யுக்ரேன் போரிலிருந்து தப்பித்து இந்திய காதலனை கரம்பிடித்த பெண் - நெகிழ்ச்சியான காதல் கதை

பட மூலாதாரம், ANUBHAV BHASIN
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ்
கடந்த மாதம் யுக்ரேன் தலைநகர் கீயவில் குண்டுமழை பொழிந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பில் தான் வாடகைக்கு இருந்த வீட்டைப் பூட்டிவிட்டு, இரண்டே டி ஷர்ட்டுகள் மற்றும் திருமணத்திற்காக தன் பாட்டி அன்பளிப்பாக வழங்கிய காபி மெஷினை மட்டும் எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு தப்பித்து வந்தார் அனா ஹொரோடெட்ஸ்கா.
ஐடி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த 30 வயதான அனா, மார்ச் 17 அன்று டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தார். அப்போது, ஓராண்டாக அவர் டேட்டிங் செய்துவந்த 33 வயதான வழக்கறிஞர் அனுபவ் பாசின் அனாவை வரவேற்றார்.
விமான நிலையத்திலேயே டிரம்ஸ் கலைஞர்கள் கொண்டாட்ட இசையை இசைக்க, அனுபவ் தரையில் ஒரு காலில் முட்டி போட்டு, அனாவின் விரலில் மோதிரத்தை அணிவித்து தன் காதலை வெளிப்படுத்தினார். அவருடைய காதலுக்கு அனாவும் சம்மதித்தார்.
இந்திய தலைநகர் டெல்லியில் நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொள்ள அவர்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டனர். இத்திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க இம்மாத இறுதியில் அவர்கள் நீதிமன்றத்தில் பதிவுசெய்ய உள்ளனர். "அனுபவ் பாசினை திருமணம் செய்வதே" தான் இந்தியாவுக்கு வந்ததற்கான நோக்கமாக தன் ஓராண்டுகால விசாவில் குறிப்பிட்டுள்ளார் அனா.
கண்டங்களை கடந்த காதல்
2019-ம் ஆண்டில் இந்தியாவுக்கு அனா தனியாக பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், இருவரும் எதேச்சையாக பார் ஒன்றில் சந்தித்தனர். பின்னர் தங்கள் எண்களை பரிமாற்றிக் கொண்டனர், இன்ஸ்டாகிராமில் ஒருவரையொருவர் பின்தொடர்ந்தனர், அதன்பின் நடந்தவை எல்லாம் அவர்கள் கூறுவதுபோல வரலாறு.
புவியியல் ரீதியாக பிரிந்திருக்கும் வெவ்வேறு கண்டங்களில், தொற்றுநோய் தனிமைப்படுத்துதல் விதிகள் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் இருவரும் சந்திப்பது தடைபட்டது எனினும், அவர்களின் உறவு காதலாக வடிவெடுத்தது. அனைத்திற்கும் மேலாக இறுதியில் அனாவின் தாய்நாடான யுக்ரேனில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியது.
"2019 ஆம் ஆண்டின் இறுதியில் நாங்கள் இருவரும் நிறைய பேசினோம்," என்கிறார் அனுபவ்.
காதல் மலர்ந்தது எப்படி?
2020, மார்ச் மாதத்தில் தன் தோழியுடன் அனா மீண்டும் இந்தியா வந்தார். அவர்கள் இருவரையும் சாலை வழியாக ஆக்ராவில் காதலின் நினைவுச்சின்னம் தாஜ்மஹால் மற்றும் பாலைவன பிரதேசமான ராஜஸ்தான் மாநிலத்திற்கும் அழைத்துச் சென்றார் அனுபவ்.

பட மூலாதாரம், ANUBHAV BHASIN
அந்த தருணத்தில், இந்தியாவில் கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டபோது, அனாவையும், அவருடைய தோழியையும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் தங்குமாறு அனுபவ் அழைத்தார்.
"இந்த சமயங்களில்தான் நாங்கள் இருவரும் மிகவும் நெருக்கமானோம். எங்கள் இருவருக்குமே ஒருவரையொருவர் பிடித்திருக்கிறது என்பதை உணர்ந்தோம். இது சிறிது காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் ரொமாண்டிக் உறவு அல்ல என்பதை இப்போது உணர்ந்திருக்கிறோம். அவள் கீயவுக்கு சென்ற பின்னர் தினமும் வீடியோ கால் வாயிலாக இருவரும் தொடர்பில் இருந்தோம்" என்கிறார் அனுபவ்.
அதன்பின் இருவரும் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் துபாயில் சந்தித்தனர். "இந்த உறவை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் வழிகளை தேட வேண்டும் என்பதை உணர்ந்த தருணம்தான், எங்கள் காதலில் மிக முக்கியமானது என நினைக்கிறேன்" என கூறுகிறார் அனுபவ்.
அதன்பிறகு, எல்லாம் வேகமாக நிகழ்ந்தன. ஆகஸ்ட் மாதம் கீயவில் அனாவை சந்தித்தார் அனுபவ். பின், டிசம்பர் மாதத்தில் அனா மீண்டும் இந்தியா வந்தார்.
"என்னுடைய இந்திய பயணத்தின் கடைசி நாளில், இருவரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளுங்கள் என அனுபவின் அம்மா கூறினார். நாங்கள் திருமணம் குறித்து சில சமயங்களில் பேசியிருக்கிறோம். ஆனால், இவ்வளவு சீக்கிரமாக திருமண பேச்சு வந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஆனால், அனுபவ் அம்மா கூறியதுபோல் ஏன் அவ்வாறு திருமணம் செய்து கொள்ளக்கூடாது என நினைத்தேன்" என்கிறார் அனா.
அனுபவ் இந்து மதத்தைச் சேர்ந்தவர் - அனா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். எனவே, சிறப்பு திருமண சட்டத்தின்படி அவர்கள் தங்களின் திருமணத்தை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கான நடைமுறைகளை முடிக்க ஒரு மாதத்திற்கு மேலாகும் என்கிறார் அனுபவ்.
எனவே, இந்த நடைமுறைகளை தொடங்குவதற்காக, அனா மார்ச் மாத இறுதியில் இந்தியா வர வேண்டும் எனவும், திருமணத்திற்கு பின் சில மாதங்கள் இந்தியாவில் இருப்பதற்கும் இருவரும் முடிவெடுத்தனர்.
போருக்கு இடையில் காதல்
ஆனால், அப்போதுதான் போர் தொடங்கியது.
"ராஜீயப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், போர் தடுத்து நிறுத்தப்படும் என இப்போதும் எண்ணுகிறோம்," என்கிறார் அனா. "எல்லைகளில் மட்டுமே தாக்குதல் நிகழ்த்தப்படும், கீயவ் நகரம் பாதுகாப்பானது என எங்களில் பெரும்பாலானோர் நம்பினோம்" என்றார்.
"ஆனால், பிப்ரவரி 24 ஆம் தேதி குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தேன். "நான் கனவு காண்கிறேனா?" என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு அனுபவ் மற்றும் மற்றவர்களிடமிருந்து வந்த செய்திகள் மூலமாகவே நாங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்," என அனா கூறுகிறார்.
அனாவுக்கு தெரிந்த பலரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொள்ள தொடங்கினர். மேலும், அனாவையும் அவ்வாறே செய்யுமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஷெல் தாக்குதல் தீவிரமடைந்தபோது, அனா தன் அம்மா மற்றும் செல்லநாயுடன் பதுங்கு குழிக்கு சென்றார்.

பட மூலாதாரம், ANNA HORODETSKA
"அங்கு மக்கள் நிறைந்திருந்தனர். ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. நாங்கள் எங்கும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால், எனக்கு வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டும் போல் இருந்தது. மேலும், செல்ல நாயை நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்த நகரம் முழுவதும் புகை நெடி நிரம்பியிருந்தது, வானம் சிவப்பாக காட்சியளித்தது," என்றார் அனா.
யுக்ரேனில் ரஷ்யப்படைகள் குண்டுவீசி தாக்குதலை தொடங்கிய சில நாட்களுக்கு முன்னதாகவே, போர் தொடங்கிவிடும் என்பதை உணர்ந்த அனுபவ், அங்கிருந்து வெளியேறுமாறு அனாவிடம் கூறியுள்ளார். ஆனால், தன் செல்ல நாய் இல்லாமல் தான் வெளியேறுவதில்லை என்பதில் அனா பிடிவாதமாக இருந்தார்.
பிப்ரவரி 26 காலை, அனா அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தபோது, அனுபவ் அவருடைய மனதை திசைதிருப்ப முயற்சித்தார்.
"அதன்பின் நிகழ்ந்தவை எல்லாம் மிக மோசமானவை," என்கிறார் அனுபவ். "தொடர்ச்சியாக ஷெல் தாக்குதல் நடைபெற்றது. ரயில் நிலையம் மிக தொலைவில் அமைந்திருந்தது. அவர்களை அழைத்துச் செல்ல எந்த டாக்ஸியும் வரவில்லை. இந்த சமயத்தில் அவர் வெளியே சாலைக்கு சென்றால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ என நான் பயந்தேன். எனவே, பதுங்கு குழியில் இருப்பதே பாதுகாப்பானது என நான் அவளிடம் கூறினேன்," என்றார்.
அடுத்த நாள் காலையில், அனாவுக்கு எப்படியோ டாக்ஸி கிடைத்தது, அதன்மூலம் அவர் ரயில் நிலையத்தை அடைந்தார். அவருடைய அம்மாவையும் செல்ல நாயையும், தன் பாட்டியின் கிராமத்திற்கு ரயில் ஏற்றிவிட்டு, பின், யுக்ரேனின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள லூவிவ் நகருக்கு செல்ல அவர் மற்றொரு ரயிலில் ஏறினார்.
யுக்ரேனுக்கு வெளியே முதலில் ஸ்லொவாக்கியாவை அடைந்த அனா, பின் அங்கிருந்து போலாந்து சென்றார். இந்திய தூதரகம் மூலம் அனாவுக்கு அனுபவ் விசா ஏற்பாடு செய்துவந்த நிலையில், போலாந்திலேயே அனா இரண்டு வாரங்கள் காத்திருந்தார். பின்னர், போலாந்திலிருந்து பின்லாந்தில் உள்ள ஹெல்சின்கிக்கு சென்றார். அங்கிருந்து டெல்லிக்கு விமானம் ஏறினார்.
ஹாலிவுட் காதல் தருணம்

பட மூலாதாரம், ANUBHAV BHASIN
"விமானத்தில் நான் ஒருநொடி கூட உறங்கவில்லை. நான் மன அழுத்தத்தில் இருந்தேன். சண்டை நடக்கும் பகுதிக்கு நாங்கள் பயணிக்கவில்லை என்றபோதிலும், நாங்கள் பயணித்த விமானம் மோசமான ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகி, நாங்கள் வெடித்து சிதறிவிடுவோம் என பயந்தேன்," என்றார் அனா.
மார்ச் 17 அன்று டெல்லி வந்திறங்கிய அனாவுக்கு, தான் சிறிது தாமதமாக வருவதாக ஒரு செய்தி அனுபவிடமிருந்து வந்தது.
"நான் மிகவும் எரிச்சல் அடைந்தேன்," என்றார் அனா. "நான் களைப்பாக இருந்தேன். வீட்டுக்கு சென்று உறங்க வேண்டும் என நினைத்தேன். ஆனால் நான் வெளியே சென்றபோது, அங்கு அனுபவ் இசைக்கருவிகள் மற்றும் பலூன்களுடன் நின்றிருந்தார்," என்கிறார் அனா.
அனுபவின் நண்பர்கள் பலரும் அனாவுக்கு உற்சாகமூட்டினர். இருவரையும் முன்பின் அறியாதவர்கள் கூட கைதட்டி மகிழ்ந்தனர், ஹாலிவுட் காதல் காட்சி போன்ற அந்த தருணத்தை செல்போனில் வீடியோ எடுத்தனர்.
"இதனை நான் எதிர்பார்க்கவில்லை, ஏனெனில், அனுபவ் மிகவும் யதார்த்தமான நபர். ஆனால், நிச்சயமாக அதுவொரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது," என்கிறார் அனா.
இப்போது இந்த ஜோடி திருமணமாகி, புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளது. போர் முடிந்த பின்னர் மீண்டும் கீயவுக்கு சென்று "என் உடைமைகளையும் செல்ல நாயையும் எடுத்துக்கொண்டு வருவேன்" என்றார் அனா.
"ரியல் ஹீரோ காபி மெஷின் தான்"
நெகிழ்ச்சியான அவர்களின் காதல் கதையில் காபி மெஷின் தான் "ரியல் ஹீரோ" என்கின்றனர்.
"சில மாதங்களுக்கு முன் நான் திருமணம் செய்துகொள்வது குறித்து என் பாட்டியிடம் கூறினேன். அவர் அன்பளிப்பு வாங்கிக்கொள்ள கொஞ்சம் பணம் கொடுத்தார்," என கூறுகிறார் அனா. "அனுபவ்வுக்கு எஸ்பிரஸோ (காபி கொட்டைகளை அரைத்து ஸ்ட்ராங்காக தயாரிக்கப்படும் கருங்காபி வகை) பிடிக்கும் என்பதால், அப்பணத்தில் காபி மெஷின் வாங்கினேன். கீயவை விட்டு நான் வெளியேறியபோது, அதை நான் என்னுடன் எடுத்து வந்தேன். இங்கு வேறொன்று வாங்கிக்கொள்ளலாம் என அனுபவ் கூறினார். ஆனால், நான் கீயவில் வீட்டுக்கு விரைவில் செல்ல முடியாவிட்டால் என்ன நடக்கும் என என் மண்டையில் ஓடிக்கொண்டிருந்தது?" என்கிறார், அனா.
"அனா ஒரு தேர்ந்த அழகுக்கலை நிபுணர். ஆனால், மிகவும் செலவு பிடிக்கும் தன் மேக்-அப் பொருட்களை இந்த காபி மெஷினை கொண்டு வருவதற்காக அங்கேயே விட்டு வந்துள்ளார். எங்கள் காதல் கதையின் ரியல் ஹீரோ இந்த காபி மெஷின் தான்" என்கிறார் அனுபவ்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












