'ஞானவாபி மசூதி அந்த காலத்தில் கோயிலாக இருந்ததா?' - விடாது தொடரும் விவாதங்கள்

    • எழுதியவர், வினீத் கரே
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

ஞானவாபி மசூதி போல பல விஷயங்கள் இப்படித்தான் பல விவாத தலைப்புகளை தோற்றுவித்திருக்கின்றன.

ஞானவாபி மசூதியில் சிவலங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுவது, தாஜ் மஹாலை தேஜோ மஹாலயா கோயில் என்றும் அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகள் சர்ச்சைக்குரிய பின்னணியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது, குதூப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வதுல் இஸ்லாம் மசூதியில் பூஜையும், அர்ச்சனையும் நடத்த வேண்டும் என்று கோருவது, கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கின் மனுவை ஏற்று விசாரிக்க அனுமதி அளித்த மதுரா மாவட்ட நீதிமன்றம் என இந்த விவகாரங்கள் நீளுகின்றன.

டெல்லி ஜாமா மசூதியில் இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன என இந்து மகாசபை கூறுகிறது. அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய கடிதம் எழுதப்பட்டது.

2019ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதியன்று, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த போது, பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுடன் உரையாற்றினார். அப்போது அவர், "இந்த தீர்ப்புக்கு பின், புதிய தலைமுறை புதிய இந்தியாவை உருவாக்குவார்கள். இது ஒரு புதிய தொடக்கம்", என்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, 'மசூதி இருந்த இடத்தில் கோயில் இருந்தது' என்ற சர்ச்சை எழுந்துள்ளது. திடீரென இது தொடர்பாக நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. "இவர்கள் 5000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுடன் விளையாடுகிறார்கள்", என்று மதரீதியான தேசியவாதம் பற்றி ஆய்வு செய்யும் ஆய்வாளர் ஷம்சூல் இஸ்லாம் கூறுகிறார்.

இத்தகைய விவகாரம், யுக்ரேன் - ரஷ்யாவுக்கு இடையே நடக்கும் போர் உலகத்தின் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையில், கொரோனா தொற்றுநோய் காரணமாக 6.2 மில்லியன் பேர் இறந்த பிறகும் அந்த நோய் தீவிரமாக இருக்கும் நிலையிலும், 2019 ஆம் ஆண்டு, 17 லட்சம் பேர் இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக உயிரிழந்த நிலையில், இத்தகைய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

உலகம் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் இந்து-முஸ்லிம், கோயில் - மசூதி, 400, 500, 600 ஆண்டுகளுக்கு முன் யார் கோயிலை இடித்தது, ஏன் இடிக்கப்பட்டது, தற்போது என்ன நடக்கிறது போன்றவை விவகாரங்கள் பெரும் விவாதத்தை தூண்டியிருக்கிறது.

2022ஆம் ஆண்டு மே 12 ஆம் தேதி, பாஜகவின் செய்தி தொடர்பாளர் அனிலா சிங், "முக்பாரா, இந்த மஹால் எப்படி உருவானது சகோதரே?", என்று ட்வீட் செய்திருந்தார்.

"சிறுபான்மையின சமூகத்திற்கு மட்டுமே அடிப்படை உரிமைகள் உள்ளனவா? பெரும்பான்மையினர் இத்தகைய உரிமைகளுக்கு குரல் எழுப்பும்போது, அது ஏன் மதவாதமாக மாறுகிறது?", என்று தமது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மெளரியா, #GyanvapiTruthNow என்ற ஹேஷ்டேக்குடன், "நீங்கள் உண்மையை எவ்வளவு வேண்டுமானாலும் மறைந்துக்கொள்ளுங்கள். ஒரு நாள் அது வெளிவரும். ஏனென்றால், சத்தியம் என்பது சிவனே", என்று ட்வீட் செய்திருந்தார்.

சர்ச்சையின் மையப்புள்ளியாக இருக்கும் ஞானவாபி

தற்போது சர்ச்சையின் மையப்புள்ளியாக இருப்பது ஞானவாபி மசூதி. ஞானவாபி மசூதி இருந்த இடம் ஒரு காலத்தில் கோயில் இருந்ததாக கூறப்படுகிறது.

அது 17ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் அழிக்கப்பட்ட கோயில் என்றும், 1777 ஆம் ஆண்டு இந்தூரைச் சேர்ந்த அஹில்யா பாய் ஹோல்கர் என்பவரால் கட்டப்பட்ட கோயில் என்றும் பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள விஸ்வநாதர் கோயிலின் படத்துடன் இருந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முகியா இதுகுறித்து கூறுகையில், "காசி மற்றும் மதுரா கோயிலை ஔரங்கசீப் இடித்தார். அது அவரது உத்தரவால் தகர்க்கப்பட்டது. ஆனால், அதே ஔரங்கசீப் எத்தனை கோயில்களுக்கும், மடங்களுக்கும் நன்கொடைகள் கொடுத்துள்ளார் என்பது தெரியாது. அவர் ஒரு பக்கம் கோயில்களை அழித்துக் கொண்டிருந்தார். மறுபுறம், அவர் கோயில்களுக்கும், மடங்களுக்கும் நன்கொடைகள், நிலம், பணம் ஆகியவற்றை கொடுத்தார்," என்கிறார்.

ஆனால் இன்றைய தேதியில் வரலாற்றில் உள்ள சிக்கலை புரிந்துகொள்வதும் விளக்குவதும் எளிதல்ல. அத்தகைய சூழலில், வரலாற்றின் பக்கங்களை எவ்வளவு தூரம் பின்னோக்கி திருப்பிப் பார்க்க முடியும், அதனால் என்ன லாபம் பெறுவீர்கள் என்பதுதான் கேள்வி,' என்று விளக்குகிறார்.

சட்டத்திருத்தம் எங்கே?

எழுத்தாளரும் பேராசிரியருமான புருஷோத்தம் அகர்வால், "அத்தகைய வரலாற்றுத் திருத்தங்களையோ அல்லது சட்டத்திருத்தங்களோ எந்த அளவிற்குச் செய்வீர்கள் என்பதே ஒட்டுமொத்த சமூகமும் தன்னைத்தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி," என்கிறார்.

"டைம்ஸ் ஆஃப் இந்தியா அதன் தலையங்கத்தில், "வரலாறு அழகாக இல்லை.

ஆனால் ஒரு நவீன நாடு, குறிப்பாக உலகப் பொருளாதார சக்தியாக மாற விரும்பும் ஒரு பெரிய பன்மைதன்மைகொண்ட ஜனநாயகம், வரலாற்று குறித்து வழக்காடுவதிலேயே தனது ஆற்றலைச் செலவழிக்கக் கூடாது." என்கிறது.

நாடு ஏற்கனவே பல வகுப்புவாதப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகவும், 'மசூதி இருக்கும் இடத்தில் கோயில் இருந்தது' என்ற பரிமாணத்தைச் சேர்ப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ஞானவாபி விவகாரம் உச்ச நீதிமன்றத்தை எட்டியபோது, அந்த நாளிதழ், "எந்தவொரு மனுவையும் விசாரிக்கும் போது, உச்ச நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்திற்கு நேரடி மொழியில் பேச வேண்டும். அது 1991 (வழிபாட்டிற்காக சிறப்பு சட்டப்பிரிவு ) பின்பற்ற வேண்டும். மேலும், எந்தவொரு சட்டத்தை மீறும் செயல்களும் பொறுத்துக்கொள்ளப்படாது," என்று குறிப்பிட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு சட்டப்பிரிவு) சட்டத்தின்படி, மத வழிபாட்டுத் தலங்கள், 1947 ஆம் ஆண்டு எவ்வாறு இருந்ததோ, அதே நிலையில் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.

எழுத்தாளர் பிரதாப் பானு மேத்தாவின் கூற்றுப்படி , "அயோத்திக்குப் பிறகு காசி, மதுராவில் உள்ள கோயில்களை மீண்டும் கொண்டு வரவது பெரும்பான்மையினரின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதாகும். இப்போது அதிகாரம் பெரும்பான்மையினரிடம் உள்ளது."

மேலும் அவர், "இந்த புனித தலங்களை திரும்பப் பெறுவதன் நோக்கம் மதம் அல்ல. ஞானவாபி மசூதி இருப்பது காசி விஸ்வநாதர் கோயிலுக்கும் கிடைக்கும் பக்தியை பாதிக்கவோ குறைக்கவோ இல்லை. அதைத் திரும்பப் பெறுவதன் நோக்கம் இந்துக்களுக்கு அதிகாரம் உள்ளது. முஸ்லிம்களுக்கு அவர்களின் இடம் இதுதான் என்று காட்டுவதற்குமாகும்," என்கிறார்.

"மறுபுறம், 'கோயில்களை மீட்கும் குழு' என்ற குழுவைச் சேர்ந்த வி.விமல் கருத்துப்படி, முஸ்லீம் ஆட்சியாளர்கள் தங்கள் 'கலாச்சாரத்தின்' கீழ் ஒரு லட்சம் இந்து கோவில்களை அழித்து, தங்களின் 'சித்தாந்தத்தின் அதிகாரத்தை' காட்டினார்கள். இப்போது 'வரலாற்று' அடிப்படையில் இந்துக்கள் கோயில்களைத் திரும்பப் பெற வேண்டும். நியாயத்தை நீதியின் அடிப்படையைப் பார்க்க வேண்டும்.

மேலும் அவர், "இந்தக் கோயில்களை 'ஆக்கிரமித்த'தாகக் கூறப்படும் நபர்கள் தூக்கி எறியப்பட வேண்டும். , 'கோயில்களை மீட்கும் குழு' ஒரு தன்னார்வ அமைப்பு. எந்த அரசியல் கட்சியுடனும் அவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

முன்னர் இந்து கோயில்களுக்கு எதிராக நடந்ததாக கூறப்படும் வன்முறைகளைப் பற்றிப் பேசும் இது போன்ற பல கணக்குகள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன.

முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பாவும் 'முகலாயர்கள் 36,000 இந்து கோயில்களை இடித்ததால், அவை சட்டப்படி திரும்பப் பெறப்பட வேண்டும்' என ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் ஆட்சியாளர்கள் சுமார் 60 ஆயிரம் இந்துக் கோயில்களை இடித்ததாக சில இந்து அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் டிஎன் ஜா மற்றும் ரிச்சர்ட் ஈட்டன் போன்ற வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, 80 இந்துக் கோயில்கள்தான் சேதமடைந்தன.

அழிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை குறித்து வரலாற்று ஆய்வாளர் ஹர்பன்ஸ் முகியா கூறுகையில், "60க்களில் இடிக்கப்பட்ட 300 கோயில்களின் எண்ணிக்கை செய்திதாள்களில் வர ஆரம்பித்தது. அதன்பின் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில், அது 300 முதல் 3,000 ஆக உயர்ந்தது. அதன் பிறகு 3,000 முதல் 30,000 ஆக ஆகிவிட்டன," என்கிறார்.

கோயில்கள் அழிக்கப்பட இந்துக்களும் காரணமா?

கிழக்கிந்தியாவின் இந்து கோயில்கள் வெளியில் இருந்து வந்த இந்து அல்லாத படையெடுப்பாளர்களால் மட்டுமே கொள்ளையடிக்கப்படவில்லை.

இது குறித்து வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஈட்டன், "தொடக்க மத்தியகால இந்தியாவில், கோயில்களில் அரசர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு இடையிலான நெருங்கிய உறவின் காரணமாக, அரச வீடுகளுக்கு இடையிலான பகைகள் கோயில்களுக்கு அவமானத்தை தரும் செயலாக மாறியது."

"642 ஆம் ஆண்டு உள்ளூர்வாசிகளின் நம்பிக்கைகளின்படி, பல்லவ மன்னர் நரசிம்ம வர்மன்- I சாளுக்கிய தலைநகரான வாதாபியில் (பாதாமி) விநாயகர் சிலையை கொள்ளையடித்தார் என்று ஈடன் எழுதுகிறார்.

இந்துக்கள் கோயில்களை கொள்ளையடித்தது மட்டுமின்றி, கோயில்களை தாக்கி சிலைகளை எடுத்து சென்றதாக வரலாற்று ஆசிரியர் ஹர்பன்ஸ் முகியா கூறுகிறார்.

அவர் கூறுகிறார், "காஷ்மீரின் அரசர் ஹர்ஷா சிலைகளை அழிக்கும் பணிக்காகவே ஓர் அதிகாரியை நியமித்தார்.

ஒன்பதாம் நூற்றாண்டில் ராஷ்டிரகூட அரசர் மூன்றாம் கோவிந்த் காஞ்சிபுரத்தைத் தாக்கி கைப்பற்றியதாக ஈட்டன் எழுதுகிறார். இது இலங்கை அரசரை மிகவும் பயமுறுத்தியது. ராஷ்டிரகூட அரசர் அவரது தலைநகரில் சிவன் கோயிலில் நிறுவிய இடத்திற்கு, சிங்கள நாட்டைக் குறிக்கும் பல (அது ஒருவேளை புத்தர் சிலைகளாக இருக்காலாம் ) சிலைகளை அனுப்பினார்.

அதே நேரத்தில், பாண்டிய அரசர் ஸ்ரீமார ஸ்ரீவல்லபன், இலங்கையைத் தாக்கி, நகை மாளிகை என்ற மாளிகையில் நிறுவப்பட்ட தங்க புத்தர் சிலையை தனது தலைநகருக்குக் கொண்டு வந்தார்.

வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முகியாவின் கூற்றுப்படி, 'அரச குடும்பங்கள் கோயில்களுக்கு சட்டப்பூர்வமாக உரிமை பெற்றன. அதனால், எதிரிகளின் கோயில்களை அழிப்பதன் அர்த்தம் என்பது எதிரியின் அதிகாரம் சட்டபூர்வமான ஆதாரங்களைத் தாக்குவதாகும்".

"உன் கோயிலைக் காப்பாற்ற முடியாத நீ எப்படி அரசனாக இருக்கிறாய் என்று கேள்விகள் கேட்கப்பட்டன," என்கிறார்.

ஹர்பன்ஸ் முகியாவின் கூற்றுப்படி, 'கோயில்கள் மீதான தாக்குதலுக்கு அவற்றில் கிடைத்த தங்கம், வைரங்கள் மற்றும் நகைகள் மற்றொரு காரணம்'", இதுகுறித்து மேலும் ஈட்டன் கூறுகையில், 'எத்தனை இந்து கோயில்கள் அவமதிக்கப்பட்டன என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் 12 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் 80 இந்து கோயில்கள் சிதைக்கப்பட்ட வலுவான சான்றுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை பல தேசியவாத இந்துக்கள் கூறும் 60 ஆயிரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ளது," என்கிறார்.

பௌத்த புனித தலங்களை இந்து அரசர்கள் அழித்தனரா?

வரலாற்றாசிரியர் டிஎன் ஜா தனது ' அககென்ஸ்ட் தி கிரெய்ன்- நோட்ஸ் ஆன் ஐடென்டிட்டி அண்ட் மெடிவல் பாஸ்ட் ' என்ற புத்தகத்தில் புத்த ஸ்தூபிகள், விஹாரங்கள் மற்றும் புனிதத் தலங்கள் பிராமண அரசர்களால் அழிக்கப்பட்டதைப் பற்றி பேசுகிறார். இருப்பினும், அவரது கூற்றுகளுக்கு சவால்களும் விடுக்கப்பட்டுள்ளன.

இந்துக்களிடையே உள்ள கொடுமையான சாதி அமைப்பும், சிக்கலான சடங்குகள் காரணமாக பண்டைய இந்தியாவில் மக்கள் பௌத்த மதம் மீது ஈர்ப்பு ஏற்பட்டன. மேலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதை அச்சுறுத்தலாகப் பார்க்கத் தொடங்கினர் என்று நம்பப்படுகிறது.

இதை சமாளிக்க இந்துக்கள் பௌத்தர்களுக்கு எதிராக வன்முறைகளை செய்தார்கள் என்ற கருத்து நிலவுகிறது. பௌத்தத்தின் சில அம்சங்களைப் பயன்படுத்தி, பௌத்தர்கள் மீண்டும் இந்து மதத்தை தழுவ, புத்தரை இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக விவரிக்கத் தொடங்கினர். இந்து மதத்தின் மறுமலர்ச்சிக்கு ஆச்சார்யா சங்கர் முக்கிய பங்கு வகித்தார் என்று கருதப்படுகிறது.

" பேரரசர் அசோகர் புத்தரை வணங்குபவராக இருந்தபோது, ​​அவரது மகனும் சிவபெருமானின் வழிபாட்டாளருமான ஜலாக் புத்த விகாரைகளை அழித்தார்." என்று டிஎன் ஜா எழுதுகிறார்.

சாகல் பகுதியில் (இன்றைய சியால்கோட்) மன்னர் புஷ்யமித்ர சுங்கா பௌத்த ஸ்தூபிகளை அழித்ததாகவும், புத்த மடங்களைத் தீயிட்டுக் கொளுத்தியதாகவும், பௌத்தர்களைக் கொன்றதாகவும் நம்பப்படும் பௌத்தர்களின் பெரும் அடக்குமுறையாளராக டிஎன் ஜா விவரிக்கிறார்.

பாடலிபுத்திர பகுதியில் (இன்றைய பாட்னா) புத்த விகாரங்கள் முதலியவற்றையும் அழித்திருக்கலாம் என்று புஷ்யமித்ர சுங்காவைப் பற்றி டிஎன் ஜா குறிப்பிடுகிறார்.

சுங்கா ஆட்சியின் போது, ​​புத்த மதத் தலமான சாஞ்சியில் பல கட்டடங்களை அழித்த சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று ஜா எழுதுகிறார்.

சீனப் பயணி ஹியுயன் சாங்கின் இந்திய வருகையை மேற்கோள் காட்டி, சிவ பக்தரான மிஹிர்குல் 1,600 புத்த ஸ்தூபிகளையும் விகாரங்களையும் அழித்து ஆயிரக்கணக்கான பௌத்தர்களைக் கொன்றதாக ஜா கூறுகிறார்.

