ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது ஏன்?

ஒரு மின் நிறுவனத்தில் பணியாற்ற சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசாவைப் பெறுவதற்காக 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ப. சிதம்பரம் ஆகியோர் தொடர்புடைய சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் மத்திய புலனாய்வுத் துறை சோதனைகளை நடத்தியது.

இது தொடர்பாக சி.பி.ஐ. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூடுதலான நபர்களுக்கு விசா பெறுவதற்காக சென்னையில் சிலருக்கு 50 லட்ச ரூபாய் லஞ்சம் அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

"பஞ்சாபில் உள்ள மான்சாவில் 1,980 மெகா வாட் உற்பத்தித் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை தனியார் நிறுவனம் கட்டிவருகிறது. இந்த மின் நிலையத்தைக் கட்டும் பணிகள் ஒரு சீன நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், இந்த மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் குறிப்பிட்ட கால வரையறைக்குள் முடியவில்லை. இதனால் ஏற்படும் இழப்பைத் தவிர்ப்பதற்காக, அந்தத் தனியார் நிறுவனமானது கூடுதலாக சீனர்களை அங்கு வரவழைக்க விரும்பியது. அந்த சீனர்களுக்கு திட்ட விசாக்கள் தேவைப்பட்டன. ஆனால், ஒரு திட்டத்திற்கென குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே விசா வழங்க முடியும் என உள்துறை அமைச்சகம் வரையறுத்துள்ளது. அந்த வரையறையைத் தாண்டி கூடுதல் நபர்களுக்கு விசா தேவைப்பட்டது.

இதனால், இந்தத் தனியார் நிறுவனம் தன்னுடைய ஆள் ஒருவர் மூலம் சென்னையில் இருந்த ஒரு நபரை அணுகியது. இவர்கள் இணைந்து, உள்துறை அமைச்சகம் விதித்த எண்ணிக்கையைத் தாண்டியும் விசா பெற திட்டம் தீட்டினர். அதன்படி 263 திட்ட விசாக்களை மறுபடியும் பயன்படுத்த அனுமதியைப் பெற முடிவுசெய்தனர்.

அதன்படி மான்சாவில் உள்ள தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி உள்துறை அமைச்சகத்தை அணுகி, விசாக்களை மறுபயன்பாடுசெய்ய அனுமதிக்கக் கோரினார். ஒரு மாதத்திற்குள் இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்காக சென்னையில் இருந்த அந்த நபர் 50 லட்ச ரூபாய் கோரினார். இதனை மான்சா நிறுவனம் கொடுத்தது.

இந்தத் தொகையானது, விசா வழங்குவதற்கான ஆலோனை என்று குறிப்பிட்டு போலியான பில் உருவாக்கப்பட்டு மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் மூலம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த மும்பை நிறுவனம் விசா தொடர்பான பணிகள் எதிலும் ஈடுபடவில்லை எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து இன்று காலை சென்னை, மும்பை, கர்நாடகத்தில் உள்ள கோப்பல், ஒதிஷாவில் உள்ள ஜர்சுகுடா, மான்சா, தில்லி ஆகிய பிரதேசங்களில் உள்ள பத்து இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த வழக்கில் கார்த்தி ப. சிதம்பரம், அவருக்கு நெருக்கமானவராகக் கூறப்படும் எஸ். பாலசுப்பிரமணியம், மான்சாவில் செயல்படும் தனியார் நிறுவனத்தின் பிரதிநிதி விகாஸ் மகாரியா, மான்சாவைச் சேர்ந்த தல்வண்டி சபோ பவர் லிமிட்டெட், மும்பையைச் சேர்ந்த பெல் டூல்ஸ் லிமிட்டெட், பெயர் குறிப்பிடப்படாத அரசு ஊழியர்கள், தனி நபர்கள் என ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் நடந்து வருவதாக" சி.பி.ஐயின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

ப. சிதம்பரம் டிவிட்டரில் பதிவு

இந்த சோதனை குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ப. சிதம்பரம், டெல்லி மற்றும் சென்னையில் உள்ள எனது அலுவல்பூர்வ குடியிருப்பில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

அவர்கள் என்னிடம் முதல் தகவல் அறிக்கையை காண்பித்தார்கள். அதில் எனது பெயர் குற்றம் செய்தவர் பட்டியலில் இல்லை. சோதனைக்கு பிறகு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

சோதனை நடைபெறும் தருணம் சுவாரஸ்யமான ஒன்று என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: