அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது குழந்தை - அரசு மருத்துவர்களின் முயற்சியால் மீண்ட தருணம்

- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள். 'ஓர் ஏழைக் குழந்தைக்கு இப்படிப்பட்ட சிகிச்சையை கொடுத்ததில் குழந்தைகள் நல மருத்துவராக எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது'' என்கிறார், மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன்.
4 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரின் நான்கு வயது ஆண் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் கவலைப்பட்ட பெற்றோர், சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 'நியூராப்ளாஸ்டோமா' என்ற அரிய வகை புற்றுநோயால் குழந்தை பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கீமோ தெரபி உள்பட சில சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், 'எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும்' என்ற சூழல் ஏற்பட்டது. 'இப்படியொரு சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்வதற்கு முப்பது லட்ச ரூபாய் வரையில் செலவாகும்' என்பதால் குழந்தையின் பெற்றோர் தவித்தனர்.
இதுதொடர்பாக, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலேயே மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்த நோயின் தன்மையைப் பொறுத்தவரையில், குழந்தையின் சிறுநீரகத்துக்கு மேல் உள்ள அட்ரினல் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்திய புற்றுநோய் செல்கள் பின்னர் எலும்பு மற்றும் எலும்பு மஜ்ஜைகளிலும் பரவியிருந்தது.
எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோய் செல்கள் இருப்பதால் அதிக திறன் வாய்ந்த கீமோ தெரபி கொடுக்கப்பட வேண்டும். அப்போது எலும்பு மஜ்ஜையில் உள்ள செல்களும் அழிந்துவிடும். பின்னர் ஒரே மாதிரியான மரபணு வரிசை கொண்ட நபரிடம் இருந்து எலும்பு மஜ்ஜையை பெற்று நோயாளிக்கு கொடுக்க முடியும். இதற்கான சிகிச்சையை தனியார் மருத்துவமனைகள் கொடுத்து வந்தாலும், அதற்கான செலவு என்பது சமானிய மக்களுக்கு சாதகமானதாக இல்லை.

இதையடுத்து, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்ட பின்னர், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் உடலில் இருந்த எலும்பு மஜ்ஜைக்கு சக்திவாய்ந்த கீமோதெரபி கொடுக்கப்பட்டு மீண்டும் செலுத்தப்பட்டுள்ளது. இதன்பிறகு புதிய செல்கள் வளர்வதற்கு மூன்று வாரங்கள் வரையில் தேவைப்படும் என்பதால், கிருமிகளால் பாதிக்கப்படாத வகையில் சூரிய வெளிச்சம் இல்லாத வசதிகொண்ட அறையில் குழந்தை சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்சாகத்தைக் கொடுத்த சிகிச்சை
குழந்தைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜன், ''ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 27 நாள்கள் தொடர் சிகிச்சையில் குழந்தை இருந்தது. சிறுநீரகத்தின் மேலே உள்ள அட்ரினல் சுரப்பில் இந்தவகை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக, புற்றுநோயின் நான்காவது காலகட்டத்தில்தான் இது வெளியில் தெரியவரும். அதற்குள் உடலில் உள்ள எலும்பு முழுவதும் புற்றுநோய் செல்கள் பரவிவிடும்'' என்கிறார்.
தொடர்ந்து பேசிய தேரணிராஜன், '' இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்வதற்கு 30 லட்ச ரூபாய் வரையில் செலவாகும். தவிர, இதற்காக 7 மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது. அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு இப்படியொரு சிகிச்சையைக் கொடுப்பதில் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டன. அதையும் தாண்டி வெற்றிகரகமாக சிகிச்சையளித்துள்ளோம். ஓர் ஏழைக் குழந்தைக்கு இப்படிப்பட்ட சிகிச்சையை கொடுத்ததில் குழந்தைகள் நல மருத்துவராக எனக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது'' என்கிறார்.

இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா?
மேலும், ''குழந்தைக்கு சிகிச்சையளிக்கக் கூடிய இயந்திரத்தின் விலை மட்டும் ஆறு கோடி ரூபாய். அந்த இயந்திரம் எழும்பூர் மருத்துவமனையில் இல்லாததால் இங்கு வரவழைத்து சிகிச்சையளித்தோம். வரும் நாள்களில் அடுத்தடுத்து 3 பேருக்கு சிகிச்சையளிக்க உள்ளோம். தலசீமியா என்ற நோய்க்கும் இந்தச் சிகிச்சையை அளித்தால் நார்மலான குழந்தைகளைப்போல அவர்களும் செயல்படலாம்'' என்கிறார்.
''நியூராப்ளாஸ்டோமா என்ற புற்றுநோயின் தன்மை என்ன?'' என்றோம். '' எலும்புகள் பாதிக்கப்பட்டு குழந்தை மெலிந்துவிடும். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது தொற்று பரவும் வாய்ப்பு அதிகமாகிவிடும். அடுத்து செப்டிசீமியாவை நோக்கிச் செல்லும்போது மரணம் எளிதில் நடந்துவிடும். நாங்கள் நியூராப்ளாஸ்டோமாவில் இருந்து குழந்தையை மீட்டெடுத்து சிகிச்சை கொடுத்துள்ளோம்.
அடுத்து கீமோ தெரபி கொடுக்கும்போது உடலில் உள்ள புற்றுநோய் செல்கள் அழிந்துவிடும். அதன்பிறகு இயல்பு நிலைக்கு குழந்தைக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். தவிர, குழந்தையின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணிப்பது, உணவு ஆகியவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதன்பிறகு மஜ்ஜை வெளியில் வந்துவிட்டால் இயல்பு வாழ்க்கைக்கான வாய்ப்புகள் அதிகம்'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












