அமெரிக்கா, இஸ்ரேல் ஏவிய ஆயுதங்களையே தனக்கு சாதகமாக்க துடிக்கும் இரான் - எப்படி தெரியுமா?

பட மூலாதாரம், US NAVY/AFP via Getty Images
- எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரானில் இதுவரை வெடிக்காமல் இருக்கும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுகள் மற்றும் ஆயுதங்களை 'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' (Reverse Engineering - தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் உருவாக்குதல்) செய்வது குறித்த விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.
சமீபத்திய மோதல்களின்போது கைப்பற்றப்பட்ட இந்த ஆயுதங்களை ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக இரானிய ஊடகங்களும் ஆய்வாளர்களும் கருதுகின்றனர்.
இதன் மூலம் நாட்டின் ராணுவத் திறனை அதிகரிக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இரானின் ஆங்கில அரசுத் தொலைக்காட்சியான 'பிரஸ் டிவி' , ஏப்ரல் 26 அன்று வெளியிட்ட செய்தியில், ஹோர்மூஸ்கான் மாகாணத்தில் '15-க்கும் மேற்பட்ட கனரக அமெரிக்க ஏவுகணைகளை' இஸ்லாமிய புரட்சிகர காவல்படை வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில், இந்த ஆயுதங்கள் அவற்றின் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வதற்காகவும், மீண்டும் உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்காகவும் தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஜிபியு-57 ரக 'பங்கர்-பஸ்டர்' குண்டுகளும், ஜஞ்சான் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிறிய ரகக் குண்டுகளும் அடங்கும் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையே 40 நாட்கள் நீடித்த போருக்குப் பிறகு, ஏப்ரல் 8 அன்று இரண்டு வாரங்களுக்குப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதனை மீண்டும் நீட்டித்துள்ளார்.
'எதிர்பாராத பரிசு'

பட மூலாதாரம், Getty Images
இரானின் கடும்போக்கு 'ஸ்டூடண்ட் நியூஸ் நெட்வொர்க்' (SNN), மே 1 அன்று இதனை இரானுக்குக் கிடைத்த "எதிர்பாராத பரிசு" என்று வர்ணித்துள்ளது.
போர்க்களம் இப்போது "நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான ஒரு ஆராய்ச்சி ஆய்வகமாக" மாறியுள்ளதாக அது தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏவிய குண்டுகள் மற்றும் ஆயுதங்களை ஈரான் ஒரு மூலோபாய வாய்ப்பாக மாற்ற முடியும் என்று எஸ்என்என் கூறுகிறது.
இரானில் வெடிக்காமல் எஞ்சியிருக்கும் இந்த ஆயுதங்களை மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் தற்போது கொண்டுள்ள உண்மையான அச்சம் என்னவென்றால், இரான் இந்த நவீன ஆயுதங்களின் 'இரகசியத் தொழில்நுட்பத்தை' கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதுதான் என்று அது மேற்கோள் காட்டியுள்ளது.
பல்வேறு தடைகள் காரணமாக இரான் நீண்ட காலமாகவே 'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' முறையைச் சார்ந்து இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, அமெரிக்காவின் ஹாக் ஏவுகணைகளில் இரான் மாற்றங்களைச் செய்திருந்தது. 2011-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் RQ-170 ட்ரோன் ஏவுகணைகளைக் கைப்பற்றியதும் இது போன்றதொரு நிகழ்வுதான்.
அந்த நிகழ்விற்குப் பிறகு, இரான் வெறும் "நகல் எடுப்பதிலிருந்து" முன்னேறி "புத்தாக்கம்" செய்யும் திசையை நோக்கி நகர்ந்ததாக எஸ்என்என் கூறுகிறது.
கடும் போக்கைக் கொண்ட 'கேஹான்' பத்திரிகையின் ஆசிரியர் ஹொசைன் ஷரியத்மதாரி, இத்தகைய தொழில்நுட்பங்களைச் சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ஆலோசனை அளித்துள்ளார்.
'நமக்கு நல்ல செய்தி, அமெரிக்காவிற்கு கெட்ட செய்தி'

பட மூலாதாரம், Getty Images
போரின் போது டாமஹாக் மற்றும் ஏஜிஎம்-158 போன்ற நவீன ஏவுகணைகளும், எம்க்யூ-9 (MQ-9) ட்ரோன்களும் பெருமளவில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.
அரசு ஊடகத்தைச் சேர்ந்த சில முக்கிய நபர்களும் இதே போன்ற கருத்துக்களைத் திரும்பத் திரும்பத் தெரிவித்தனர்.
ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளர் கூறுகையில், "இந்த ஏவுகணைகள் 'ரிவர்ஸ் இன்ஜினியரிங்' முறைப்படி ஆய்வு செய்யப்படும், மேலும் எதிர்காலத்தில் இவை எதிரிகளுக்கு எதிராகவே பயன்படுத்தப்படலாம்," என்றார்.
சமூக ஊடகங்களிலும் அரசு ஆதரவு பயனர்கள் இதனை "நமக்கு நல்ல செய்தி மற்றும் அமெரிக்காவிற்கு கெட்ட செய்தி" என்று குறிப்பிட்டனர். மேலும் சிலர், "விரைவில் இவை பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படும்" என்றும் கணித்துள்ளனர்.
தெஹ்ரான் மாநகராட்சி அதிகாரி எஹ்சான் கராமித் இதனை, "வெறும் செய்தி மட்டுமல்ல, அறிவின் புதிய போரின் தொடக்கம்" என்று வர்ணித்துள்ளார்.
மேற்கத்திய ஊடகங்களின்படி, "இந்த ஆயுதங்கள் மூலம் அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் 'மறைக்கப்பட்ட பக்கங்களை' கண்டறிய முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளின் ஆய்வாளர் எஹ்சான் தகத்தோசி கூறுகையில், இதனால் அமெரிக்கா புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க "பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை" செலவிட வேண்டியிருக்கும் என்றும், ராணுவ நடவடிக்கைகளில் அந்த நாடு இனி அதிக எச்சரிக்கையுடன் செயல்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு ஒரு உதாரணத்தைக் குறிப்பிட்ட அவர், "இது ஒரு சிக்கலான பூட்டை அதன் சாவி இல்லாமலேயே புரிந்துகொள்வது போன்றது. இதன் உண்மையான லாபம் அந்த ஆயுதங்களை நேரடியாகப் பயன்படுத்துவதில் இல்லை, மாறாக அதன் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டு மீண்டும் உருவாக்குவதில்தான் உள்ளது," என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































