You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம்: நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் வழக்குகள் – தீர்வு என்ன?
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 5,916 வழக்குகள் நீதிமன்றத்திலும் 570 வழக்குகள் காவல்துறை விசாரணையிலும் நிலுவையில் உள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ) மூலம் தெரிய வந்துள்ளது. குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்கானிப்பு குழு ஆர்.டி.ஐ சட்டம் மூலம் கடந்த நவம்பர் மாதம் வரை இந்த தகவல்களைப் பெற்று தொகுத்துள்ளனர்.
மேலும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளில் 11% வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படுகின்றன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 5,916 வழக்குகளில் அதிகபட்சமாக 835 வழக்குகள் திருநெல்வேலி சிறப்பு நீதிமன்றத்திலும் அதற்கு அடுத்தபடியாக 678 வழக்குகள் மதுரை சிறப்பு நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன.
எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மாநில அளவில் முதல்வர் தலைமையில் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும்.
மாவட்ட அளவில் ஆட்சித் தலைவர் தலைமையிலும் கோட்ட அளவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டும்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு மாநில விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாவது கூட்டம் கடந்த ஏப்ரல் 12-ம் தேதியன்று நடைபெற்றது.
இது தொடர்பாக ட்வீட் செய்திருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "பத்தாண்டு அதிமுக ஆட்சி பாராமுகம் காட்டிய, SC/ST விழிப்புணர்வு & கண்காணிப்புக் கூட்டத்தை ஆட்சிக்கு வந்த ஒராண்டுக்குள் 2வது முறை நடத்தியுள்ளோம். முதல்கூட்டத்தில் உறுப்பினர்கள் வைத்த கோரிக்கைகள் 85% நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்றைய கூட்டத்தில் கோரியவற்றையும் விரைந்து நிறைவேற்றுவோம்" என்றிருந்தார்.
நடத்தப்படாத கண்காணிப்பு குழு கூட்டங்கள்
2021க்கு முன்பாக மாநில விழிப்புணர்வு மற்றும் கண்கானிப்பு குழு கூட்டம் 30 வருடங்களில் 60 முறை நடந்திருக்க வேண்டிய நிலையில் மூன்று முறை மட்டுமே நடந்துள்ளது. அதுவும் இரண்டு முறை நீதிமன்றத்தின் அழுத்தத்தினாலே நடத்தப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் எந்த மாவட்டத்திலும் கண்காணிப்பு குழு கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை என்பதும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ஒரு ஆண்டில் நான்கு கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டிய நிலையில் பல மாவட்டங்களில் இரண்டு கூட்டங்களும் சில மாவட்டங்களில் ஒரு கூட்டமும் சில மாவட்டங்களில் கூட்டங்களே நடத்தப்படாமலும் இருந்துள்ளன.
இழப்பீடு நிலுவை, நீதிமன்றங்களின் போதாமை
மேலும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடும் முழுமையாக வழங்கப்படாததும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் 2021 வரை இந்த சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு ரூ.5.71 கோடி நிலுவையில் உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்டங்களில் தான் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.
கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருப்பூர், திருவாரூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இவை போக மீதமுள்ள 16 மாவட்டங்களில் செசன்ஸ் நீதிமன்றங்களே எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரித்து வருகின்றன.
இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்கானிப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழரசி, "எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகளை கையாள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் திறம்பட பணியாற்றாமல் இருப்பதே வழக்குகள் நீதிமன்றத்தில் தேக்கமடைவதற்கு காரணம்" என்றார்.
"இது தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் விசாரித்தால் ஒரு துறை மற்றொரு துறையினர் மீது பழி சுமத்துகின்றனர். இதனால் வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்படும் விகிதம் குறைவாக உள்ளது. விசாரணை நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டால் மேல்முறையீட்டுக்கும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. எஸ்.சி/எஸ்.டி வழக்குகளை துணை கண்கானிப்பாளர் அல்லது அதற்கும் மேல் அந்தஸ்தில் உள்ள அதிகாரி தான் விசாரிக்க முடியும். ஆனால், அவர்கள் பதிவு செய்யும் புகார்களும் பல நேரங்களில் முறையாக இல்லாமல் தேக்கமடைந்துவிடுகின்றன. பல வழக்குகளில் உயர் அதிகாரிகளும் நேரடியாக களத்திற்குச் செல்வதில்லை"
"2019-ம் ஆண்டு திருநெல்வேலியில் பணியாற்றிய அரசு வழக்கறிஞர் பகத்சிங் ஒரு வழக்கில் மட்டுமே தண்டனை பெற்றுத்தந்தார் என்பதனால் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பின்னர் திருநெல்வேலியில் ராஜபிரபாகரன் என்பவர் சிறப்பு அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்ற பிறகு 64 சதவிகித வன்கொடுமை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டன. வழக்கறிஞர்களின் செயல்பாட்டை யாரும் மதிப்பிடுவதில்லை.
எனவே, சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் முறையாக பணி செய்வதை உறுதி செய்து கண்கானித்தால் மட்டுமே இந்த சட்டம் முறையாக அமல்படுத்தப்படும். தமிழக அரசு ஒரு வருடத்தில் இரண்டு முறை மாநில அளவிலான கண்கானிப்பு கூட்டத்தை நடத்தியிருப்பது வரவேற்கத்தக்கது. இதை தொடர்வதோடு மாவட்ட, கோட்ட அளவிலும் முறையாக நடத்த வேண்டும்" என்றார்.
'வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்'
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய எவிடென்ஸ் கதிர், "எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டாலும் அவை எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் பிரிவுகளில் இல்லாமல் ஐ.பி.சி பிரிவுகளில் தான் வழங்கப்படுகின்றன. விசாரணைக்கு தேவைப்படுகின்ற அளவில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்துக் கொள்ளலாம் எனச் சட்டம் சொல்கிறது.
தமிழக அரசு ஒரு ஆண்டுக்குள் இரண்டு முறை மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்கானிப்பு கூட்டத்தை நடத்தியிருப்பதும் அந்த குழுவில் அதிக அளவிலான உறுப்பினர்களை நியமித்திருப்பதும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த முறை தொடர வேண்டும். நீதிமன்றங்களிலும் காவல்துறையிலும் தேங்கியிருக்கும் வழக்குகளை விரைந்து தீர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.
சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் ப.பா.மோகன், "எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக அமலில் இல்லாததற்கு வழக்கறிஞர், காவல்துறை என யாராவது ஒருவரை மட்டும் குற்றம்சுமத்திவிட முடியாது. இதற்கு அனைத்து தரப்பும் தான் காரணம் என 2021-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
"விசாரணை அமைப்புகள் வழக்குகளை முறையாக விசாரிக்காததே குற்றம் நிரூபிக்கப்படும் விகிதம் குறைவாக உள்ளதாக உச்ச நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பு தெரிவித்துள்ளது. காவல்துறை, வழக்கறிஞர்கள் தொடங்கி சமயங்களில் நீதிபதிகள் கூட சாதிய மனநிலையில் தான் உள்ளனர். அதுவும் இந்த சட்டம் முறையாக அமலாகாததற்கு முக்கிய காரணம்" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்