சிவராஜ் சிங் செளஹான் பதவிக்கு ஆபத்தா? ம.பி அரசியலில் திடீர் திருப்பம்

    • எழுதியவர், சல்மான் ராவி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மத்திய பிரதேச மாநிலத்தை கடும் வெயில் சுட்டெரிக்கிறது. ஆனால், அதை விடவும் அம்மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை சூடுபிடிக்கத் தொடங்கிவுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பரபரப்பான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பெரும் சவாலாக இருக்கும் என்பதை இரண்டு கட்சிகளும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. முதல்வர் சிவராஜ் சிங் செளஹானை பதவி நீக்கம் செய்ய, அக்கட்சியின் உயர்மட்டம் எந்த அறிகுறியும் காட்டவில்லை.

ஆனால், முன்னாள் முதல்வர் கமல்நாத்துக்கு பதிலாக மூத்த தலைவர் கோவிந்த் சிங்கை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துள்ளது காங்கிரஸ் கட்சி எடுத்த முக்கிய முடிவு. கமல்நாத்தை தொடர்ந்து இவர் மத்திய பிரதேச காங்கிரஸ் கமிட்டிக்கு தலைமை தாங்குவார். மேலும் அவரது தலைமையில் வரவிருக்கும் சட்டபேரவை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளும்.

சிவராஜ் சிங் செளஹானை பதவி நீக்கம் செய்வது குறித்த சர்ச்சை

ஏப்ரல் மாதம் 22ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போபால் நகரில் பல திட்டங்களை வகுத்தார். அதில் அவர் பழங்குடியினருக்கான மாநில அரசின் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் கட்சித் தலைவர்கள், தொண்டர்களை சந்தித்தார். அவரது வருகைக்குப் பிறகு, முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்று ஊடகங்கள் கணித்தன.

ஆனால், கடந்த வியாழக்கிழமையன்று, டெல்லியில் நடந்த பாஜக முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு, சிவராஜ் சிங் செளவுகானை முதல்வர் பதவியிலிருந்து நீக்குவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை. ஆனால், அம்மாநில அமைச்சரவையை விரிவாக்கம் செய்வது குறித்த விவாதங்கள் நடந்தன. மேலும், அனைத்து வகுப்பினருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் சமமான இடம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

2018 சட்டமன்றத் தேர்தலில், ஓப்பீட்டளவில், பாரதிய ஜனதா கட்சிக்கு மோசமான முடிவே கிடைத்தது. பாஜக 109 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதற்கு முந்தைய சட்டசபை தேர்தலில், பாஜக 165 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. டெல்லியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இந்த விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 82 தனித் தொகுதிகளில் பாஜக 33 இடங்களில் மட்டுமே வென்றது. இந்நிலையில், கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. ஆனால், சிறிது காலத்திலேயே காங்கிரஸ் இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவுக்குத் தாவினார். அவருக்கு ஆதரவான 22 எம்எல்ஏக்கள் காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால், சட்டமன்றத்தில் பாஜக பெரும்பான்மை பெற்றது. சிவராஜ் சிங் செளஹான் மீண்டும் முதலமைச்சரானார். ஆனால், முதலில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோற்றதற்கு அவரே காரணம் என்று கூறப்பட்டது.

தேர்தலில் முகமாக நரேந்திர மோதி

டெல்லியின் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம் குறித்து, மத்திய பிரதேச பாஜக கட்சி பெரிதாக எதுவும் கூறவில்லை. ஆனால், மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

சிவராஜ் சிங் செளஹான் முதல்வராக தொடர்ந்தாலும், வரும் தேர்தலில் பாஜகவின் முகமாக பிரதமர் நரேந்திர மோதியே இருப்பார் என்று மூத்த பத்திரிகையாளர் ராஜேஷ் தீட்சித் தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒவ்வொரு முறை மத்திய பிரதேசம் வரும்போதும், பிரதமரின் திட்டங்களை முதல்வர் செயல்படுத்துகிறார் என்றே கூறிவருகிறார். அப்படியெனில், தற்போதைய நிலையில், சிவராஜ் சிங் செளவுகான் பதவிக்கு ஆபத்து இல்லை என்றாலும், தேர்தலின் முகமாக பிரதமர் மோதியே இருப்பார்", என்று தெரிவிக்கிறார்.

ம.பி. அரசின் செயல்பாடுகள் குறித்து பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில்கூட விவாதிக்கப்படவில்லை என்பது சற்றே ஆச்சரியமாக உள்ளது என்று தீட்சித் கூறுகிறார். இந்த கூட்டத்தில் ஜே.பி.நட்டா தவிர, கட்சியின் பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்தியப் பிரதேச கட்சிப் பொறுப்பாளர் பி.முரளிதர் ராவ், மாநிலத் தலைவர் வி.டி.சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் உத்தி என்ன?

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில், மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

கோவிந்த் சிங் வியாழக்கிழமையன்று காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். பதவியேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த பொறுப்பை கமல்நாத் எனக்கு கொடுத்துள்ளார்" என்றார் .

காங்கிரஸ் கட்சி, கமல்நாத் தலைமையில் தேர்தலை எதிர்கொள்ளும் என்பது அவரது கூற்றிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பியூஷ் பாபேலே பிபிசியிடம் பேசுகையில், காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்கிறார்.

"கோவிந்த் சிங் ஏழு முறை எம்எல்ஏவாகவும், காங்கிரஸின் அர்ப்பணிப்புள்ள தலைவராகவும் உள்ளார். இது தவிர, ஜோதிராதித்ய சிந்தியா வெளியேறியதால் கட்சியில் ஏற்பட்ட வெற்றிடத்தை அவர் நிரப்புவார்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங், தேர்தலை எதிர்கொள்வதில் வல்லவர் என்றும், அருண் யாதவ், அஜய் சிங் போன்ற பெரிய தலைவர்களுக்கும் வெவ்வேறு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பாபேலே தெரித்தார்.

இது குறித்து மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் ஆய்வாளருமான ராகேஷ் தீட்சித் கூறுகையில், கமல்நாத் சிறந்த தலைவராக தன்னை நிரூபித்துள்ளதால், காங்கிரஸ் எடுத்த முடிவு, சிறந்த முடிவு. 2018 சட்டமன்ற தேர்தலில் வெற்றி நாயகனாக அவர் இருந்தார். .

இதைவிட சிறந்த முடிவை காங்கிரஸால் எடுத்திருக்க முடியாது. அதன் விளைவை தேர்தலிலும் பார்க்கலாம். கமல்நாத் தனது திறமையை இதே முறையில் நிரூபித்தால், பாஜகவுக்கு கடும் போட்டியை அவரால் அளிக்க முடியும் என்றார்.

வரவிருக்கும் மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே அக்கினி பரிட்சையாக இருக்கும். காரணம், ஜோதிராதித்ய சிந்தியா, கமல்நாத், திக்விஜய் சிங் ஆகிய பெரிய தலைவர்களின் செல்வாக்கு என்ன என்பதை இந்த தேர்தல் காட்டிவிடும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :