயர்தர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் ஜனநாயக நடைமுறை என்பது சட்டமன்றங்களில் பாதிக்கு மேல் பெரும்பான்மையை நிரூபிக்கும் எந்தக் கட்சியையும் அரசு அமைக்க அனுமதிக்கிறது. ஆகவே, தேர்தலில் வெற்றிப் பெற்ற வாக்குகள் குறைவாக இருக்கும்போது, அரசு அமைக்கும் கட்சி, சில சமயங்களில் அவர்களின் சொந்த அதிருப்தியுள்ள சட்டமன்ற உறுப்பினர்களாலும், கூட்டணி கட்சிகளாலும் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது.

இது "ரிசார்ட் அரசியல்" எனப்படும் நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்படும் வழக்கத்திற்கு வழிவகுக்கும். அங்கு ஓர் அரசியல் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களைச் சுற்றி வளைத்து, அவர்களை பாதுகாப்பான ரிசார்ட் அல்லது விடுதியில் அழைத்துச் செல்கிறது. அங்கு அவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுகிறார்கள்.

மேலும், அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்பவர்களை தடுக்க பெரும் முயற்சி செய்வார்கள். ஷிண்டே தனது குழுவை அஸ்ஸாமிற்கு மாற்றியதாக செய்திகள் கூறுகின்றன. ஏனெனில் அவர்கள் முதலில் அழைத்துச் செல்லப்பட்ட இடமான குஜராத், 'மகாராஷ்டிராவிற்கு மிக அருகில்' இருந்ததால், அதிருப்தியடைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் திரும்பும் அபாயம் உள்ளது.

காங்கிரஸ் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (NCP) கூட்டணியில், மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள்.

ஷிண்டேவும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் இப்போது கூட்டணியில் இருந்து தங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அச்சுறுத்தி, அரசை சரிவின் விளிம்பிற்குத் தள்ளுகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியுடன் ஷிண்டே புதிய கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படி இருந்தாலும், இந்த நெருக்கடியில் எந்தப் பங்கும் இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.

புதன்கிழமையன்று, மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர்கள் அஸ்ஸாமுக்கு விமானத்தைப் பிடிக்க குஜராத் விமான நிலையத்தில் ஓடும் வீடியோக்கள் வைரலானது. அரசியல்வாதிகளை நிருபர்கள் இடைமறித்தப்போது, அவர்கள் முட்டி மோதிக்கொண்டு சென்றனர்.

"ஒரு திரைப்படத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் போல் தெரிகிறது, " என்று ஒரு சமூக ஊடக பயனர் எழுதினார்.

இத்தகைய காட்சிகள் இந்திய அரசியலில் புதிதல்ல. 1980களில், முதன்முதலில், அரசியல் கட்சிகள் தங்களது சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் கட்சி கலைக்கப்படும் என்று அஞ்சும் போதெல்லாம் விடுதிகளில் அவர்களை தங்க வைத்தனர்.

இதற்கு முன், அரசை உருவாக்க அல்லது கலைக்க முடிவுகள் எடுக்கும் அரசியல்வாதிகளுக்கு விருந்தளித்து, சில இடங்கள் பிரபலமடைந்தன.

1983ஆம் ஆண்டில், கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, தனது அரசை வீழ்த்த எதிர்கட்சி முயற்சிக்கிறது என்று அஞ்சியபோது, ​​தனது சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு சொகுசு ரிசார்ட்டுக்கு அனுப்பினார்.

ஒரு வருடம் கழித்து, இதேபோன்ற நிகழ்வு ஆந்திர பிரதேச மாநிலத்தில் நடந்தது. அங்கு முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, வரவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தனது திட்டங்களின்படி வாக்களிப்பதை உறுதிசெய்ய பல சட்டமன்ற உறுப்பினர்களை கர்நாடகாவுக்கு அனுப்பி வைத்தார்.

இத்தகைய நிகழ்வுகள் 1980களில் பத்திரிகைகளில் அதிகம் பேசப்பட்டன. இன்றைய அரசியல் நிகழ்வுகள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளிவருகின்றன.

2019 ஆம் ஆண்டில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாநில அரசு, எதிர்கட்சி தனது சட்டமன்ற உறுப்பினர்களை தங்களுக்கு எதிராக திருப்புவதாக உணர்ந்தபோது, ​​​​அந்த அரசு அவர்களை ஒரு சொகுசு விடுதிக்கு மாற்றியது. அரசியல் நிச்சயமற்ற நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வெடுக்கும் காட்சிகள் வைரலானது.

இது அரசியல் கட்சிகளுக்குள் பலவீனமான ஜனநாயக கட்டமைப்புகளை சுட்டிக் காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

"கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஒப்பிடுகையில் அவர்கள் அதிகாரமற்றவர்களாக இருப்பதால் சட்டமன்ற உறுப்பினர்கள் சில சமயங்களில் ஆதரவுகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்," என்று அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா விளக்குகிறார்.

"அவர்களின் நியமனம் அவர்கள் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் பொறுத்தது. ஆகவே அவர்கள்ள் ஏதோ ஒரு முகாமில் ஒட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்கள்."

இதை அரசியல் எழுத்தாளர் சுதிர் சூர்யவன்ஷி ஆமோதிக்கிறார்.

"நெறிமுறைகள், கொள்கைகள், சித்தாந்தம் மற்றும் கட்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவை இப்போது எந்த பங்கும் வகிப்பதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரதிநிதியும் அதிகாரத்தில் இருக்க விரும்புகிறார்கள்," என்று அவர் கூறுகிறார்.

இந்தியாவின் கட்சித் தாவல் தடைச் சட்டம் தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சிக்களுக்கான ஆதரவை மாறுவதைத் தடுக்கிறது. ஆனால், ஓர் அரசியல் கட்சியிலிருந்து வெளியேறும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சட்டமன்றத்தில் அதன் மூன்றில் இரண்டு பங்கு பலமாக இருக்கும்போது இந்த சட்டம் பொருந்தாது. அதனால்தான் கட்சிப் பிரிவினைகள் அதிக அளவில் நடக்கின்றன.

இந்தியாவில் பல வலுவான பிராந்தியக் கட்சிகள் உள்ளன. இதனால், மாநிலத் தேர்தல்கள் பெரும்பாலும் பிரிக்கப்பட்ட முடிவுகளைத் தருகின்றன. இது கட்சிகளிடையே சலசலப்பு ஏற்பட இடமளிக்கிறது.

"எந்தவொரு அரசியல் சூழலிலும், உங்களிடம் அதிகமான சிறிய கட்சிகள் இருந்தால், போட்டியை ஒருங்கிணைக்கவோ அல்லது ஒரு தலைமையாகவோ ஒரு கட்சி எப்போதும் இருக்கும். அரசியல்வாதிகளும் அப்படித்தான் செயல்படுவார்கள்," என்று வர்மா விளக்குகிறார்.

இந்த குறைபாடுகள் வெளிப்படும் போதெல்லாம், பெரும்பாலும் உயர்தர ரிசார்ட்டுகள் அல்லது விடுதிகளுக்கு அழைத்து செல்லப்படும் அரசியல்தான் அரங்கேறும். சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் மாநிலங்கள் அரசியல் நெருக்கடியில் இருக்கும்போது, அவர்கள் கிரிக்கெட் மற்றும் சீட்டு விளையாடுவதும், ஓய்வு விடுதிகளில் ஓய்வெடுப்பதும் கேமராவில் சிக்கியுள்ளது.

அரசியல்வாதிகள் அலைப்பேசிகள் உட்பட அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் அணைத்து, மூத்த தலைவர்களின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

2019 ஆம் ஆண்டில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலத்தில் இரண்டு மூத்த தலைவர்களுக்கிடையில் கடுமையான உட்கட்சிப் பூசல் ஏற்பட்டப்போது, அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் மேஜிக் ஷோக்களும், இரவு நேரங்களில் திரைப்படங்களும் திரையிடப்பட்டன. அவர்களின் இந்த சிறிய விடுமுறை, இணையத்தில் பல மீம்கள் மற்றும் நகைச்சுவைகளுக்கு வழிவகுத்தது.

ஆனால் ​​விஷயங்கள் எப்போதும் திட்டமிட்டபடி நடக்காது. குறிப்பாக, சில சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் செயலை மீண்டும் சிந்திக்கும் போது, அப்படி நடக்காது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொகுசு விடுதிகளில் இருந்து தப்பிக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இம்முறையும், மகாராஷ்டிராவில் உள்ள சில சிவசேனை உறுப்பினர்கள், அவர்கள் 'பிடித்து வைக்கப்பட்டத்தையும்', கடைசியில் 'தப்பித்ததையும்' தெளிவாக விவரித்துள்ளனர்.

சில கிளர்ச்சி செய்யும் தலைவர்கள் மும்பையில் இரவு உணவிற்குச் செல்வதாகத் தங்களிடம் கூறியதாகவும், அதற்குப் பதிலாக அவரை குஜராத் மாநிலத்திற்கு அழைத்து சென்றதாகவும் கைலாஷ் பாட்டேல் கூறுகிறார். அவர் காரில் இருந்து தப்பித்ததாகவும், மும்பைக்கு திரும்புவதற்கு மோட்டார் சைக்கிளிலும் பின்னர் லாரியிலும் பயணம் செய்யும் வரை, பல மைல்கள் நடக்க வேண்டியிருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

மற்றொரு சிவசேனை சட்டமன்ற உறுப்பினர், குஜராத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயன்றபோது, சிலர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதித்ததாகக் கூறினார். இருந்தும், அவர் தப்பி ஓடி, இப்போது தாக்கரேவுக்கு தனது ஆதரவை அளித்துள்ளார்.

இத்தகைய நாடகம் நல்ல தொலைக்காட்சிக்கான விஷயத்தை உருவாக்கினாலும், அது அரசியலில் வேகமாக மோசமடைந்து வரும் நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டுகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: