You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக அரசியல்: ஓபிஎஸ் சென்னையில், இபிஎஸ் சேலத்தில் திடீர் கூட்டம் - நடந்தது என்ன?
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையில் இல்லாத நிலையில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று முக்கிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கு குழுமிய தொண்டர்கள் 'ஒற்றைத் தலைமை' கோரி கோஷங்களை எழுப்பினர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்திற்கு இன்று காலையில் வைத்தியலிங்கம், பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், வைகைச்செல்வன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர், செம்மலை, ஆர்.பி. உதயகுமார், வளர்மதி, ஜெயக்குமார், சி.பி. சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்குப் பிறகு, சி.வி. சண்முகம் வெளியேறிச் சென்றார். சிறிது நேரத்தில் தலைமை அலுவலகம் முன்பாக சிறிது சிறிதாக ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூடினர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரும் வளர்மதியும் வெளியேறினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், வரவிருக்கும் பொதுக் குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து நிர்வாகிகள் விவாதித்ததாகத் தெரிவித்தார். அதற்கு சற்று நேரத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு வருவதாக தகவல் வந்த நிலையில், அது குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஓ. பன்னீர்செல்வம் வருவதால், அவரைச் சந்திக்க விரும்பாமல் புறப்படுகிறீர்களா எனக் கேட்டபோது, "இது போன்ற கேள்விகளை எழுப்பக்கூடாது. இது தவறு. கூட்டம் முடிந்ததால் புறப்படுகிறேன்," என்று ஜெயக்குமார் பதிலளித்தார்.
அவருடைய கார் வெளியேறும்போது, அங்கு கூடியிருந்த ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், காரைச் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். அ.தி.மு.கவை ஜெயக்குமார் அழித்துக்கொண்டிருப்பதாக சிலர் சத்தம் போட்டனர்.
இதற்கு சிறிது நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தை வந்தடைந்தார். அங்கே குழுமியிருந்த அவரது ஆதரவாளர்கள், "ஒற்றைத் தலைமை ஓ.பி.எஸ்" என்ற கோஷங்களை எழுப்பினர்.
'பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும்'
இதற்குப் பிறகு வெளியில் வந்த முன்னாள் அமைச்சர் சி. பொன்னைய்யன், "அ.தி.மு.கவில் எந்த பிரச்னையும் இல்லை. ஓ.பி.எஸ்சும் இ.பி.எஸ்சும் நகமும் சதையும் போல உள்ளனர். அ.தி.மு.கவின் பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறும்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பிறகு ஆலோசனைக் கூட்டம் முடிந்து, ஓ. பன்னீர்செல்வம் வெளியேறினார். அப்போதும் அவரது ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தியும் ஒற்றைத் தலைமையாக அவரது தலைமையே இருக்க வேண்டுமென்றும் கோஷங்களை எழுப்பினர்.
அவர் வெளியேறிய பிறகு அங்கிருந்தவர்கள் மெல்லமெல்ல கலைந்தனர்.
அ.தி.மு.கவின் பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆதரவாளர்களும் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டுமென தனித்தனியே கோரிக்கைகளை எழுப்பிவருகின்றனர். மாநிலத்தின் பல இடங்களில் இருவரது ஆதரவாளர்களும் தனித்தனியே போஸ்டர்களையும் ஒட்டிவருகின்றனர்.
எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று சேலத்தில் இருக்கிறார். அங்கு அவரை முன்னாள் துணை சபாநாயகரும் கட்சியின் மூத்த தலைவருமான தம்பிதுரை, எம்.பி முனுசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினர். எடப்பாடி பழனிசாமி சென்னையில் இல்லாத நிலையில், கட்சித் தலைமையகத்துக்கு திடீரென ஓபிஎஸ் வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுக்குழுவை எதிர்த்து தொண்டர் வழக்கு
வரும் 23இல் அதிமுக பொதுக்குழுவை கூட்ட தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயுள்ள ஆவிலிபட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு நீதிபதி பிரியா ஒத்திவைத்துள்ளார். அதிமுக பொதுக்குழு ஜூன் 23ஆம் தேதி நடத்தப்படுவதற்கு முன்பாக, அதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார். இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் விதிகளின்படியே பொதுக்குழு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்