You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்மலா சீதாராமன்: "கிரிப்டோகரன்சி பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கு சர்வதேச சட்டங்கள் வேண்டும்"
இன்றைய (ஏப்ரல் 20) நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கிரிப்டோகரன்சி பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கு சர்வதேச அளவில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சா்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சா்வதேச நிதியம் சாா்பில் 'அரசு, தனியாா் டிஜிட்டல் செலாவணி, தற்காலத்தில் தேவைப்படுவது எது?' என்ற உயா்நிலை விவாதக் கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய மத்திய நிதி அமைச்சா் நிர்மலா சீதாராமன், "தற்போதைய சூழலில் கிரிப்டோகரன்சிகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு சா்வதேச அளவில் சட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
கிரிப்டோகரன்சியை அரசுசாரா அமைப்புகள் சட்டவிரோதமாகத் தொடா்ந்து பயன்படுத்தி வந்தால், அதை ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் கடினமாகும். கிரிப்டோகரன்சியானது பல்வேறு நாடுகளுக்கிடையே பயன்படுத்தப்பட்டு வருவதால், தனியொரு நாடாக அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்த முடியாது.
ஒரு நாட்டின் தொழில்நுட்பம் சாா்ந்த சட்டம், மற்றொரு நாட்டுக்குப் பொருந்தாது. நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டும் கிரிப்டோகரன்சியின் தாக்கம் மாறுபடும். எனவே, இந்த விவகாரத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து, சா்வதேச அளவிலான ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
இல்லை என்றால் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி பண மோசடி சம்பவங்கள் அதிகமாக நிகழும். பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கவும் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
மேலும் கூறுகையில், கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ செலாவணி என இந்தியா ஏற்கவில்லை. கிரிப்டோகரன்சிகளின் உருவாக்கம், பயன்பாடு உள்ளிட்டவை குறித்து கண்காணிக்கும் நோக்கிலேயே அவற்றின் பயன்பாட்டுக்கு இந்தியாவில் வரி விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விதிப்பதன் வாயிலாக, அதை யாரெல்லாம் விற்கிறாா்கள், யாரெல்லாம் வாங்குகிறாா்கள் என்பது தொடா்பாக அறிந்து கொள்ள முடியும்.
கிரிப்டோகரன்சிகளுக்கு சட்டபூா்வ அனுமதி வழங்கும் திட்டம் ஏதுமில்லை. நாட்டின் மத்திய வங்கி மூலமாக வெளியிடப்படும் டிஜிட்டல் கரன்சிகளை வெவ்வேறு நாடுகளுக்கிடையேயான பணப் பரிவா்த்தனைக்கு உகந்ததாக இருக்கும்.
இந்திய ரிசா்வ் வங்கி சாா்பில் நடப்பாண்டு இறுதிக்குள் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும்", என்று அவா் தெரிவித்ததாக தினமணி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கிய குடியரசுத் தலைவர்
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளாதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ்ஆட்சியின்போது கடந்த 1920-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை மசோதா கொண்டு வரப்பட்டது. கடந்த 102 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்து இந்திய குற்றவியல் நடைமுறை மசோதாவை மத்திய அரசு வரையறுத்தது. கடந்த மார்ச் இறுதியில் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் ஆட்சேபத்தை மீறி மக்களவையில் கடந்த 4ஆம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த 6ஆம் தேதியும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்திய குற்றவியல் நடைமுறை சட்ட மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
இதற்கு நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து புதிய சட்டம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்டது
இதன்படி எந்தவொரு வழக்கில் கைதானாலும் அவரிடம் இருந்து கை, கால் விரல் ரேகைகள் உள்ளிட்ட உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். அதாவது ரத்தம், தலைமுடி, சளி, எச்சில் உள்ளிட்ட மாதிரிகளை சேகரிக்கலாம்.
மேலும் குற்றவாளியின் புகைப்படம், கருவிழி, கையெழுத்து, பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவையும் பதிவு செய்யப்படும். இதற்கான முழு அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட விவரங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை மின்னணு வடிவத்தில் பாதுகாக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்தவர்கள், 7 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்களின் உடல் பாகங்கள், உயிரியல் அடையாளங்களை வலுக்கட்டாயமாக பெற புதிய சட்டம் வகை செய்கிறது.
தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்தும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்க முடியும். மேலும் நீதிபதியின் உத்தரவின்பேரில் கைது செய்யப்படாத நபரிடம் இருந்தும் உயிரியல் மாதிரிகளை சேகரிக்கலாம் என இந்து தமிழ் திசை நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கொரோன நோய்த்தொற்றின் பரவல் அதிகரித்ததை அடுத்து, நோய் தொற்றின் பரவலைத் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும்,
முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரபிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய நான்று மாநிலங்கள் மற்றும் டெல்லி யூனியன் பிரதேச அரசுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அந்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்