You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் தனியார் ரயில்: கோவை - ஷீரடி ரயில் ஏன் சர்ச்சைக்குள்ளாகிறது?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் கோவையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்கு இயக்கப்படும் முதல் தனியார் ரயில் ஜூன் 14-ம் தேதி தன் முதல் தனியார் சேவையை தொடங்குகிறது.
பாரத் கௌரவ் என்கிற பெயரில் கோவையிலிருந்து புறப்படும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், பெங்களூர் வழியாக ஷீரடி செல்கிறது. கோவையைச் சேர்ந்த எம் அண்ட் சி என்கிற நிறுவனம் இந்த ரயிலை இயக்குவதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளது.
கோவையிலிருந்து ஷீரடி சென்று திரும்புவதற்கு ஸ்லீப்பர் வகுப்பிற்கு ரூ.2,500, மூன்றாம் ஏசி வகுப்பிற்கு ரூ.5,000, இரண்டாம் ஏசி வகுப்பிற்கு ரூ.7,000 மற்றும் முதல் ஏசி வகுப்பிற்கு ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. அதுவே தங்கும் வசதியுடன் கூடிய பேக்கேஜ் கட்டணம் ரூ.3,000 சேர்த்து வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கோவை - ஷீரடி தனியார் ரயிலின் கட்டணம் பல மடங்கு அதிகமாக இருப்பதாகவும் இந்த உத்தரவை திரும்பப் பெற்று ரயில்வே துறையே இந்த ரயிலை இயக்க வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய இரயில்வே துறை அமைச்சர் அண்மையில் சென்னை வந்தபோது ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என அடித்துச் சொன்னார்கள். ஆனால் அதற்கு மாறாக முதல் தனியார் ரயிலை தமிழகத்தில் இருந்து இயக்குவது வன்மையான கண்டனத்துக்குரியது.
தனியார் ரயிலுக்கு இயல்பை விட இரண்டு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் ரயில்வேயை தனியாரிடம் விடக்கூடாது எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கோவை - ஷீரடி ரயிலை ரயில்வே நிர்வாகமே எடுத்து நடத்திட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசியவர், `மத்திய அரசு பல்வேறு வழித்தடங்களை முதல்கட்டமாக தனியார்மயப்படுத்த போவதாக முதலில் அறிவித்தது. இந்திய ரயில்வே தேசிய ரயில் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி லாபம் தரும் பயணிகள் ரயில் வழித்தடம் மற்றும் அனைத்து சரக்கு ரயில் வழித்தடங்களையும் தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவில் ரயில்வே உள்ளது.
அதன் முதல்படியாக கோவை - ஷீரடி ரயில்வே திட்டத்தை பார்க்க முடிகிறது. இது தொடர்பான அறிவிப்பு வந்ததிலிருந்தே இதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். அப்போது அச்சப்பட்டதைப் போலவே தான் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணங்கள் இரு மடங்கு வரை அதிகமாக உள்ளது.
ரயில்வே துறையின் அமைப்பான ஐ.ஆர்.சி.டி.சி ஏற்கனவே பல சுற்றுலா வழித்தடங்களில் ரயில்களை இயக்கி வருகின்றன. தமிழ்நாட்டிலிருந்துமே பல்வேறு சுற்றுலா ரயில்கள் இயங்குகின்றன. அவற்றின் கட்டணம் ரயில்வேயின் அடிப்படை கட்டணங்களை சார்ந்ததாகவே இருக்கும்.
அதுபோல ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே இந்த ரயிலையும் இயக்கலாம். மக்களுக்கு பயன்படும் பொதுத்துறை நிறுவனங்களை தொடர்ந்து தனியார்மயப்படுத்துவதில் மத்திய அரசு குறியாக உள்ளது. முதலில் மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து செய்யப்பட்டது. தற்போது கட்டணங்களையும் தனியாரே நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது. இந்த உத்தரவை திரும்பப்பெற வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக எம் அண்ட் சி நிறுவனத்தைச் சேர்ந்த முகுந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "ரயில்களை இயக்குவது எங்களுக்கும் இது முதல் முறை தான். அதனால் பரிட்சார்த்த முறையில் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளோம். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறுவதைப் பொருத்து அடுத்து பல்வேறு வழித்தடங்களிலும் ரயில்களை இயக்க முடிவெடுக்கப்படும்
ரயிலை இயக்குவதற்கு எங்கள் நிறுவனம் சார்பில் ரயில்வேக்கு முன் பணமாக ஒரு தொகையை செலுத்திவிட்டு தான் ரயிலை இயக்குகிறோம். அடுத்தடுத்து தேவைகளைப் பொறுத்து புதிய வழித்தடங்களில் ரயில்களை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு அனுமதி பெறப்படும்.
மேலும் ஏற்கனவே ரயில்கள் இயங்கும் வழித்தடங்களில் ரயில்களை இயக்க அனுமதி கோர முடியாது. கோவையிலிருந்து ஷீரடிக்கு நேரடி ரயில் வசதி கிடையாது. ஆனால் ஷீரடிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிக அளவில் உள்ளனர். அதனால் தான் இந்த வழித்தடத்தை முதலில் தேர்வு செய்தோம்" என்றார்.
மற்ற ரயில்களை விட கட்டணம் பல மடங்கு உயர்வாக உள்ளது தொடர்பான கேள்வியை முன்வைத்தோம். அதற்குப் பதிலளித்தவர், "ஐ.ஆர்.சி.டி.சி ரயில்வே நிர்வாகத்தினுடையது. ரயிலை இயக்க அவர்களுக்கு செலவாகின்ற தொகையிலே எங்களுக்கும் எப்படி அனுமதி வழங்குவார்கள். ரயில்கள், வழித்தடம், பணியாளர்கள் என அனைத்துமே ரயில்வே நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா ரயில்களின் கட்டணம் சற்று குறைவாக உள்ளது.
ஆனால் எங்களுக்கு விதிக்கப்படுகின்ற கட்டணம் வேறு. ரயில்வேயின் அனைத்து சேவைகளை பயன்படுத்தவும் நாங்கள் தனித்தனியாக கட்டணம் செலுத்துகிறோம். அதனால் தான் கட்டணம் வேறாக உள்ளது" என்றார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த முருகேஷ், "ரயில்வேயை தனியார்மயப்படுத்துவதை எங்கள் சங்கம் எதிர்க்கிறது. அனுபவம் வாய்ந்த ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனம் மூலமே இந்த ரயிலை இயக்காமல் தனியாருக்கு கொடுப்பது சரியான முடிவல்ல.
மத்திய அரசு தன் சொத்துக்களை விற்பதும் தனியாருக்கு கொடுப்பதன் மூலமாகவும் ரூ.6 லட்சம் கோடி பணம் திரட்ட இலக்கு வைத்திருந்தது. அதில் ரயில்வே துறையில் ரூ.1.5 லட்சம் கோடி திரட்ட இலக்கு வைக்கப்பட்டிருந்தது. அதற்காக 151 வழித்தடங்களை தனியார்வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன் முதல்படியாக இதைப் பார்க்க முடிகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்" என்றார்.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தெற்கு ரயில்வேயின் தலைமை செய்தி தொடர்பாளர் குகனேஷ், "சுற்றுலா துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ரயில்வே இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடந்த காலங்களிலும் தனியாருடன் இணைந்து ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இது முதல்முறை அல்ல.
ரயில்வே கட்டண ஒப்பீடு என்பது தவறு. கோவை ஷீரடிக்கு நேரடி ரயில் என்பது கிடையாது. மேலும் இந்த ரயிலில் ஒரு முழுமையான ஆன்மீக அனுபவத்தை வழங்க பல கூடுதல் சேவைகள் உள்ளன. கட்டணத்தை ரயிலை இயக்கும் நிறுவனம் தான் தீர்மானிக்கும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த வழித்தடத்தில் ரயிலை இயக்க அனுமதிக்கப்படுகிறது.
இதன் மூலம் ரயில்வேக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.3.4 கோடி வரை வருமானம் கிடைக்கும். ரயில்வேக்கு வருமானம் திரட்டவும் கொரோனாவால் முடங்கிப் போன சுற்றுலா துறையை ஊக்குவிக்கவும் தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மேலும் இரண்டு இடங்களிலிருந்து தனியார் சுற்றுலா ரயில்கள் இயக்கப்பட உள்ளன" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்