மு.க.ஸ்டாலின் பேச்சு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போல ஊராட்சிதோறும் பல துறைகளுக்கான கிராம செயலகம் உருவாக்கப்படுகிறது

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் செங்காடு ஊராட்சியில், நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தாமோ. அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை, ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, செங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் செஞ்சுராணி கவசகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களிடம் முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது அங்குள்ள மக்களிடம், பயிர்க்கடன், குடிநீர், ரேஷன் பொருட்கள் முறையாக கிடைக்கின்றனவா? பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டது‌ குறித்து தெரியுமா? என்பது போன்ற பல கேள்விகளை மக்களிடம் அவர் கேட்டார்.

அவர் உரையின் முக்கிய அம்சங்கள்:

  • தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் பழம்பெரும் வரலாறு கொண்டவை என்பதை அனைவரும் அறிவோம். உத்திரமேரூர் கல்வெட்டு குறிப்புகள் இதற்கு சான்றாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
  • தற்போதைய ஆட்சி உள்ளாட்சிகள் மீது தனி கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருப்பதுபோல ஊராட்சி அளவில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து அவர்களின் சேவைகளை கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்க கிராம செயலகம் உருவாக்கப்படுகிறது.
  • மக்களின் பங்கேற்பை அதிகப்படுத்தி, மக்களுக்கு முழு அதிகாரத்தை ஏற்படுத்தும் வகையில் இனி ஆண்டுக்கு 6 முறை கிராமசபை கூட்டம் நடைபெறும்.
  • அனைத்து ஊராட்சி பிரதிநிதிகளுக்கும் 5 முதல் 10 மடங்குவரை அமர்வுப் படி உயர்த்தி வழங்கப்பட்டு அவர்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள 7.46 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள, 1.7 கோடி பெண்களின் பொருளாதார சுதந்திரத்தையும், நிதி மேலாண்மைத் திறனையும் உறுதிசெய்ய தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயலாற்றி கொண்டிருக்கிறது.
  • நீடித்த நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடைவதன் மூலமாக தமிழக ஊராட்சிகள் தேசிய அளவிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக விளங்கும்.
  • ஊராட்சிகளை ஊக்குவிக்க முன்மாதிரி கிராம விருது, உத்தமர் காந்தி விருது, அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக செயல்படக் கூடிய சிறந்த தொழில், வணிக நிறுவனங்களுக்கு விருது என, பல்வேறு விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துக் கொண்டிருக்கிறது.
  • மாநில அளவிலும், ஒன்றிய அளவிலும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இந்த திட்டங்களை எல்லாம் திறன்பட தேவைக்கேற்ப ஒருங்கிணைத்து கடைக்கோடி மக்களிடம் கொண்டுபோவது உள்ளாட்சி அமைப்புகளால்தான் முடியும்.
  • நூறு சதவீதம் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளுங்கட்சியினர் இல்லை. 5 சதவிகிதத்திற்கு மேல் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்களும் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எதிர்க்கட்சி இன்னொரு கட்சி என்றும் பாராமல் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த ஊராட்சிக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அவை அனைத்துமே செய்து கொடுக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கிராம அளவில் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் குறிக்கோளாக உள்ளது. அதன் மூலம் ஒவ்வொருவரின் வாழ்வும் வளம் பெற வேண்டும் என்ற நோக்கில்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :