You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விற்பனைக்கு வந்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்யவுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 4ம் தேதிக்கு முன்னதாக விண்ணப்பங்களை அனுப்பவேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவதாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஸ் கேபிடல் என்ற நிறுவனத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கானவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கூறி 2016ல் தொடர் போராட்டங்களில் பொது மக்கள் ஈடுபட்டனர். 2018 மே மாதம் 22ம் தேதி, ஆயிரக்கணக்கான போராட்டக்கார்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தபோது, காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் குறைந்தபட்சம் 13 பேர் பலியாகினர். அதன் எதிரொலியாக, தமிழக அரசு அந்த ஆலையை மூட உத்தரவிட்டது.
மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்திவரும் நிலையில், அந்த ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்கள் சந்தேகம்
பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாத்திமா பாபு, ஸ்டெர்லைட்டின் இந்த விளம்பரம் அந்த நிறுவனம் வேறு பெயரில் மீண்டும் இயங்குவதாக செய்யப்படும் ஏற்பாடாக இருக்கலாம் என போராட்டக்காரர்கள் கருதுவதாக கூறுகிறார்.
''ஸ்டெர்லைட் ஆலையை விற்கப்போவதாக விளம்பரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளம்பரத்தில், அந்த ஆலை இயங்கும் நிலையில் தயாராக இருப்பதாக சொல்கிறார்கள். அதோடு, ஆலையின் எல்லா பகுதிகளும் முழுத்திறன் கொண்டதாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலை இயக்கத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை கணக்கில் கொண்டுதான் மக்கள் போராடினார்கள், ஆலை மூடப்பட்டது. தற்போது அந்த நிறுவனம் வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொண்டு மீண்டும் ஆலையை செயல்படவைப்பதற்காக, ஆலையை விற்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது,''என்கிறார்.
மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தில் வேலையில் இருந்தவர்கள் பலருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டது குறித்து கேட்டபோது, ''ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு முக்கிய காரணம் அந்த ஆலை இயங்குவதால், நிலம், நீர் மாசுபாடு அதிகரித்து, பொது மக்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டார்கள் என்பதுதான். இதற்கு முன்பாக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மாசுபாட்டை ஏற்படுத்திய ஆலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் மாற்று வேளைகளில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் சாய ஆலைகள், பட்டாசு தொழிற்சாலைகள் மூடப்பட்டது இதற்கு எடுத்துக்காட்டு. இதுபோல பல ஆலைகள் இந்தியாவில் மூடப்பட்டுள்ளன,''என்கிறார் பாத்திமா பாபு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்