You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பஞ்சாப் பாட்டியாலா வன்முறையால் பதற்றம் - ஆளும் கட்சியை இலக்கு வைக்கும் எதிர்கட்சிகள்
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள காளி மந்திர் அருகே இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றமான சூழல் நிலவுகிறது. அங்கு சட்டம்-ஒழுங்கை பராமரிக்க போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான சீக்கியர்களின் குரு பத்வந்த் சிங் பண்ணு, ஏப்ரல் 29ஆம் தேதி காலிஸ்தான் நிறுவன நாளையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலிஸ்தானி கொடி ஏற்றும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி வெள்ளிக்கிழமை காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஏராளமான காலிஸ்தானி ஆதரவு அமைப்பினர் திரண்டனர். மறுபுறம் அவர்களுக்கு எதிராக சிவசேனை கட்சியினர் பேரணி நடத்தினர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் பரஸ்பரம் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து களத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் மன்பிரீத் கவுர் கூறும்போது, "பாட்டியாலாவில் சீக்கிய அமைப்புகள் காலிஸ்தான் ஜிந்தாபாத் கோஷத்தை எழுப்பினார்கள். சிவசேனை கட்சியினர் காலிஸ்தான் முர்தாபாத் என்ற கோஷத்தை எழுப்பினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து, இரு தரப்பினரையும் கலைக்க போலீஸார் தலையிட்டனர். அப்போது இரு தரப்பும் கற்களை வீசி தாக்கிக் கொண்டன. அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.
முதல்வர் பகவந்த் மான் எதிர்வினை
பாட்டியாலா சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ட்வீட் செய்துள்ளார்.
நடந்த வன்முறை சம்பவம் குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநரிடம் பேசியதாகவும், அப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் தமது ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். பஞ்சாபில் அமைதியும் நல்லிணக்கமும் மிக முக்கியமான விஷயம்," என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாட்டியாலா சரக போலீஸ் ஐஜி ராகேஷ் அகர்வால், 'சில விஷமத்தனமான சக்திகளால் இந்த சம்பவம் நடந்துள்ளது. தற்போது 'நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது' என்று கூறினார்.
வன்முறை தொடர்பான வதந்திகளுக்கு செவி சாய்க்க வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். அமைதியை நிலைநாட்ட துணை ஆட்சியர் கூட்டம் மற்றும் நகரில் கொடி அணிவகுப்பு நடத்துகிறோம். கூடுதல் படைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன என்று ராகேஷ் அகர்வால் தெரிவித்தார்.
குற்றம்சாட்டும் எதிர்கட்சிகள்
இதேவேளை பாட்டியாலா வன்முறை சம்பவத்துக்கு மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசுதான் பொறுப்பு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
பாட்டியாலாவில் நடந்த சம்பவத்திற்கு கேஜ்ரிவால் பொறுப்பேற்பாரா என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஷாஜத் பூனவாலா ட்வீட் செய்துள்ளார்.
"எல்லை மாநிலத்தில் முழுமையான குழப்பம் நிலவுகிறது. மாநிலத்தில் நிலைமை மிக மோசமாக உள்ளது. அராஜகவாதிகள் சுதந்திரமாக உலா வருகின்றனர். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில், தனிப்பட்ட பகைமைக்காக மாநில காவல்துறையைப் பயன்படுத்துகிறது ஆம் ஆத்மி அரசு," என்றார். கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்வீர் ஷெர்கில், பாட்டியாலாவில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து கவலை தெரிவித்ததோடு, ஆம் ஆத்மி அரசாங்கத்தை குற்றம்சாட்டியுள்ளார்.
அரவிந்த் கேஜ்ரிவாலை மகிழ்ச்சியடையச் செய்வதற்குப் பதிலாக, பஞ்சாப் முதல்வர் பஞ்சாப்பை சிறந்த முறையில் வழிநடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும் பாட்டியாலாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் "பாட்டியாலா மக்கள் அமைதியை நேசிப்பவர்கள், ஆத்திரமூட்டலில் ஈடுபட வேண்டாம் என்று நான் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். பஞ்சாப் காவல்துறை இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிப்பதை உறுதி செய்யும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்," என்று கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்