மத்திய பிரதேசத்தில் இஸ்லாமியர் என்று கருதப்பட்ட ஜெயின் சமூக முதியவர் அடித்துக் கொலை என புகார்

    • எழுதியவர், சல்மான் ராவி
    • பதவி, பிபிசி செய்தியாளர், போபாலில் இருந்து

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீமச் என்ற பகுதியில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர் என்று கருதப்பட்ட, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து, அவரது சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த காணொளியில் தாக்கப்பட்ட நபர் பன்வர்லால் ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ரத்லம் பகுதியிலுள்ள சார்சி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஜாவ்ராவில் வசிப்பவர் என்று கூறப்படுகிறது.

முதியவரை அடித்த நபர், மானசா பகுதியைச் சேர்ந்த தினேஷ் குஷ்வாஹா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தினேஷ் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கவுன்சிலரின் கணவர் என நீமுச் காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றவாளியாக கருதப்படும் தினேஷ் குஷ்வாஹா கைது செய்யப்பட்டதாக நீமச் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் குமார் வர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த மே 19ஆம் தேதியன்று மாலை, நீமச்சில் உள்ள மனசா பகுதியில் உள்ள ராம்பூரா சாலையோரமாக பன்வர்லால் ஜெயினின் உடல் கண்டறியப்பட்டது.

முதலில், அடையாளம் தெரியாத நபரின் உடல் எனக் கருதி, உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால், இந்த வைரல் வீடியோவைப் பார்த்தபிறகு, அவரது குடும்பத்தினர் நீமச் பகுதிக்கு சென்று, அவரது உடலை அடையாளம் கண்டனர்.

உயிரிழந்த பன்வர்லால் ஜெயினின் சகோதரியின் மகனாக விகாஸ் வோஹரா, பன்வர்லால் சிறுவயது முதலே மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற தெரிவித்தார். அவர் ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்காருக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது, அவர் சித்தோர்கார் பகுதியில், தவறுதலாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார்.

இதுகுறித்து விகாஸ் கூறுகையில், "அவரை நாங்கள் பல இடங்களில் தேடினோம். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், அங்கு காணாமல் போனதாக நாங்கள் புகார் அளித்தோம்", என்றார்.

காவல்துறை சொல்வது என்ன?

"அவர் காணாமல் போன புகார், மே 16ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது உடல் 19ம் தேதி கண்டெடுக்கப்பட்டது," என்று காவல் கண்காணிப்பாளர் சூரஜ் குமார் வர்மா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அவர் பிபிசியிடம் பேசுகையில், "இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று சரிபார்த்து வருகிறோம். உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது உண்மையே. அந்த வீடியோவில் காணப்படும் விவரங்களைக் கொண்டு கொலைக் குற்றத்திற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதியவரை அடித்த நபரை அடையாளம் கண்டு விட்டோம். ஆனால், அவர் தலைமறைவாக இருக்கிறார்," எனத் தெரிவித்தார்.

ஆனால், இது குறித்து உள்ளூர் பத்திரிகையாளர் கமலேஷ் சர்தா கூறுகையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் புதன்கிழமையன்று (18) வெளியானது. அவரது உடல் வியாழக்கிழமையன்று கண்டெடுக்கப்பட்டது.

வைரல் வீடியோவில் என்ன உள்ளது?

சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், சிவப்பு நிற சட்டை அணிந்த நபர் ஒருவர், பன்வர்லாலின் கன்னத்தில் அறைந்து, அவரது பெயரைக் கேட்கிறார். அந்த நபர் தொடர்ந்து அவரது ஆதார் அட்டையைக் காட்டுமாறு கேட்கிறார்.

மேலும், "உனது பெயர் முகமதா? சரியான பெயரைச் சொல். ஆதார் அட்டையைக் காட்டு," என்று அவரிடம் கேட்கிறார். மீண்டும் அந்த நபர், "ஆதார் எண்ணைக் கூறு," என்றார்.

அந்த நபரின் வார்த்தைகளில் இருந்து, பன்வார்லால் ஒரு முஸ்லிமாக இருக்கலாம் என்று சந்தேகித்திருக்கிறார் எனத் தெரிகிறது.

அந்த வீடியோவில், பன்வர்லால் சரியாக பேச முடியாமல் திணறினார் என்பதும் தெரிகிறது. "என்னிடம் உள்ள பணத்தை எடுத்துக்கொள்," என்று அவர் கூறுகிறார்.

ஒருபுறம், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது; மறுபுறம், அவரது உடல் அடையாளம் காணமுடியாத நபரின் உடல் என்று காவல்துறை கூறியது. இது அவரது குடும்பத்தினரைத் திகைப்பில் ஆழ்த்தியது.

அவர் அடித்துக் கொல்லப்பட்டார் என்று தங்களின் குடும்பம் நம்புவதாக பன்வர்லால் சகோதரரின் மகன் அஜித் சத்தர் கூறுகிறார்.

"அவரது உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. அதனால், அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்துக் கூறுவது கடினம், " என்று நீமச் காவல் கண்காணிப்பாளர் சூரஜ் வர்மா கூறுகிறார்.

"அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் இங்கு அதிகம் வெப்பமும் உள்ளது. அவர் ஏதேனும் சாப்பிட்டாரா இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை. பிறகு இந்த வீடியோ வைரலானது. அதனால், தற்போது இது குறித்து முடிவுக்கு வருவது கடினம்," என்றார்.

நீமச் காவல்துறை வெளியிட்ட நபரின் புகைப்படம் மூலமாகவே தங்களுக்குத் இந்த விஷயம் தெரியவந்துள்ளது என்றும், தங்களின் குடும்பம் அவரது சடலத்தை நீமச்சிலிருந்து ரத்லமுக்கு கொண்டு வந்ததாகவும் விகாஸ் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், ​​"அவருக்கு இறுதிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்த போது, ​​அவரை அடிக்கும் வீடியோ எங்களுக்கு கிடைத்தது. மீண்டும் நாங்கள் நீமச் பகுதிக்கு சென்றோம். அந்த வீடியோவை உள்ளூர் காவல் நிலையத்தில் காட்டினோம். ஆனால் அவர்கள் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், அந்த கிராமத்தில் இருந்து பலர் வந்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்தனர். பின்னர், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது," என்கிறார்.

அந்த வீடியோவில் இருக்கும் நபரை உடனடியாகக் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என பன்வர்லாலின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த வீடியோவில், காணப்பட்ட நபரைத் தவிர, வேறு நபர்கள் முதியவரை அடித்தனரா என்பதையும் காவல்துறை கண்டறிய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜிது பட்வாரி ட்வீட் செய்துள்ளார்.

"மானசா (நீமச்) கொலை. பன்வர்லால் ஜெயின் இறந்திருக்கிறார். கொலை செய்த தினேஷ், முன்னாள் பாஜக கவுன்சிலரின் கணவர். நரேந்திர மோதி, சிவராஜ் சிங் சவுகான்.. முதலில் தலித், பிறகு முஸ்லிம்-ஆதிவாசி, இப்போது ஜெயின்! பா.ஜ.க. வெறுப்பு என்ற விஷத்தை கக்குகிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் ஏதாவது கூறுவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: