You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கரு முட்டை எடுத்து விற்க பல ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஈரோடு சிறுமி: தாய் கைது
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
ஈரோடு மாவட்டத்தில், பணத்துக்காக 13 வயது சிறுமியின் கருமுட்டைகளை அவரது தாய் உள்ளிட்ட சிலர், தனியார் மருத்துவமனைகளில் பலமுறை விற்றுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருமுட்டைகளை விற்பதற்காக, சிறுமியை அவரது தாய் தமிழ்நாட்டின் பல ஊர்களுக்கு அழைத்துச்சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
ஒரு பெண் தனது ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருமுட்டை விற்கலாம் என சட்டம் இருந்தாலும், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து இதுவரை எட்டுமுறை கருமுட்டைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என்கின்றனர் போலீசார்.
ஈரோட்டில் உள்ள தனியார் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனையில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கருமுட்டை விற்பனை நடைபெறுகிறதா என்ற விசாரணை தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். முறைகேடுகள் நடந்திருந்தால் அந்த மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாய் இந்திராணி என்ற சுமையா, அவர் கருமுட்டைகளை விற்பதற்கு துணை செய்ததாக கூறப்படும் அவரது இரண்டாவது கணவர் சையத் அலி மற்றும் தோழி மாலதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் நலன் கருதி அவர் அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல் ஆய்வாளர் விஜயா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''கருமுட்டை விற்பனையில் ஏற்கனவே இந்திராணி மற்றும் மாலதி ஈடுபட்டுவந்துள்ளனர். இந்திராணியின் மகள் பருவம் எய்தியதும் அவரது கருமுட்டைகளை விற்பதற்கு கூட்டி சென்றுள்ளனர். ஆனால் கருமுட்டை கொடுக்கும் நபர் குறைந்தபட்சம் 23 வயதானவராக இருக்கவேண்டும் என்பதை தெரிந்துகொண்டு, 13 வயது சிறுமியின் வயதை 23 என மாற்றம் செய்து, போலியாக ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இதற்கிடையில், சிறுமியிடம் சையத்அலி பாலியல் துன்புறுத்தல் செய்தபோதும், இந்திராணி சிறுமியை காப்பாற்றவில்லை,''என ஆய்வாளர் விஜயா தெரிவித்தார்.
ஒவ்வொரு முறை சிறுமியின் கருமுட்டை கொடுக்கப்பட்டபோதும், அவருக்கு கொடுக்கப்பட்ட ரூ.20,000 பணத்தை இந்திராணி, சையத் அலி எடுத்துக்கொண்டதாகவும், மாலதி ரூ.5,000 கமிஷன் பெற்றுக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாகக் கூறினார் அவர்.
வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி
பாலியல் துன்புறுத்தல் மற்றும் கருமுட்டை கொடுப்பதற்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச்செல்வது தொடர் கதையாக இருந்ததால், ஒரு கட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டைவிட்டு வெளியேறி தோழியின் வீட்டில் இருந்ததாக ஆய்வாளர் விஜயா கூறுகிறார். ''இந்திராணியும், சையத் அலியும் அங்கும் சென்று கருமுட்டை விற்பனைக்கு அழைத்துச்செல்ல வந்ததால், பயத்தில் சிறுமி, அவர்களுக்கு மறுப்புத் தெரிவித்து, சித்தி வீட்டுக்கு சென்றார். அவர்களின் உதவியுடன் காவல் நிலையம் வந்து எங்களிடம் புகார் தெரிவித்தார். பெண்கள் நீதிமன்ற நீதிபதி அவருக்கு மனநல ஆலோசனை அளித்த பின்னர் அவர் அரசு காப்பாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்,'' என்றார் அவர்.
வழக்கு விசாரணை பற்றி விவரித்த ஆய்வாளர் விஜயா, ''சிறுமியிடம் தொடர்ந்து பேசிவருகிறோம். இதுவரை அவர் சந்தித்த இன்னல்களை சொல்லிவிட்டார். பெண்கள் நீதிமன்ற நீதிபதியும் அவரிடம் பேசியுள்ளார். வரும் திங்களன்று(ஜூன் 6) குழந்தைகள் நலக் குழு முன்னர் அவரை ஆஜர்படுத்துவோம். சிறுமியை ஈரோடு மட்டுமல்லாமல், ஓசூர், சேலம், பெருந்துறை உள்ளிட்ட ஊர்களுக்கும் கூட்டிச்சென்று கருமுட்டை விற்பனை செய்துள்ளனர். அதோடு இறுதியாக அந்த சிறுமி மறுத்தபோது, அவரை கொலை செய்யப்போவதாக இந்திராணியும் சையத் அலியும் மிரட்டியுள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம். அதோடு மருத்துவமனையில் நடந்துள்ள விதிமீறல் தொடர்பாக சுகாதாரதுறை ஆய்வு செய்து வருகிறது,'''என்றார்.
வலி நிறைந்த அனுபவமாக இருந்திருக்கும்
சிறுமியின் கருமுட்டைகள் பலமுறை எடுக்கப்பட்டுள்ளது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் முன்னாள் தலைவர் மனோரமாவிடம் பேசினோம். ''கருமுட்டை எடுப்பது என்பது அந்த குழந்தைக்கு வலி நிறைந்த அனுபவமாக இருந்திருக்கும். உடல் மறுத்துப்போவதற்காக ஊசி செலுத்தப்பட்டிருந்தாலும், அந்த குழந்தைக்கு தனக்கு என்ன நடக்கிறது என்ற குழப்பம் இருந்திருக்கும். அவரது தாய் கூட்டி சென்றிருப்பதால், மறுப்பதற்குக்கூட அந்த குழந்தைக்கு வாய்ப்பு இருந்திருக்காது. மருத்துவர்கள் அந்த சிறுமியை பார்த்த பின்னரும் வயதை கணிக்காமல் எப்படி கருமுட்டை எடுப்பதில் கவனம் செலுத்தினார்கள் என்று தெரியவில்லை. சிறுமியின் தாய், அவரது கணவர், தோழி மற்றும் மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்,''என்கிறார் மனோரமா.
அதோடு, சிறுமிக்கு கருமுட்டை விற்பனை செய்துள்ளோம் என்ற மன உளச்சலில் இருந்து வெளியேற சிறிது காலம் ஆகும் என்கிறார் மனோரமா. ''எதிர்காலத்தில் அந்த சிறுமி, திருமணம் முடிந்து குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும் நேரத்தில் கூட, இந்த அனுபவம் அவருக்கு சிரமத்தை தரும். பதின்பருவத்தில் எட்டு முறை கருமுட்டைகளை எடுத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. கருமுட்டை எடுக்கும் நேரத்தில் அதைத் தாங்கமுடியமால் இறந்துபோகவும் வாய்ப்பு உள்ளது,''என்கிறார் மனோரமா.
நடந்த விதிமீறல்கள் என்ன?
சட்டப்படி கருமுட்டை விற்பனை எவ்வாறு நடைபெறுகிறது என்றும் ஈரோடு சிறுமியின் வழக்கில் நடந்திருக்கும் விதிமீறல்கள் என்ன என்றும் மருத்துவர் சாந்தி ரவிந்திரநாத்திடம் கேட்டோம்.
''தீவிர வேலையின்மை, வறுமை மற்றும் விலைவாசி உயர்வு காரணாமாக கருமுட்டை விற்பனை உள்பட பல உறுப்புக்கள் விற்கும் நிலை மக்களிடம் ஏற்பட்டுள்ளது. செயற்கை கருத்தரிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட சட்டத்தில், கருமுட்டை விற்பனை செய்வதற்கு விதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய அளவிலும் மாநில அளவிலும் கண்காணிப்புக் குழுக்கள் இயங்குகின்றன. கருமுட்டைகளை எடுக்கும் மருத்துவமனைகள் அதற்கென பதிவு செய்துகொள்ளவேண்டும். கருமுட்டை கொடுப்பவரின் ஒப்புதலைப் பெறவேண்டும். ஈரோடு சிறுமிக்கு நடந்துள்ள விதிமீறல்களை பார்க்கும்போது, கருமுட்டை விற்பனை குறித்த கண்காணிப்பு முறையாக நடைபெறவில்லை என்று தெரிகிறது,''என்கிறார் சாந்தி.
மேலும், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் என்றாலே தனியார் மையங்களுக்குதான் செல்லவேண்டும் என்ற நிலை இருப்பதால், கருமுட்டை விற்பனை எளிதாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்கிறார் அவர். ''குடும்ப கட்டுப்பாடு நடவடிக்கைகளில் அக்கறை காட்டும் அளவுக்கு செயற்கை கருத்தரிப்பில் அரசு கவனம் காட்டவில்லை. தற்போதுதான் சென்னை மற்றும் மதுரையில் இரண்டு செயற்கை கருத்தரிப்பு மையங்களை அரசு தொடங்கும் என்ற அறிவிப்பு வந்துள்ளது. செயற்கை கருத்தரிப்பு என்றால் அதிக லாபம் என்ற நிலையில் பல தனியார் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. அரசு மையங்களின் எண்ணிக்கை அதிகரித்தால், தனியார் மையங்களில் நடக்கும் விதிமீறல்கள் குறையும்,''என்கிறார் சாந்தி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்