பாலியல் தொழிலாளர் நாள்: "பாலியல் தொழில் வருமானத்தில்தான் என் மகனை வளர்த்தேன்" - ஒரு பாலியல் தொழிலாளியின் டைரி

சென்னையைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி ஒருவர் பல ஆண்டுகளாகத் தனது மனதில் ஆழமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்த துக்கத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் எனக் காத்துக் கொண்டிருந்தார். தான் ஒரு பாலியல் தொழிலாளி என்று தனது மகன், நண்பர்கள், உறவினர்களுக்குத் தெரிந்தால் தன்னை ஒதுக்கிவிடுவார்கள் என்ற அச்சத்தில் இதுவரை அவர் சொல்லவில்லை. பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் மனம் திறக்கிறார் அவர்.

என் பெயர் மீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 15 ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களைச் சொல்வது, என் மகனைப் போன்ற இளைஞர்கள், பலதரப்பட்ட பெண்கள், ஆண்கள் எனப் பலருக்கும் பாலியல் தொழிலாளியின் வாழக்கை பற்றித் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

என் மகன் பிறந்த சில ஆண்டுகளிலேயே என் கணவர் இறந்துவிட்டார். என்னை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்தபோது அவருக்கு வயது 50, எனக்கு வெறும் 20 வயதுதான். வறுமையின் காரணமாக என் குடும்பத்தினர் வயதில் அதிகம் மூத்தவரை திருமணம் செய்து வைத்தார்கள். முதலில் நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது என் கணவரிடம்தான். திருமண பந்தத்தில் முழுமையாக ஏமாற்றப்பட்டேன். எனக்கு புரிதல் ஏற்படும் முன்னர், என் கையில் ஒரு குழந்தை, என் கணவர் இறந்தும்விட்டார். கைவிடபட்ட சூழலில் தவித்தேன்.

ஒன்பதாம் வகுப்புவரைதான் படித்திருந்தேன். வேலை தேடிச் சென்ற இடங்களில் பாலியல் சீண்டல்கள் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் என் குழந்தைக்கு பால், பிஸ்கட் வாங்குவதற்குக் காசில்லாமல், பாலியல் தொழிலில் ஈடுபட்டேன். எனக்கு உதவும் நிலையில் என் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் இல்லை என்பதால் யாரிடமும் கை நீட்ட முடியாது. எனக்கு காசு தேவை என்பது மட்டும்தான் எனக்குத் தெரிந்தது.

தொடக்கத்தில், ஒரு நபரிடம் உடல் உறவு வைத்துக்கொண்டால் உடனே பணம் கிடைக்கும். அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு பணப் பிரச்னை இருக்காது. அதோடு ஒரு சில நபர்கள், மிகவும் நெருக்கமாகப் பழகி விடுவார்கள். தன்னை விட்டு யாரிடமும் செல்லக்கூடாது எனக் கண்காணிப்பார்கள். இதுபோன்ற நபர்களிடம் சிக்கியிருக்கிறேன்.

பார்ட்னர் போல சிறிது காலம் அவர்களோடு இருக்க வேண்டும். ஒரு வாரம் அல்லது ஒரு மாதம்தான். பிறகு செலவுக்குக் கூட பணம் கொடுக்கமாட்டார்கள். அவர்கள் விரும்பும் நேரத்தில் எல்லாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் எனத் துன்புறுத்துவார்கள். நான் இதுபோன்ற நபர்களிடம் ஏமாந்திருக்கிறேன். எனக்கும் கணவர் போன்ற பிம்பத்தில் ஒரு நபர் என்னுடன் இருக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால் விளைந்த பிரச்னைகள் அவை.

பார்ட்னர் ஒருவரை நம்பி, அவரை என் வீட்டில் தங்க வைத்தேன். என்னுடன் வாழ விரும்புவதாகச் சொன்னார். இனி பாலியல் தொழிலுக்குப் போகவேண்டாம் என்றார். பலமுறை உறவு கொண்டார். வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அளவில் என்னை அனுபவித்தார். ஆனால் என்னுடன் அவர் இருக்கப் போகிறார் என்பதால் பொறுத்துக்கொண்டேன். ஒரு வாரம்தான், என்னிடமே என்னைவிட சிறுவயது பெண் யாரையாவது கூட்டி வரமுடியுமா எனக் கேட்டார். தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனத் துன்புறுத்தினர். உடல் மற்றும் மனதளவில் மோசமாகப் பாதிக்கப்பட்டேன்.

இதுபோன்ற அனுபவங்களால், முதலில் உடலுறவுக்காக மட்டும் வருபவர்கள், வீடு தேடி வருவார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், நான் யாரிடமும் என் வீட்டு முகவரி, என் ஃபோன் நம்பர் என எந்தத் தகவலையும் தரமாட்டேன்.

சாலையில் நடந்து செல்லும்போது யாரிடமும் நின்று பேசுவது அல்லது உறவினர் வீட்டிற்குச் செல்வது என எங்கும் போக மாட்டேன். என்னை யாராவது அடையாளம் கண்டுவிட்டால், என் மகனுக்குத் தெரிந்துவிடும், உறவினர்கள் மதிக்கமாட்டார்கள் எனப் பயப்படுவேன். கஸ்டமருடன் இருக்கும்போது காவல்துறையினர் வந்து கைது செய்துவிடுவார்களோ என அஞ்சுவேன். ஆரம்பத்தில் எனக்கு உறவு வைத்துக் கொள்ளும்போது உணர்ச்சி அதிகரிப்பு ஏற்படும். ஆனால் ஆண்டுகள் செல்ல, என் உடல் எனக்குச் சோறு போடுகிறது, உடலுறவு என்பது எனக்கு எந்தவித உணர்வுகளையும் தராத ஒரு சில மணிநேர வேலை என்றளவில் என் மனம் மறுத்துப்போய்விட்டது.

பலமுறை, எங்கள் சக தோழிகள் யாராவது காவல்துறையிடம் மாட்டிக்கொண்டால், நாங்கள் உதவி கேட்கும் வழக்கறிஞர், கைது செய்த காவலர்கள் எனப் பலரும் எங்களிடம் மோசமாக நடந்து கொள்வார்கள். அவர்களுடன் உறவு வைத்துக் கொண்டால்தான், கைது செய்தவர்களை விடுவிக்கமுடியும் என்ற நிலையெல்லாம் ஏற்பட்டிருக்கிறது.

பாலியல் தொழில் வருமானத்தில்தான் என் மகனை வளர்த்தேன், படிக்கவைத்தேன். ஒவ்வோர் ஆண்டும் பண்டிகைகளுக்கு என் மகனுக்கு உயர்தர உடுப்புகள்கூட அந்த வருமானத்தில் வாங்கியவைதான்.

எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்பதால் ஒவ்வொரு முறை கஸ்டமர் வரும்போதும், என் மகனின் நண்பர்கள் யாரவது வந்து விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கும். பாலியல் தொழில் என்ற வலையில் மாட்டிக்கொண்டால், அதிலிருந்து வெளியேறுவது சவால்தான்.

மோசமான அனுபவங்களைச் சொல்லப்போகிறேன். மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கள்.

என்னிடம் வந்த கஸ்டமர்களின் ப்ரொபைல் பற்றிச் சொன்னால் நான் பட்ட வலியை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். மனைவியிடம் பாலியல் தேவைக்காகச் செல்லமுடியாத வயதான ஆண்கள், பாலியல் உறவில் விதவிதமாக இருக்கவேண்டும் என நினைக்கும் இளவயது ஆண்கள், பாலியல் சந்தேகமுள்ள டீனேஜ் பையன்கள், திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் உடலுறவு பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என ஆசையில் வரும் ஆண்கள் போன்றவர்கள் வருவார்கள். ஒரு சில குடும்பங்களில் திருமணம் ஆகாத வயதான ஆண்கள், மனைவி இறந்த நிலையில் இராண்டாம் திருமணம் செய்யாத ஆண்கள், தீராத வியாதி உள்ள ஆண்கள் கூட வருவார்கள். இவர்களைவிட, பாலியல் வக்கிரம் கொண்ட ஆண்கள் வருவார்கள்.

ஒரு சிலருக்கு உண்மையில் பாலியல் புரிதல் இருக்காது. சந்தேகம் என்ற பெயரில் ஆபாசமாக பேசுவார்கள், என்னையும் பேசச் சொல்வார்கள். காசு கொடுத்திருக்கிறேன் அதனால் நான் சொல்வதை செய் என்பார்கள். உடலுறவு கொள்ளும் நேரத்தில் ஆபாசமாக கத்தச் சொல்வார்கள், சினிமா மற்றும் பாலியல் படங்களில் வருவதைப் போல உணர்ச்சி அதிகமாக வரவேண்டும் என வற்புறுத்துவார்கள். உண்மையில் அதுபோன்ற உட்சபட்ச உணர்வுநிலை ஒருசிலருக்கு மட்டும்தான் சாத்தியம், அதுவும் ஒரு நாளில் ஒருமுறை ஏற்படலாம் என்று சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். மீண்டும் மீண்டும் உறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்தினார்கள். காசு அதிகமாகத் தருகிறேன், மீண்டும் எனக்கு உணர்ச்சி வரவழைக்க ஏதாவது செய்யவேண்டும் என்பார்கள்.

பாலியல் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் ஒருமாதிரி என்றால், அதிகமாகத் தெரிந்துகொண்டவர்கள் ஆபத்தானவர்கள். ஒரு சிலர், வாய்வழி உறவுக்கு வற்புறுத்துவார்கள். என் உடல்நலனுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சொன்னால்கூட விடமாட்டார்கள். அதனால், ஒரு சில நாட்கள் தீவிர உடல் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாவேன். ஒருசிலர் காண்டம் அணிந்துகொள்ள மறுப்பார்கள். இவர்களைப் போன்றவர்களைச் சமாளிப்பது இன்னும் சிரமம்தான்.

ஒரு சிலர் என் உறுப்புகளைக் காயப்படுத்தி சந்தோஷம் காண்பார்கள். தன் மனைவியிடம் செயல்படுத்த முடியாதவற்றை என்னிடம் பரிசோதிப்பார்கள். காயங்களுடன், அடுத்த கஸ்டமரிடம் செல்வதற்குக் கூச்சமாக இருக்கும். அதை அறிந்தவுடன் அந்த நபரும் மோசமாகத் திட்டி, உறவு வைத்துக் கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளது.

ஓய்வு இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது, தூக்கமின்மை, பால் உறுப்புகளில் வலி என உடல் உபாதைகள் ஒரு கட்டத்தில் அதிகரிக்கத் தொடங்கின. இளமைப் பருவத்தை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து வருகிறேன் என்பதை நான் உணர்ந்தேன். கஸ்டமர் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டேன்.

என் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் பாலியல் தொழிலாளியான பெண்கள் மற்றும் திருநங்கை போன்றவர்கள்தான். மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களுடன் பேசுவேன். ஒரு திருநங்கை அமைப்பில் எனக்கு உதவ முன்வந்தார்கள். மருத்துவ உதவி செய்தார்கள். என்னைப் போன்ற பாலியல் தொழிலாளி ஒவ்வொருவரையும், அவர்களது தோழிகளையும் எங்கள் நட்பு வட்டத்தில் இணைத்தேன். அதுபோல தொடர்ந்த எங்கள் நட்பு சங்கிலி, தற்போது சென்னை மற்றும் திருவள்ளூரில் 1,200 பாலியல் தொழிலாளர்களை இணைத்துள்ளது.

இப்போது, நான் முழுநேர பாலியல் தொழில் செய்வதில்லை. அவ்வப்போது சில கஸ்டமர்களை மட்டும் அட்டென்ட் செய்கிறேன். அதோடு, எச்ஐவி எயிட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு தரும் தொண்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன். நானும் என் தோழிகளும் இணைந்து பாலியல் தொழிலில் சிக்கியுள்ள 40 பெண்களுக்கு தமிழக அரசின் சமூக நலத்துறையிடம் பேசி தொகுப்பு வீடுகள் வாங்கி கொடுத்திருக்கிறோம்.

சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றில், வயது வந்தவர்கள், சுயவிருப்பதின் பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டால், அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யக்கூடாது என்றும் பாலியல் தொழிலாளர்களை கண்ணியமாக நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், என்னைப் போன்ற பாலியல் தொழிலாளர்கள் கைது செய்யப்படுவது, காவல்துறையினரால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவது குறையும். உலகத்தின் பழைய தொழில் பாலியல் தொழில் என்பார்கள். அந்தத் தொழிலுக்கு இப்போதுதான் நீதி வழங்க நீதிமன்றம் முன்வந்துள்ளது. இந்த சமூகம் எங்களைப் போன்றவர்களை ஏற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆகும்.

பாலியல் தொழில் பற்றிப் பேசும்போது, இந்தத் தொழில் செய்வதற்கு பிச்சை எடுக்கலாம், கை கால் நல்லா இருக்கும்போது ஏன் இந்தத் தொழில் செய்கிறார்கள் எனக் கேட்பார்கள். என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது.

எத்தனை வீடுகளில் கணவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு மனைவிகள் ஆளாகிறார்கள்? எத்தனை அலுவலகங்களில் மோசமான பாலியல் தாக்குதலுக்கு பெண்கள் ஆளாகிறார்கள்? இதுபோல பல பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும் அவர்களுக்கு நீதி வாங்கித் தருவதற்கும், இதுபோன்ற பாலியல் தாக்குதல்கள் நடக்காது என்ற நாள் எப்போது வருமோ அன்று பாலியல் தொழிலை இந்த சமூகம் தடை செய்யட்டும்.

எங்களைப் போன்ற பாலியல் தொழிலாளர்களின் சுயகௌரவம் பற்றிப் பேசுபவர்கள், அவர்களின் முகத்தை யாருக்கும் தெரியாமல் அந்தரங்க கண்ணாடியில் பார்த்து அச்சமின்றிப் பேசுங்கள். கௌரவம் உள்ளவர்கள் யார் என்பதற்கு கண்ணாடி பதில் சொல்லும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: