தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் - காரணம் என்ன?

பட மூலாதாரம், @chennaipolice_
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை கொடுங்கையூரில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி ஒருவர் உயிரிழந்திருப்பது, மாநிலத்தில் தொடரும் காவல் நிலைய மரணங்கள் குறித்த கவலையை அதிகரித்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற அப்புவை ஜூன் 11ஆம் தேதி இரவு நகை திருட்டு தொடர்பான ஒரு வழக்கின் விசாரணைக்காக காவல் துறையினர் அவரது வீட்டில் இருந்து அழைத்துச் சென்றனர். அவரை பழைய கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் மயங்கி விழுந்ததாகவும் இதையடுத்து அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் காவல்துறையினர் கூறினர்.
ராஜசேகர் உயிரிழந்த தகவலைக் கேட்டதும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனை முன்பாகத் திரண்டனர். ராஜசேகர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டதாலேயே உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினர். ராஜசேகர் நல்ல உடல் நலத்துடன் இருந்ததாகவும் அவருக்கு எந்த உடல்நலக் கோளாறும் இல்லையென்றும் தெரிவித்தனர்.
ராஜசேகர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அவரை கைது செய்த காவல் நிலைய அதிகாரி ஜார்ஜ் மில்லர், துணை ஆயவாளர் கன்னியப்பன், தலைமைக் காவலர் ஜாய்சேகர், மணிவண்ணன், காவலர் சத்தியமூர்த்தி ஆகிய ஐந்து பேரையும் இடைநீக்கம் செய்து காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருக்கிறார். வழக்கு குற்றப் பிரிவு, குற்ற புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ராஜசேகர் தொடர் குற்றங்களில் ஈடுபடும் 'பி பிரிவு' சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளியாக சோழவரம் காவல்துறையினரால் வகைப்படுத்தப்பட்டிருந்தார். அவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காவல் நிலைய மரணங்கள் நடந்திருப்பது மனித உரிமை ஆர்வலர்களை அதிரவைத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் தொடரும் காவல் நிலைய மரணங்கள்

1. 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று நகை திருட்டு வழக்கு ஒன்றில் சீர்காழியைச் சேர்ந்த சத்தியவாணன், அப்துல் மஜீத், சூர்யா ஆகியோர் தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் சத்தியவாணன் உயிரிழந்தார். விசாரணையின்போது சத்தியவாணனுக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாகவும் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.
2. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் சேவல் கட்டு மூளை பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் என்பவரை பாலியல் புகார் ஒன்று தொடர்பாக பரமத்தி வேலூர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மயக்கமடைந்து உயிரிழந்தார்.
3. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில், 2021 டிசம்பர் மாதம் 4ஆம் தேதி மணிகண்டன் என்ற கல்லூரி மாணவர் காவல் துறையினரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு வீடு திரும்பினார். அடுத்த நாள் அதிகாலையில் அவர் உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதாலேயே தங்கள் மகன் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.
4. திருநெல்வேலியில் ஒரு வாகனத் திருட்டு வழக்கில் விசாரணைக்காக 2022 பிப்ரவரி 5ஆம் தேதி மேலப்பாளையம் ஆமீன் புரத்தை சேர்ந்தச் சேர்ந்த சுலைமான் என்பவர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, மயங்கி விழுந்ததாகவும் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

5. 2022 ஏப்ரல் 18ஆம் தேதி சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் 25 வயதுடைய விக்னேஷ் என்பவர் உயிரிழந்தார். புரசைவாக்கத்தில் ஆட்டோவில் வந்த விக்னேஷ், சுரேஷ் ஆகிய இருவரும் காவல்துறையால் அழைத்துச் செல்லப்பட்டு, பிறகு போலீஸ் காவலில் இருக்கும்போதே விக்னேஷ் மரணமடைந்தார். இந்த நிகழ்வில், விக்னேஷின் குடும்பத்தினர் கடுமையாக மிரட்டப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
6. திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி என்பவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி ஏப்ரல் 26ஆம் தேதி காலை திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர் ஏப்ரல் 27ஆம் தேதி காலையில் திருவண்ணாமலை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தங்கமணிக்கு வலிப்பு ஏற்பட்டதாக அவரது உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரவு 9 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல் நிலைய மரணங்கள் குறித்து தொடர்ந்து போராடி வரும் மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகம், தற்போது உயிரிழந்துள்ள ராஜசேகரின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஏற்கனவே மனித உரிமை ஆணையத்தால் கண்டிக்கப்பட்டவர் என்றும், சனிக் கிழமை காலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வரை அவரை காவல் நிலையத்தில் வைத்திருந்தது ஏன் என்றும் இதற்கு மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பொறுப்பேற்க வேண்டுமென்றும் மக்கள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த மரணம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கும் அந்த அமைப்பு புகார்களை அனுப்பியுள்ளது.
காவல் நிலையத்தில் மரணமடையும் எல்லோருமே, காவல்துறை சித்ரவதையால் மரணமடைவதில்லை என்கிறார் ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி. தவிர, காவல்துறையினரும் கைதிகள் குறித்து மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
"போலீஸ் காவலில் மரணமடையும் எல்லோருமே காவல்துறையின் துன்புறுத்தலில் மரணமடைவதில்லை. பிடிபட்ட கைதிகளுக்கு நோய் இருக்கலாம். அல்லது ஊர்க்காரர்கள் பிடிக்கும்போது அடித்திருப்பார்கள். எல்லாவற்றையும் காவல்துறை மரணம் என்று சொல்லக்கூடாது.

