கர்கோன் வன்முறை: மாற்றுத்திறனாளி வாசிமின் கேள்வி- 'நான் எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்?'

    • எழுதியவர், ஷூரையா நியாஸி
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக, போபாலில் இருந்து..

மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் நடந்த வன்முறைக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் பெரும் எண்ணிக்கையிலான வீடுகள் மற்றும் கடைகளை இடித்தது. யாருடைய வீடு, கடைகள் இடிக்கப்பட்டதோ அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் ஒருவர் 35 வயதான வாசிம் ஷேக். அவரது சிறிய கடையும் இடிக்கப்பட்டது.

வாசிம் இரண்டு கைகளற்றவர். இந்தக் கடைதான் அவரும் அவரது குடும்பமும் வாழ்க்கை நடத்துவதற்கான ஒரே வழியாக இருந்தது. இருப்பினும் வாசிமின் கடையை தாங்கள் உடைக்கவில்லை என்று கார்கோன் நிர்வாகம் கூறுகிறது.

தனது கடை இடிக்கப்பட்டது என்று வாசிம் திங்களன்று காலை ஒரு வைரல் வீடியோ மூலம் கூறியிருந்தார். ஆனால் இரவில் அவரது மற்றொரு வீடியோ வெளிவந்தது. அதில் அவர் இந்தக்கூற்றை மறுத்தார். ஆனால் பிபிசி வாசிமிடம் பேசியபோது, தனது கடை உடைக்கப்பட்டது உண்மைதான் என்று கூறினார்.

ராம நவமி ஊர்வலத்திற்குப் பிறகு ஏப்ரல் 11 ஆம் தேதி கர்கோனில் கடைகள் மற்றும் வீடுகள் இடிக்கப்பட்டபோது, கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிர்வாகமும் மாநில உள்துறை அமைச்சரும் தெரிவித்தனர். ஆனால் வாசிம் ரிஸ்வி விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்கப்படுகின்றன.

"நான் என் சொந்த வேலைகளுக்கே மற்றவர்களைச் சார்ந்து இருக்கிறேன். நான் எப்படி கலவரத்தில் ஈடுபட முடியும்," என்று வாசிம் கேட்கிறார்.

ஊர்வலத்தின் போது கல்வீச்சில் ஈடுபட்டவர்களுக்கு பாடம் புகட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று நிர்வாகமும், அரசும் கூறுகிறது. ஆனால் வாசிம் விஷயத்தில் இது சாத்தியமில்லை, ஏனெனில் அவரால் கற்களை தூக்கக்கூட முடியாது.

வாசிமின் அந்த சிறிய கடையில், தனது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சிறு சிறு பொருட்களை விற்று வந்தார். இந்தக்கடைதான் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் வாழ்வாதாரமாக இருந்தது.

"எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இத்துடன் எனது தாய் மற்றும் மனைவியின் பொறுப்பும் எனக்கு உள்ளது. இந்தக்கடையில் பொருட்கள் விற்றுத்தான் என் குடும்பம் நடக்கிறது. ஆனால் எந்த விசாரணையும் இல்லாமல், வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க நிர்வாகம் ஒருதரப்பாக முடிவு செய்து நடவடிக்கை எடுத்தது," என்கிறார் அவர்.

அரசு என்ன சொல்கிறது

அதேநேரம், கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தில் அரசு மற்றும் நிர்வாகத்தின் தொனி மாறியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இப்போது கூறப்படுகிறது.

ஆக்கிரமிப்பு இருந்தது உண்மையானாலும் தனக்கு நோட்டீஸ் கொடுத்து அங்கிருந்து கடையை அகற்ற நேரம் அளித்திருக்கவேண்டும் என்று வாசிம் கூறுகிறார். "இந்த நடவடிக்கை தனக்கு வாழ்வாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் தன்னிடம் கூறியிருந்தால் அதை அகற்றியிருப்பேன்," என்றும் வாசிம் தெரிவித்தார்.

திங்களன்று, தலைமை நகராட்சி அதிகாரி பிரியங்கா படேல் அவரை சந்திக்க வந்திருந்தார். அவரது கடையை நகராட்சி இடிக்கவில்லை என்று அப்போது அவர் கூறினார்.

வாசிமின் வீடோ, கடையோ இடிக்கப்படவில்லை என கர்கோன் நகராட்சியின் சிஎம்ஓ தெரிவித்துள்ளார். இது நடந்த இடத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதை பார்த்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாசிம் கேட்டுக்கொண்டார். பலர் வாசிமுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ட்வீட் செய்து வருகின்றனர்.

வாசிம் ஷேக் முன்பு பெயிண்டராக வேலை செய்துவந்தார். ஆனால் 2005 இல் மின்சாரம் தாக்கியதால், அவரது இரண்டு கைகளையும் துண்டிக்க வேண்டியதாயிற்று.

நிர்வாகம் வாசிமின் கடையை இடித்துவிட்டது என்பதை கர்கோன் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அனுக்ரா பி மறுத்துள்ளார். இடிக்கப்பட்ட எல்லா வீடுகள் மற்றும் கடைகளும் ஆக்கிரமிப்புகள் என்றும், அவை அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'ஒருதலைப்பட்ச நடவடிக்கை' குற்றச்சாட்டுகள்

கலவரத்திற்குப் பிறகு பெரிய அளவிலான ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுத்ததாக கர்கோன் மற்றும் செந்த்வா நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஒரு கொலை வழக்கில் கடந்த ஒரு மாதமாக சிறையில் உள்ள மூன்று பேர் மீது செந்தவாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் வீடு இடிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், கர்கோனில் வன்முறையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் அப்போது மருத்துவமனையில் இருந்தார். மற்றவர் பொருட்கள் வாங்குவதற்காக கர்நாடகா சென்றிருந்தார்.

"இதை அசாதாரண சமூக விவகாரம் என்று சொல்லலாம். ஆனால் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் புகாரைப் பொருத்தவரை... ஒருவர் புகார் செய்யும்போது அவர் யாரோ ஒருவரின் பெயரை எழுதுவார். நிர்வாகம் தன் சார்பாக யாருடைய பெயரையும் எழுதவில்லை," என்று இது குறித்து கருத்து தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா குறிப்பிட்டார்.

ராம நவமி ஊர்வலத்தின் போது வன்முறை

மத்தியப் பிரதேசத்தில் உள்ள கர்கோன் மற்றும் செந்த்வா ஆகிய இடங்களில், ஏப்ரல் 10 ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தின் போது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கல் வீச்சு நடந்தது. இதையடுத்து நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒரு இளைஞர் பலத்த காயமடைந்து இந்தூரில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், இதுவரை 148 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே சமயம், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஹ்தேஷாம் ஹாஷ்மி," வெளியான விஷயங்கள் மற்றும் மக்கள் கூறுவதை வைத்துப்பார்க்கும்போது, நிர்வாகமும் அரசும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்துள்ளது தெளிவாகிறது," என்றார்.

"ஒருவரின் வீட்டை இப்படி உடைக்க முடியாது.. நோட்டீஸ் கொடுப்பீர்கள்.. பாருங்கள், இங்கு எவ்வளவு ஆக்கிரமிப்பு உள்ளது என்று. அரசு ரோட்டில் இருந்து இவை அனைத்தையும் அகற்ற முடியுமா.. ஒவ்வொரு சொத்துக்கும் 10-10 ஆண்டுகளாக வழக்கு நடக்கிறது. இங்கே, நோட்டீஸ் கொடுக்காமல் வீட்டை உடைத்துள்ளார்கள். மத்தியபிரதேச நில வருவாய் சட்டத்தின் 248 வது பிரிவின் கீழும், இப்படி ஒரே இரவில் வீட்டை இடிக்க முடியாது," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

எஹ்தேஷாம் ஹாஷ்மி மற்றும் மேதா பாட்கர் இருவரும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க கர்கோன் சென்றிருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்க எஹ்தேஷாம் ஹஷ்மி விரும்பினார்.

வழக்கறிஞர்களுக்கு பொதுவாக எந்தவிதமான தடையும் இல்லாதபோதும்கூட, நிர்வாகம் அவர்களிடம் செல்ல எங்களை அனுமதிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். நாங்கள் அவர்களை அடையவில்லை என்றால் அவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்று எஹ்தேஷாம் ஹாஷ்மி வினவினார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :