You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம்: சர்ச்சைகள் முடிவில் நடந்த நாற்காலி பல்லக்கு உற்சவம்
மயிலாடுதுறை மாவட்டத்தில், தருமபுரம் ஆதீனகர்த்தா ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரை, ஆதீன பக்தர்கள் பல்லக்கில் தூக்கி வீதியுலா செல்லும் பட்டினப் பிரவேசம் நிகழ்வு இன்று நடைபெற்றது.
16ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட தருமபுரம் ஆதீனத்தில், பல ஆண்டுகளாக, குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனகர்த்தரை பக்தர்கள் பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வு நடைபெற்றுவருகிறது.
இந்த ஆண்டு விழா அறிவிப்பு வெளியானதும், மனிதனை மனிதன் தூக்கும் நிகழ்வு அனுமதிக்கப்படக்கூடாது என திராவிடர் கழகத்தினர் புகார் தெரிவித்தனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறி, பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்திருந்தார்.
இந்நிலையில், ஆதீன கர்த்தர்களை பக்தர்கள் தூக்கிச் செல்வது காலம் காலமாக நடந்த நிகழ்வு என்றும் பக்தர்கள் விருப்பத்தின் பேரில்தான் ஆதீன கர்த்தரை பல்லக்கில் தூக்கிச் செல்கிறார்கள் என்றும் யாரும் கட்டாயத்தின் பெயரில் கலந்து கொள்வதில்லை என்று ஆதீன கர்த்தர்களின் தரப்பில் இருந்து சொல்லப்பட்டது.
நவீன காலத்தில், பட்டினப் பிரவேச நிகழ்வு தேவையானதா என்ற விவாதங்களும் எழுந்தன. இதனிடையில், சைவ மடங்களைச் சேர்ந்த ஆதீன கர்த்தர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு இருக்கும் தடையை நீக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பட்டினப் பிரவேசம் நடத்த முதல்வர் வாய்மொழி உறுதி கூறியுள்ளதாக ஆதீனகர்த்தர்கள்,மே 8ஆம் தேதி மயிலாடுதுறையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.
கோட்டாட்சியர் விதித்திருந்த தடை நீக்கிக்கொள்ளப்பட்டது என்ற அறிக்கையும் அன்று வெளியானது. தற்போது அந்த நிகழ்வு தடைகள் நீங்கி, முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றதை போலவே நடந்தேறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்