புகழ்பெற்ற நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பற்றி டி.என்.ஜா கூறுகையில், அதன் நூலகங்கள் 'இந்து அடிப்படைவாதிகளால் தீவைக்கப்பட்டன' என்றும், அதற்கு காரணமாக அங்கு இல்லாத பக்தியார் கில்ஜி மீது பழி சுமத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

பூரி மாவட்டத்தில் அமைந்துள்ள பூர்ணேஷ்வர், கேதாரேஷ்வர், காந்தேஷ்வர், சோமேஷ்வர் மற்றும் அங்கேஷ்வர் ஆகியவை புத்த மடாலயங்களின் மேல் கட்டப்பட்டவை அல்லது அவற்றின் பொருட்கள் அங்கு பயன்படுத்தப்பட்டன என்பதில் சந்தேகமில்லை என்று டிஎன் ஜா எழுதுகிறார்.

இருப்பினும், டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் புத்த மத ஆய்வுப் பேராசிரியர் கே.டி.எஸ்.சராவ், டிஎன் ஜாவின் கருத்துக்களை பாகுப்பாடு கொண்டதாகவும், கேள்விக்குரியதாகவும் இருக்கின்றன என்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிராமணர்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையே அறிவார்ந்த ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவர்களுக்குள் வன்முறை இருந்தது என்று சொல்வது சரியல்ல. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக மக்கள் சொல்வது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை," என்றார்.

'தி டெக்லைன் ஆஃப் புத்திசம் இன் இந்தியா' (The Decline of Buddhism in India) நூலின் ஆசிரியர் பேராசிரியரான சரோவின் கருத்துப்படி, 'இரு தரப்புக்கும் இடையே உள்ளூர் அளவிலோ அல்லது தனிநபர் அளவிலோ வன்முறை நடந்திருக்கலாம். ஆனால் பெரிய அளவில் வன்முறை நடக்கவில்லை," என்கிறார்.

பேராசிரியர் சரோவின் கூற்றுப்படி, நாளந்தா பல்கலைக்கழகம் பக்தியார் கில்ஜி மற்றும் அவரது ஆட்களால் அழிக்கப்பட்டது. மேலும் புஷ்யமித்ர சுங்கா போன்ற பிராமண மன்னர்களின் ஆட்சியின் போது பௌத்தர்கள் அல்லது அவர்களின் புனிதத் தலங்கள் மீது வன்முறை நடந்ததாகவோ அல்லது பிராமணர்கள் பௌத்தர்களை துன்புறுத்தியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை.

"பண்டைய காலங்களில், சிறுபான்மையினர் மீது அதிகார ரீதியான ஒடுக்குமுறை இல்லை," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், தங்கள் மதம் மீது பற்றுக்கொண்டவர்கள், பிற மதத்தினருக்கு எதிராக செய்யும் வன்முறைகள் இந்தியாவில் மட்டுமல்ல; வெளிநாடுகாளிலும் உள்ளன.

பௌத்தத்தில் அகிம்சைமுறையே அதன் பிரதான கருத்து. ஆனால் இலங்கையிலும் மியான்மரிலும் பெரும்பான்மையானவர்கள் பிற மதத்தினருக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவதாக குற்றம் சாட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கதையும் இதுப்போன்றதே.

சமீபத்தில் இஸ்தான்புல்லில் உள்ள தேவாலயம், ஹகியா சோபியா மசூதியாக மாற்றப்பட்டது. ஐரோப்பாவின் மதப் போர்களில் தேவாலயங்களில் வன்முறை நடப்பது பார்த்துக்கிறோம்.

ஆனால் இன்றைய இந்தியாவில், வரலாற்றின் இத்தகைய சிக்கலான பகுதிகள் தொலைக்காட்சி விவாதங்களில் எவ்வாறு முன்வைக்கப்படுகின்றன என்பது பற்றி வரலாற்றாசிரியர் ஹர்பன்ஸ் முகியா கூறுகிறார். "பிரபலமான வரலாறு எளிதானது. ஆய்வுக்களுடன் கூறப்படும் வரலாறு சிக்கலானது. ஆய்வுகள் செய்து எழுதப்படும் வரலாற்று புத்தகம் 1,000 பேர் படிப்பார்கள். ஆனால், தொலைககாட்சி சேனல்களை 10 லட்சம் மக்கள் பார்ப்பார்கள். (அதனால் கேட்கப்படுகிறது) 1,000 பேருக்கு தொடர்ந்து எழுதுங்கள். நாம் 10 லட்சம் மக்களைச் சென்றடைவோம்," என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: