You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜேஎன்யூவில் மாணவர்கள் மோதல்: அசைவ உணவால் ஏற்பட்ட தகராறு - நடந்தது என்ன?
நேற்று, டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி பரிஷத்தை சேர்ந்த மாணவர்களுக்கும் தேசிய மாணவர் சங்கம் மற்றும் இடது சாரி மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்துள்ளது.
பல்கலைக் கழக வளாகத்தில் ராம நவமியை ஒட்டி நேற்று அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் காவேரி விடுதியில் அசைவ உணவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக இடது சாரி மாணவ அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பாரதிய வித்யார்தி பரிஷத்தைச் சேர்ந்த மாணவர்கள் ராம நவமியை ஒட்டி பூஜை மேற்கொள்ள விடாமல் இடதுசாரியினர் தாக்கியதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.
மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் சங்கத்தின் ட்விட்டர் பதிவு, ஏபிவிபி செயற்பாட்டாளர்களின் தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்ததாகக் கூறுகிறது.
அதே நேரத்தில், இடதுசாரி மாணவர் சங்கத்தின் தாக்குதலில் தங்கள் உறுப்பினரான ரவிராஜ் பலத்த காயம் அடைந்துள்ளதாக ஏபிவிபி தரப்பிலிருந்து ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர் ஐஷே கோஷ், ஜேஎன்யுவில் வசிக்கும் மாணவர்களை அசைவ உணவைச் சாப்பிட விடாமல் தடுக்க ஏபிவிபி மாணவர்கள் முயன்றதாகக் கூறி, ட்விட்டரில் வீடியோ வெளியிட்டார். விடுதி உணவகத்தின் செயலாளரையும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியதாக அவர் கூறியுள்ளார்.
"நாங்கள் எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வதற்கு அவர்கள் யார்?" என்றவர், "மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜே.என்.யு நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளைச் செய்யாதது ஏன்?" என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய மதுரிமா என்ற மாணவி கூறுகையில், ஏபிவிபியினர் விடுதியில் இறைச்சி விநியோகிப்பதை நிறுத்தி, அங்கிருந்த உணவக செயலாளரை அடித்ததாகக் கூறியுள்ளார்.
மறுபுறம், ஏபிவிபியுடன் தொடர்புடைய மாணவி திவ்யா, ராமநவமி வழிபாடு செய்தபோது ஏபிவிபியினர் இடதுசாரி மாணவர்களால் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ராம நவமி பண்டிகை மற்றும் இந்துக்களின் புனித நவராத்திரி கடைபிடிக்கப்பட்டது. நவராத்திரியின் போது, இந்துக்கள் ஒன்பது நாட்கள் விரதம் கடைப்பிடிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் அசைவ உணவு அல்லது பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட மாட்டார்கள்.
இந்த ஆண்டு, நவராத்திரியின்போது, தெற்கு டெல்லி மாநகராட்சி மற்றும் கிழக்கு டெல்லி நகர மேயர்கள் அசைவ உணவுக்குத் தடை விதித்து அறிவித்தனர். ஆனால், உணவுக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க மேயர்களுக்கு உரிமை இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
தேசிய தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், இந்தியாவின் உயர்கல்விக்கான சிறந்த மையமாகும். இப்பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மற்றும் வலதுசாரி சித்தாந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் கடந்த காலங்களில் பலமுறை மோதலில் ஈடுபட்டுள்ளனர். இம்முறை மாணவர் அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு ஒரு தரப்பு அசைவம் காரணம் என்றும் மற்றொரு தரப்பு பூஜை செய்ய அனுமதிக்காதது காரணம் என்றும் கூறுகின்றது.
பிபிசி இந்தி சேவைக்காக ஜேஎன்யு பல்கலைக்கழக வளாகத்திலிருந்து செய்தி வழங்கிய சந்தன் ஷர்மா இதுகுறித்து கூறுகையில், இரவு 10 மணி வரை பல்கலைக்கழகத்தின் சூழல் பதற்றமாகவே இருந்தது என்றும் காவல்துறையினரும் கூடியிருந்தனர் என்றும் தெரிவித்தார்.
"ஜேஎன்யூவின் கதவுகள் மூடப்பட்டுள்ளன. பதற்றமான சூழல் நிலவுகிறது. ஏபிவிபி மாணவர்கள் திரண்டுள்ளனர். ராமரை அவமதிப்பதை பல்கலைக்கழகத்தில் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்." என்றும் சந்தன் ஷர்மா தெரிவித்தார்.
மறுபுறம், பிபிசியிடம் பேசிய இடதுசாரி மாணவர்கள், ஏபிவிபியைச் சேர்ந்தவர்களால் தாங்கள் தாக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர். ஜேஎன்யு வளாகத்தில் இந்துத்துவ சித்தாந்தத்தை திணிக்க ஏபிவிபி முயல்வதாகவும் அவர்கள் கூறினார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்