பல சமயங்களில் காவல்துறையினர், கைதுகளின்போது கவனக் குறைவாக இருக்கின்றனர். ஒருவரைக் குற்றவாளி என்று அழைத்துவந்துவிட்டால், அங்கிருக்கும் உயரதிகாரி அவர்களை மிகக் கவனமாக கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் அடிக்கக்கூடாது. கைது செய்ய வேண்டிய குற்றவாளி எனில் உடனடியாக நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்று ரிமாண்ட் செய்ய வேண்டும். கைது தேவையில்லையென்றால், ரிமாண்ட் செய்து, ஜாமீனில் விட்டுவிட வேண்டும்" என்கிறார் கருணாநிதி.
ஆனால், சில சமயங்களில் காவல்துறையினர் கடுமையாக இருக்க வேண்டியிருக்கிறது என்கிறார் அவர். "எவ்வளவோ இடங்களில் திருடனைப் பிடித்து, திருடப்பட்ட சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. காவல் நிலையத்திற்கு அழைத்துவந்த பிறகு, அந்த வழக்கிற்கு சம்பந்தமில்லாதவர்கள் போகிற போக்கில் அடிப்பதெல்லாம் தேவையில்லாதது. காவல்துறையினரின் பயிற்சியில் இது தொடர்பாகத்தின் மிக விரிவாக சொல்லிக் கொடுக்கிறோம். இருந்தபோதும் இதுபோல நடக்கிறது. தமிழ்நாட்டில் நடக்கும் கைதுகளின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இம்மாதிரி சம்பவங்கள் பெரிதாக அதிகரிக்கவில்லையென்பது புலப்படும்" என்கிறார் அவர்.
இதில் காவலர்களை மட்டும் குற்றம் சொல்லி பயனில்லை; மேலதிகாரிகளையும் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்கிறார் மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திஃபேன். "இந்த மரணத்தைப் பொறுத்தவரை, பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அதற்காக காத்திருக்கிறோம். ஆனால், இறந்தவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். ஆகவே, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்" என்கிறார் அவர்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் அதிகரித்திருக்கிறதா என்று கேட்டபோது, "இந்த அரசை ஒரு கவனக் குறைவான அரசு என்று சொல்ல மாட்டேன். ஆனால், விக்னேஷ் வழக்கு போன்ற சில தருணங்களில் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். வேறு தலையீடுகள் இருக்கலாம். ஆனால், தற்போதைய வழக்கில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கைதி இறந்த அன்றே சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். பல வழக்குகளில் நாங்கள் இதற்காக 3 வருடமெல்லாம் வழக்கு நடத்தியிருக்கிறோம். அதேபோல, சம்பவம் நடந்த அன்றே இடைநீக்கம் செய்திருக்கிறார்கள். அதுவும் ஆய்வாளரே இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்" என்கிறார் ஹென்றி.
வரும் 24ஆம் தேதி மாநில காவல் முறையீட்டு ஆணையம் குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வரவிருக்கிறது. "மாநில காவல் முறையீட்டு ஆணையத்திற்கு தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி இருக்க வேண்டும். ஆனால், அ.தி.மு.க. அரசு, உள்துறைச் செயலர் இருக்க வேண்டுமெனக் கூறியிருந்தது. அதனை எதிர்த்துத்தான் இந்த வழக்கு. அதில் ஒரு நல்ல முடிவு வருமென எதிர்பார்க்கிறோம்" என்கிறார் ஹென்றி.
இது போன்ற சம்பவங்கள் நடக்கமாலிருக்க, மேலதிகாரிகளையும் பொறுப்பாக்க வேண்டும். ஏனென்றால், கைதிகள் மேலதிகாரிகளின் ஒப்புதலோடுதான் தாக்கப்படுகிறார்கள். தவிர, தமிழ்நாட்டில் சித்ரவதைகளுக்கு எதிரான சட்டம் ஒன்றையும் இயற்ற வேண்டும் என்கிறார் ஹென்றி திபேன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












